Tuesday, December 18, 2012

தமிழக மீனவர்கள் சித்ரவதைக்கு நிரந்தர முடிவு தேவை!


  • யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்!
  • தமிழக மீனவர்கள் சித்ரவதைக்கு நிரந்தர முடிவு தேவை!
  • தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்
  • நாடாளுமன்றத்தில் ஒன்று சேர்ந்து வற்புறுத்துக!


காவிரி நடுவர் நீதிமன்றம் ஆணையை கெசட் பதிவு செய்வது யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் தொடர் சித்ரவதைக்கு முடிவு - இது போன்ற தமிழக முக்கிய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கிவீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு (Final Award) 2007இல் தரப்பட்டது; ஆனால் இதுவரை அத்தீர்ப்பு, மத்திய அரசின் பதிவிதழில் (மத்திய கெசட்) வெளியிடப்படவே இல்லை - மத்தியப் பதிவிதழில் அது வெளியிடப்பட்டால் தான், அது உடனடியாக, முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டிய சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாக மாறி, தமிழ்நாட்டிற்கு நியாயம் கிடைக்கும்; காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு ஒரு பெரும் முடிவான நிலையையும் ஏற்படுத்தும்; (அடாவடி வம்பு, வல்லடி வழக்குகளில் ஈடுபடும்  மனிதநேயம் தெரியாத, கர்நாடக வாக்கு வங்கி அரசியல்காரர்கள் முன்பு இதுவும் மதிக்கப்படக் கூடியதாக இருக்குமா என்பது கேள்விக் குறிதான்)
5 ஆண்டுகளாக கெசட் செய்யப்படவில்லை
இதை கர்நாடகம் எதிர்ப்பது எதிர்பாராததல்ல. நடுவர் மன்றம் நியமிக்கப்பட்ட நாள் முதலே, இதனை எதிர்த்து அவசரச் சட்டங்களையும், அழி வழக்குகளையும் போட்டு ஏதோ காவிரி நதியே கர்நாடகத்தின் தனி உடைமைபோல் கருதி அடாவடித்தனம் செய்து வந்துள்ளது; வருகிறது.
இதுவரை அய்ந்து ஆண்டுகள் (2007-2012) வரை கெசட் செய்யப்படவில்லை என்பது ஏன்? மத்திய அரசே இதனைக் கண்டும் காணாமலும், கர்நாடகத்திற்கும் ஒரு கண் ஜாடை என்பதுபோல் நடந்து கொண்டது; இது நியாய விரோதம், சட்ட விரோதம் ஆகும். தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை மத்திய அரசு அறியாதா?
இதை நாம் (திராவிடர் கழகம்) கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வற்புறுத்தி வந்தோம்.
இன்று விவசாயிகளுக்காக கசிந்துருகிக் கண்ணீர் விடும் பல அரசியல் கட்சிகள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படியோ இதில் மெத்தனமாகவே இருந்தனர் என்பது வேதனைக்குரியது.
என்றாலும் இப்போதாவது, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டு, (காவிரி நதிநீர் ஆணையம்கூட உச்சநீதிமன்றத்தின் கடும் கோபத்திற்குப்பின் தான் பிரதமர் தலைமையில் கூடியது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்) இதுபற்றி சாதகமான பதிலாக, விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கருநாடக அரசு தனது வழமையான கடும் எதிர்ப்பை பிரதமரைச் சந்தித்தே தெரிவித்து (அரசியல்) செய்ய முடிவு செய்துள்ளது!
அரசியல் சட்டப்படி இதனைத் தடுக்க முடியாதே; ஏற்கெனவே 5 ஆண்டுகள் தவறியதே ஒரு குற்றம் போன்றது தான்!
தலைவர் இல்லாத காவிரி நடுவர் மன்றம்
அது மட்டுமல்ல கடந்த பல ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாத நடுவர் மன்றமாகத் தொடருவதும் சரியானதல்ல.
உடனடியாக புதிய தலைவர் ஒருவரை அதற்கு நியமிக்கவும் நமது தமிழ்நாட்டு எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இன்றி பிரதமரைச் சந்திக்கவும், நாடாளுமன்றத்தில் இதுபற்றி பிரச்சினை எழுப்பி தீர்வு காணவும் மற்ற மாநிலத்தவர், உலகத்தவருக்கு, தமிழ் நாட்டின் நியாயத்தை விளக்குவதற்குமான வாய்ப்பை - நாடாளுமன்றம் நடைபெறும் இவ்வேளையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாழ்ப் பல்கலைக் கழக  மாணவர்கள் சிறையில்...
இதுபோல ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகவும், மனித உரிமை மீட்டெடுப்புக்காகவும் குரல் கொடுக்கும் அத்தணை கட்சிகளும், யாழ்ப்பாணத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு அதன் தூதுவர் மூலமோ அல்லது வெளி உறவுத் துறை மூலமோ உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்;
இதுபோன்ற பிரச்சினைகளிலாவது, இலங்கை அரசின், கொடுமைகளை - மீனவர்கள் கைது, சித்ரவதை சிறைச் சாலை, வலைகளில் உள்ள மீன்களைப் பறித்துச் செல்லும் அக்கிரமங்கள் இவற்றைப்பற்றிப் பேசி ஒருநிரந்தரத் தீர்வை அவசியம் ஏற்படுத்தியாக வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையில் அவசியம் தக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசரம்! அவசரம்!! அவசரம்!!!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
17.12.2012


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...