என் வாழ்வின் சிறந்த தருணம் எது என யாரேனும் என்னிடம் கேட்டால் விகடன் வார இதழில் நாயகன் தொடருக்காக பெரியார் அவர்-களது வாழ்க்கை வரலாற்றை எழுதிய காலங்கள்-தான் என்று சொல்வேன். காரணம் அத்தொடருக்காக நான் சந்தித்த எண்ணற்ற பெருமகனார்கள். பெரியார் குறித்து ஒவ்வொருவரையும் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது அபரிதமானதொரு ஆற்றல் என்னுள் நிரம்பித் தளும்புவதை உணர்ந்திருக்கிறேன். இதற்குக் காரணம், பெரியார் எனும் மகத்தான மனிதர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உயர்ந்த எண்ணங்களால் உருவாக்கம் கொண்ட அம்மனிதரோடு வாழவும், பேசவும், நெருங்கிப் பழகவும் வாய்ப்புப் பெற்றவர்கள் அவரைப்பற்றிப் பேச நேரும்போது அவர்களும் உயர்ந்த தன்மையை என்னிடம் வெளிப்படுத்தினார்கள். அப்படி நான் சந்தித்தவர்களுள் என் உணர்ச்சிகள் அலைமோத கண்ணிலிருந்து நீர் கன்னத்தில் சேருமளவிற்கு, தன் பண்பால் என்னை வியக்க வைத்தவர் அய்யா வீரமணி அவர்கள்.
நாயகன் தொடரில் பெரியார்பற்றி எழுத நான் முடிவெடுத்த உடனேயே என் மனக்-கண்ணில் தோன்றிய முதல் மனிதர் அய்யா வீரமணி அவர்கள்தான். நேரில் சந்திக்க திடலுக்கும் சென்றிருந்தேன். பத்திரிகைகளிலும், மேடைகளிலும் சிறுவயது தொட்டே பார்த்துப் பழகிய முகம் என்றாலும் அவரது இருப்பு மிரட்சியை உண்டாக்கவில்லை. மாறாக மிக இலகுவாகவே உணர முடிந்தது. கருப்புச்-சட்டைக்குள் ஒரு கைக்குழந்தை என சொல்லத்-தகுந்த மிக எளிமையான முகம். விகடனில் அடுத்து நான் எழுதவிருக்கும் நாயகன் தந்தை பெரியார் என்று தெரிந்ததும் ஒரு பக்கம் ஆச்சரியம். இன்னொரு பக்கம் பல அர்த்தங்கள் கொண்ட புன்னகை. பிறகு, விகடன் அதிபர் எஸ்.எஸ். வாசனுக்கும், தந்தை பெரியாருக்கும் இடையிலான உறவை நினைவு கூர்ந்தவர் தொடர் நிமித்தமாக இன்னும் எத்தனை பேரைப் பார்க்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என ஒரு கேள்வியைக் கேட்டார்.
நான், என் பத்துப் பேர் கொண்ட பட்டியலைச் சொன்னேன். அனைவரையும் சந்தித்து தகவல்கள் சேகரித்தபின் கடைசியாக என்னிடம் வாருங்கள். அது உங்களுக்கும், தொடருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். எனக்குள் சிறு ஏமாற்றம், மற்றபடி திடல் நூலகத்தில் என் ஆய்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு கவிஞர் கலி. பூங்குன்றன் அய்யாவிடம், தோழர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கும் என் முன்பே அன்புக் கட்டளை ஒன்றையும் விடுத்தார்.
நான் குழப்பத்துடன் வெளிவந்தேன். அவர் சொன்னதன் பின்னாலிருந்த மறைபொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. பிறகு, நானும் என் பட்டியலில் இருந்த பலரையும் சந்தித்து தகவல் சேகரித்தபின் பட்டியலின் கடைசி நபராக அவரைச் சந்திக்க இரண்டாம் முறையாக திடலுக்குள் நுழைந்தேன். இப்போது என்னுள் அநேக மாற்றம். உள்ளும் புறமுமாக பெரியாரின் உருவம் எனக்குள் சாரமாக இறங்கியிருந்தது. திடலின் கட்டிடங்களும், அங்கிருந்த நினைவுச் சின்னமும் எனக்குள் அம்மாமனிதனின் காலங்களை நினைவில் சுழல வைத்தது. கதவு திறந்து இரண்டாவது முறையாக அவர் அறைக்குள் நுழைந்தேன்.
பெரியாரைப்பற்றி என்னவெல்லாம் தெரிந்துகொண்டீர்கள் எனக் கேட்டார். நானும் எனக்குள் சேகரித்திருந்த பெரியாரின் உருவத்தைக் கோடிட்டுக் காட்டினேன். பிறகு, ஒரு புன்னகையுடன் அவர் பெரியாரின் பால்யகாலம் குறித்து என்ன சேகரித்திருக்கிறீர்கள் எனக் கேட்டார். எனது நினைவறைகளில் நான் அவசரமாகத் தேடினேன். அங்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிப்படைத் தகவல்கள் தவிர வேறெதுவுமில்லை. பிறகு, அவரே பேசத் துவங்கினார். அவர் பெரியாரின் பால்யகாலம் குறித்தும், வீட்டைவிட்டுப் பிரிந்து ஒரு விதவைத் தாயாரிடம் அவர் வாழ்ந்த காலம் குறித்தும் விவரிக்கத் துவங்கினார். அதற்கு ஆதாரமாக, பெரியாரே கைப்பட எழுதிய சிறு கட்டுரை ஒன்றையும் தேடி எடுத்து என் கைவரச் செய்தார்.
உண்மையில் அத்தகவல்தான் பெரியாரின் ஒட்டுமொத்த அரசியல் செயல்பாட்டுக்கும் அடிப்படையை, மனோதத்துவ ரீதியான ஒரு ஆய்வை நான் தொடரில் மேற்கொள்ள அடித்தளமிட்டுக் கொடுத்தது. பெரியார் மீது அதுநாள் வரை காரணமில்லாமல் வெறுப்புணர்ச்சி கொண்டிருந்த பலரும் தங்களது பார்வைகளை மாற்றிக்கொண்டு பெரியார் குறித்து ஆர்வத்துடன் படிக்கக் காரணமாகவும் அது இருந்தது. பல பிராமணர்களின் வீடுகளுக்கு நட்பு நிமித்தமாக நான் செல்ல நேரிட்டபோது பெரியாரை நாங்கள் இப்போதுதான் புரிந்து கொண்டோம் என வயதான பெண்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து பேசுவதற்கும் அது காரணம் என்பதை அவர்களிடமே பேசித் தெரிந்து கொண்டேன்.
இதுமட்டுமல்லாமல் பெரியாரிடம் வியாபாரமும், குடும்பமும் உள்ளிட்ட முழுப்பொறுப்-பையும் அவரது தந்தை பெரியாருக்குக் கொடுக்கவும், அதே சமயம் பெரியாரின் அண்ணன் எவ்வளவு செலவாளியாக இருந்தார் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்ச்சியையும் கூறி கட்டுரை சிறக்க வழிவகை செய்தார்.
இத்தொடருக்கு (நாயகன் - பெரியார்) வாசகர்-களிடம் கிடைத்த அபார வரவேற்பு காரணமாக விகடன் பதிப்பகத்தார் அதனைச் சுடச்சுடத் தனி நூலாகவும் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தனர். அந்நூலின் பிரதிகளைக் கையிலெடுத்துக்-கொண்டு முதல் காரியமாக நான் திடலுக்கு விரைந்தேன்.
தொடர் வெளியான ஒவ்வொரு வாரமும் முதல்வர் கலைஞர் அவர்கள் தன்னோடு தொடர்-குறித்து தொலைபேசியில் உரையாடியதாகவும், தொடர் சிறப்பாக வந்து கொண்டிருப்பதாகக் கூறியதாகவும் என்னுடன் அம்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நான் கையில் கொண்டு-வந்த எனது நாயகன் பெரியார் நூலை அவரிடம் நீட்டினேன். புத்தகத்தைப் பதட்டத்துடன் புரட்டிக் கொண்டிருந்த அவர் சட்டென உணர்ச்சிவசப்பட்டவராக எழுந்து நின்றார். ஒரு நிமிடம்... நானும் அவரது முகத்தைப் பார்த்தபடி எழுந்து நின்றேன். சட்டென என்முன் அதன் முதல் பக்கத்தை நீட்டிக் காண்பித்து என்னைத் கையெழுத்திட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.
ஒரு நிமிடம் எனக்குள் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. கண்களிலிருந்து நீர் கொட்டத் துவங்கியது. தமிழகம் நன்கு அறிந்த தலைவர் அவர். நானோ அப்போதுதான் பொது உலகில் தலைப்பட்ட புதிய எழுத்தாளன். வயதிலும் அனுபவத்திலும் அவர் எல்லை நானோ துவக்கப்-புள்ளி. ஆனாலும், என்னையும் அவர் ஒரு பெரிய மனிதராகப் பாவித்து எழுந்துநின்று கையெழுத்துக் கேட்ட பெருந்தன்மை எனக்குள் பலவிதமான சிறுமைகளை அடித்து நொறுக்கச் செய்தது. குற்ற உணர்ச்சி காரணமாகத்தான் மனதிலிருந்து கண்ணீர் பீறிட்டெழுந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் கையெழுத்திடத் தயங்கினேன். அவர் வற்புறுத்தினார்.
இதில் பெரிய விசயம் ஒன்றுமில்லை. என்னிடம் புத்தகம் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது கையெழுத்தைக் கேட்டுப்பெறுவது எனது வழக்கம். எழுத்துக்கு வயதில்லை. புத்தகத்திற்கு நான் தரும் இந்த மதிப்பு அந்த எழுத்தாளனையும் மகிழ்ச்சியடையச் செய்யுமென்றால் அதுவே எனக்கு மகிழ்ச்-சியளிக்கக் கூடிய காரியம் என்றார். மேலும், பெரியாரிடம் நான் கற்றுக்கொண்டதும் இதைப்போன்ற பண்புகளைத்தான் என்று கூறினார். இனி, நானும் இப்பண்பைத் தொடர்வதென அப்போதே முடிவெடுத்து, கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.
சிறியோரை இகழ்தலும் இலமே
கணியனின் காலத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மனசுக்குள் ஸ்கோரோலிங்காக ஓடியது.
அன்று திடலை விட்டு வெளியே வரும்போது மனம் துலக்கமாக இருந்தது. என்னுள் இன்னுமொருபடி உயரவைத்த அய்யா வீரமணி அவர்களுக்கு மனசுக்குள் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
அன்று திடலை விட்டு வெளியே வரும்போது மனம் துலக்கமாக இருந்தது. என்னுள் இன்னுமொருபடி உயரவைத்த அய்யா வீரமணி அவர்களுக்கு மனசுக்குள் ஒரு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment