உலகெங்கும் பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல தோள் கொடுப்பீர்!
வீடு தொடங்கி நாடுவரை ஒத்துழைப்பு அளிக்கும் அனைவருக்கும் நன்றி! நன்றி!!
தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தி
தமிழர் தலைவரின் பிறந்தநாள் செய்தி
உலகம் முழுவதும் தந்தை பெரியார் கொள்கையை எடுத்துச் செல்ல அனை வரும் தோள் கொடுப்பீர் என்று நன்றிப் பெருக்குடன் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
பிறந்த நாள் செய்தியாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை எனக்கு 80 ஆவது பிறந்த நாள். என்னைப் பொறுத்தவரையில் அது, அய்யாவின் - எனது அறிவு ஆசானின் அடிச்சுவட்டைப்பற்றிய 70 ஆண்டுகள் நிறைவு நாள்.
அறிவு ஆசானின் இயக்கத்தின் பொறுப்பாளனாக, அய்யா அவர்களால் (1960 முதல்) அமர்த்தப்பட்டு, மானம் பாராத தொண்டனாக ஆக பயிற்சிப் பட்டறையில் ஓர் பணி யாளனாக அனுபவம் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டவன்.
ஒரே திருப்பணி
இப்பணி - சமுதாய மாற்றத்திற்காக வேறு பலன் எதையும் எதிர்பாராது, காலம் நேரம் கருதாது, நன்றியை எதிர்நோக்காமல், பழி தூற்றப்படுதல், எதிர்நீச்சல் - இவற்றைப் பொருட்படுத்தாத கருமமே கண்ணான பெரும்பணி - அரும்பணி - ஒரே திருப்பணி மன நிறைவான பணி.
ஆயுள் நீட்டும் அருமருந்து
இப்பணிதான் என்னை சில நோய்கள் வராமல் தடுக்கவும், வந்த உடல்நோய்களிலிருந்தும் காப்பாற்றி, என்றும் சலிப்பின்றி, சமுதாயப் பணிக்கு உழைத்திடவும் தயார்படுத்தும் பட்டறை - பாசறைப் பணியாகி தாங்கிப் பிடித்து, ஆயுளை நீட்டும் அருமருந்தாகி வருகிறது!
எனது வாழ்விணையர் தொடங்கி, குருதிக் குடும்பத் தினர் அனைவரது ஒத்துழைப்பும் எனது கொள்கைக் குடும்பத்தினர், அன்புப் பொழியும் டாக்டர் நண்பர்கள் ஆகியோரின் வற்றாத பாசமும், வறளாத உற்சாகமூட்டலும் இப்படி கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியை ஈட்டுவதற்குத் தோள் கொடுக்கும் தோழர்களாகி, தொண்டனுக்குத் தொண்டன் ஆகிய எனக்கு பேராதரவு அளித்து வருகின்றனர்!
என் விரல் பிடித்து கொள்கைப் பாடம் நடத்திய ஆசிரியர் ஆ. திராவிடமணி
என்னை இவ்வியக்க நுழைவு வாயிலுக்கு அழைத்து வந்து, விரல் பிடித்து கொள்கை அ எழுதச் சொல்லிக் கொடுத்த எனது ஆசிரியர் ஆ. திராவிடமணி ஆசானுக்கு இத்தருணத்தில் முதல் நன்றியைப் பணிந்து தெரிவிக் கின்றேன். (அவருக்கும் இன்றுதான் பிறந்த நாள் - 1914).
அவரது ஆரம்ப காலப் பாடங்கள் இன்னமும் என்னைச் செதுக்கிட உதவிய கருவிகள் ஆகும்.
எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம்!
எல்லாவற்றிற்கும் மேலாக, எவருக்கும் எளிதில் கிடைக்காத பேரின்ப பெருவாழ்வான தொண்டு வாழ்க்கையை, கொள்கை நெறி பிறழாமல், சமரசம் அறியா சமர்க்கள வாழ்க்கையாக வாழச் செய்யும் உறுதியை என்னுள் விதைத்து, என்னை செய்த எனது ஞானத் தந்தையின் கொள்கை வெளிச்சம், மங்காத, மறையாத சூரிய ஒளியாகும்.
ஒரே பணி - ஒரே இலக்கு!
அய்யாவின் கொள்கைகளை, தத்துவங்களை அகிலத்திற்கும் கொண்டு செல்லும் அயராப் பணி எனது ஒரே பணி - ஒரே இலக்கு.
அதை நோக்கியே எங்கள் பயணம்.
அதை நோக்கியே எங்கள் பயணம்.
அன்னை மணியம்மையார்
நம் அய்யாவை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அதற்குமேல் 5 ஆண்டுகாலம் அவர் தந்த அறிவியக்கத் தையும் பாதுகாத்து, பரப்பி வந்த சோதனைகளை யெல்லாம், நெருக்கடிகளையெல்லாம் சந்தித்து, இயக் கத்தை மீட்டெடுத்து, துரோகங்களைக் களையெடுத்து, தூய இயக்கமாகிய எங்கள் அன்னையாரின் உடல் நலிந்தாலும் - உள்ளம் ஒருபோதும் மனம் தளராது போர்ப்பறை கொட்டிய வீராங்கனையாக நின்று எம்மை மேலும் பக்குவப்படுத்திய தோடு அய்யாவைப் போலவே அவர் வைத்த நம் பிக்கையைக் காப்பாற்றவே உழைக்கும் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திடும் நாளாகவே இந்நாளைக் கருதிகிறேன்.
என் உயிருக்கு வைக்கப்பட்ட குறிகள்!
எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க, கொள்கை எதிரி கள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை வண் ணாரப்பேட்டைப் பகுதி யிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை.
சிறைச்சாலை வாசங்களிலேயே மிக மோசமான, கொடுமையான உரிமை பறிப்புகளும், அவமானங்களும், அடி உதைகளையும் பெற்று, எதையும் தாங்கும் பக்குவப் பாடத்தைப் போதித்த நெருக்கடிகால மிசாக் கொடுமை - ஓர் அரிய பேறு! காரணம், எந்த கீழ்நிலையிலும் நம்மால் உறுதியான கொள்கைப் பயணத்தைச் செய்யமுடியும் என்ற மனத்திண்மையை புகுத்தி, பக்குவப்படுத்திய பருவமாக அது அமைந்தது பேறு அல்லாமல் வேறு என்ன?
இச்சந்தர்ப்பங்களில் என்னைவிட என்னைச் சார்ந்த குடும்பத்தவர்கள், தோழர்கள் காட்டிய கொள்கை நெறிபிறழா உறுதி எனக்கு மேலும் உற்சாகம் தந்த டானிக் ஆகும்.
விளையாட்டுபோல விடுதலையில் உழைத்து, 50 ஆண்டுகள் ஓடோடி அது மேலும் இணையப் பதிப்பாகி யது, என்றென்றும் நம் உள்ளப் பதிப்பாகி, ஊற்றென மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது.
கட்டுப்பாடு காக்கும் எமது கருஞ்சட்டைப் படை தோழர்கள் யாமிருக்க, தயக்கமேன்? என்று முடிவுகள் எடுக்க உதவுகின்றனர்.
மற்றபடி வயது முதிர்வது முதுமையின் அடையாளம் என்றாலும், இக்கொள்கை என்றும் இளமையான கொள்கை என்பதால், இளமை முறுக்கு - எந்த செருக்குக்கும் இடந்தராது, கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட உதவுகிறது.
மீட்டுருவாக்கங்கள் மிக வேகத்துடன் நடைபெற வேண்டிய கால கட்டம் இது! புற்றீசல்கள்போல், புதுப்புது அறைகூவல்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன நாள் தோறும் - நம்மை நோக்கி!
இயக்கப் பணியின் வளர்ச்சிக்குக் காட்டப்படும் எதிர்ப்பை ஏளனங்களை உரமாக்கிடும் நெஞ்சுரமும், நேர்மைத் திறனும், நாணயமும், தன்னலத் துறவும், லட்சியத்திற்காக எந்த கடும் விலையையும் தருவதற்குத் தயாராக உள்ள உறுதியும் உடைய ஒரு கருஞ்சேனையுடன் உள்ளேன் என்ற மகிழ்ச்சியைவிட வேறு என்ன வேண்டும்?
பிழைக்கும் பட்டாளமல்ல!
இது பிழைக்கும் பட்டாளம் அல்ல; உழைக்கும் வீரர்களின் உன்னத அணிவகுப்பு. மக்களின் சுயமரியாதை வாழ்வே அதன் இலக்கு.
அதை ஏற்படுத்தும் வாய்மைப் போரில் நாம் என்றும் இளையோர்களே -எனவே வயதை வைத்துக் கணக்குப் போடாமல், சலிப்புற்று ஒதுங்காமல், குன்றா உணர்வினைக் கொண்டு, குறையா உற்சாகத்துடன் தளரா நடைபோட வாரீர்! வாரீர்!!
பெரியார் பணி முடிக்க எனது எஞ்சிய வாழ்நாளைப் பயன்படுத்த, துணையாக நில்லுங்கள் தோழர்களே, தோழியர்களே, நல்லெண்ண நண்பர்களே!
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தமிழ்நாடு முழுவதும் - 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மரக்கன்றுகளை நடுவதற்கான (ஆண்டு முழுவதும்) முயற்சிகளை தொடர்ந்து செய்வோம்.
800 கூட்டங்களை ஆண்டு இலக்காக நாடு தழுவிய அளவில் நடத்துங்கள்.
கழக ஏடுகளை, நூல்களைப் பரப்புங்கள்!
நன்றி! நன்றி!! நன்றி!!!
வீடு தொடங்கி, நாடு முழுவதும், ஏன் உலகம் முழு வதும் இக்கொள்கை பரவ உறுதியைப் புதுப்பிக்கும் உங்கள் தொண்டனுக்குத் தோள் கொடுங்கள், தோழர்களே!
இறுதி மூச்சுள்ளவரை, இடர் எதுவரினும் உழைக்கும் உறுதி புதுப்பிக்கும் நாளே இந்நாள் எனக்கு!
உங்கள் உளங்கனிந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் தொண்டன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.12.2012
1.12.2012
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- காவிரியில் 30 டி.எம்.சி. தண்ணீர் விடக்கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மனு
- சிரியாவில் நடக்கும் வன்முறைகள் மிருகத்தனத்தின் உச்சம் -பான் கி-மூன்
- காங்கோ நாட்டில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது: 30 பேர் உயிரிழப்பு
- கலைஞருடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
- அன்னிய முதலீடு விவகாரம்: டிசம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம்
No comments:
Post a Comment