Tuesday, November 27, 2012

சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சி


சென்னையில் சாதி மறுப்பு வாழ்க்கை துணைதேடும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் நடந்த சாதிமறுப்பு தேடல் பெருவிழாவில் இணைந்த ஜோடிகளுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்த படம். அருகில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாலாஜி உள்ளனர்.

சென்னை, நவ.26- சென்னை பெரியார் திடலில் நடந்த சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதற்காக வாழ்க்கை துணையை தேடி மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி ஆசிரியை, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 291 பேர் விண்ணப்பித்தனர். மாலையில் 2 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
சுயமரியாதை திருமணம்
பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில், முற்போக்கு சிந்தனையுள்ள குடும்பத் தினருக்கு பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் சாதிமறுப்பு இணை தேடல் பெருவிழா மன்றல் 2012 என்ற பெயரில், சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இதற்காக சாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத்திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோர் என்று தனித்தனியாக 5 அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தன. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்கள் இந்த அரங்குகளில் தங்கள் பெயர்களை நேற்று காலை பதிவு செய்தனர். பின்னர் ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியதற்கான சான்றுகள், தனித்து வாழ்க்கை நடத்துவதற்கான பொருளாதார வாய்ப்புகள் குறித்த சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.
தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகுதல், மருத்துவம், மனநல ஆலோசனைகள் குறித்த மருத்துவ முகாமும் நடந்தது. திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் மருத்துவம், மன வளர்ச்சி சோதனைகள், உயரம், எடை மற்றும் ரத்த சோதனையும் செய்யப்பட்டது. பின்னர் பெரியார் திடலில் உள்ள ஹாலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், திருமணம் செய்து கொள்பவர்களின் விருப்பங்களை கேள்வி பதில் மூலம் கேட்கப் பட்டது. இரட்டையர்களை
தேடிவந்த இரட்டையர்கள்
ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழாவில் கலந்துகொண்ட இரட்டையர்கள் கீதா, சீதா ஆகியோரை படத்தில் காணலாம்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மருதகாசி. இவருடைய மகள்களான இரட்டையர் கள் எம்.கீதா, எம்.சீதா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் சென்னை காமராஜர் நகரில் தங்கியிருந்து இருதய நோயாளிகளுக்கு ஈ.சி.ஜி. எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது: ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாக படித்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே ஒரே நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறோம்.
நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்லவேலை பார்க்கும் இரட்டை சகோதரர்களை மண முடிப்பதற்காக தேடிவந்துள்ளோம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் அண்ணன், தம்பிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரே வீட்டில் இரு வரும் மருமகள்களாக செல்ல ஆசைப்படுகிறோம். நன்றாக சம்பாதிப்பதால், மாப்பிள்ளையும் நன்றாக சம்பாதிப்பவராகவும், அழகாகவும் இருக்க வேண்டும். எந்த சாதியாக இருந்தாலும் பரவா யில்லை, மதம் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பாகும்.-இவ்வாறு இரட்டை சகோதரிகள் கூறினர்.
புதுச்சேரி பெண்
புதுச்சேரியை சேர்ந்த சேகர் மகள் அமுதா. எம்.பார்ம். பட்டமேற்படிப்பு படித்து விட்டு தனியார் மருத்துவ நிறுவனத்தில் புதுச்சேரி அலுவலக மேலாளராக வேலைபார்த்து வருகிறார்.
இவர் கூறுகையில், என்னுடைய பெற்றோர்கள் சுயமரியாதை திருமணம் செய்தவர்கள். அவர் களைப்போல் சாதி, பார்க்காமல் சுயமரியாதை யுடன் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய பெற்றோருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், வரவிருக்கும் மாப் பிள்ளை எங்கள் வீட்டு பிள்ளையாகவும், என் னுடைய பெற்றோருக்கு மகனாகவும் இருக்கும் மனநிலை படைத்தவரை தேடி வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர்
சென்னை தலைமைச்செயலகம் குடியிருப்பை சேர்ந்தவர் வி.கே.ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். தனக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தும், சொந்தமாக வீடு இருந்தும், குழந்தைகள் என்னை கவனிக்காததால் சாப்பாட்டிற்காகவும், என்னை கவனித்துக் கொள்வதற்காகவும் 62 வயதில் திருமணம் செய்து கொள்வதற்காக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், சாதி, மதம் பார்க்காமல், விவாகரத்து பெற்றவர்கள், வாழ்க்கை துணையை இழந்தவராகவும் இருந்தாலும் திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்தில் கணவனை இழந்த பெண் தமிழரசி, திருமணமாகி 3 மாதம் மட்டுமே கணவருடன் வாழ்ந்துள்ளார். திருப்பத்தூரில் உள்ள பாலிடெக்னிக்கில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும், இவர் சமுதாயத்தில் தனிபெண்ணாக வாழ முடியாது என்பதால், தன்னை கண் கலங் காமல் பார்த்து கொள்ளவும், மனதுக்கு பிடித்த மணமகனை தேடிவந்ததாக கூறினார்.
அரசுபள்ளி ஆசிரியை
நெற்குன்றம் மேட்டுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை ஜெயந்தி. இரண்டு கால்களும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர், எம்.ஏ., எம்.பில். படித்தவர். தன்நிலையை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள ஒரு துணையை தேடி வந்ததாக ஜெயந்தி கூறினார்.
சென்னையை சேர்ந்தவர் வெற்றிமணி. எம்.டெக். படித்த இவர், சென்னையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்த்து வருகிறார். கல்வியில் சிறந்த பகுத்தறிவு சிந்தனை கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இரண்டு கால்களையும் இழந்து தவழ்ந்து வந்தவர் தாம்பரத்தை சேர்ந்த மகேந்திரன். இவர் பழ வியாபாரம் மூலம் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக் கிறார். இவர் தன்னை கவனித்துக்கொள்ள பெண் தேவை. சாதி, மதம் பார்க்கமாட்டேன். வரதட் சணையும் தேவையில்லை என்றும் கூறினார்.
சென்னை அடையாறு தரமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). இவர் தன்னுடைய தாய் செண்பகத்துடன் வாழ்க்கை துணை தேடி வந்தார். இவர் கூறும் போது, காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நாங்கள் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மண்பரிசோதனை ஆய்வு செய்யும் பணி செய்து வருகிறேன். வாழ்க்கை துணையை தேடுவதற்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். துணையாக வரவிருக்கும் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன் என்றார்
2 ஜோடிகளுக்கு திருமணம்
சாதிமறுப்பு தெரிவித்த காரைக்குடியை சேர்ந்த அறிவரசுக்கும், மதுரையை சேர்ந்த ஜான்சி ராணிக்கும் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன், தமிழ்செல்வி ஆகிய இரண்டு ஜோடியினரையும் உறுதிமொழி வாசிக்க வைத்து திருமணங்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி  நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது: சாதி, மதம் மறுப்பு மற்றும் காதல் திருமணங் களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 291 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 25 திருமணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, ஒரு நல்லதொடக்கம் தான், முடிவு அல்ல. இன்று இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. மணமக்கள் அன்போடும், பண் போடும், விட்டுக்கொடுத்து வாழ்ந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.
-இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
விழாவில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றனார், செயலவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் ஜெயக்குமார், டாக்டர் பிறைநுதல் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் உட்பட நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.
-(நன்றி: தினத்தந்தி 26.11.2012)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...