தெருப் பெயரில் ஜாதி இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தவர் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். அரசு என்று சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர்
பிராமணாள் பெயரை நீக்க முயற்சிக்க வேண்டும்
இல்லையேல் தொடர் போராட்டம் - தமிழர் தலைவர் அறிவிப்பு
சிறீரங்கம், நவ.5- சிறீரங்கத்தில் உள்ள உணவு விடுதியில் முளைத்திருக்கும் பிராமணாள் பெயரை நீக்க தமிழக முதல் அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும்; இல்லையேல் அப்பெயர் நீக்கப்படும் வரை தொடர் போராட்டம் நடத் துவோம் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சிறீரங்கம் - திருவானைக்காவலில் நேற்று (4.11.2012) மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
இன்றையப் பொதுக் கூட்டம் வரலாற்றுச் சிறப்பைப் பெற்று விட்டது. இன இழிவை ஒழிக்கக் கூட்டப்பட்டுள்ள பொதுக் கூட்டம்.
இந்தப் பிரச்சினையில் காவல்துறை நடந்து கொண்ட போக்கு வருந்தத்தக்கது. இத்தகு நடவடிக்கைகளுக்காக காவல்துறையின்மீது எங்களுக்குக் கோபம் இல்லை; மாறாக பரிதாபப்படுகிறோம்.
திராவிடர் கழகத்தின் வரலாற்றில் எந்த காலகட்டத் திலும் வன்முறைக்கு இடம் இல்லை; எத்தனையோ மாநாடுகள், பேரணிகள், போராட்டங்களை நடத்தி வந்துள்ளதே - எந்த இடத்திலாவது வன்முறைக்குக் காரணமாக திராவிடர் கழகம் இருந்ததுண்டா?
காவல்துறையினர் தாக்கினால்கூட அவர்களின் முகத்தைப் பார்க்காதே - முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அல்லவா!
காலிகளால் எங்கள்மீது தாக்குதல்கள் தொடுக்கப் பட்ட பொழுதுகூட, பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் திராவிடர் கழகம் நடந்ததுண்டா?
திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்குமுன் இக்கழகத்தின் செயல்பாடுகள்பற்றி ஒருகணம் காவல்துறை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா?
காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா! 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானமும் இந்த வகையில் இயற்றப்பட்டதுண்டே! இந்த வரலாறு எல்லாம் தெரியுமா?
இதே திருச்சியில் பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி ஊர்வலம் நடத்தி என்னையும், என் குடும்பத்தைப்பற்றியும் எவ்வளவு கேவலமாக கோஷம் போட்டார்கள்? வீரமணியின் மனைவியைப் பொதுவுடைமை ஆக்கு என்று கோஷம் போட்டு அவர்களின் தகுதியை வெளிப் படுத்தி கொள்ளவில்லையா?
போய்ப் பார் - அந்தஅம்மா கொடுப்பதை வாங்கிக் கொண்டு வா! என்றுதான் சொன்னோமே தவிர, பதிலுக்குப் பதில் அவர்கள் கையாண்ட முறையைப் பின்பற்றவில்லையே!
1981இல்பழனியில் என்னைப் போல உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப் பனர்கள் அல்லவா!
அதுபற்றி பத்திரிகையாளர்கள் என்னைக் கேட்ட போதுகூட நான் கோபப்படாமல் எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. ஒரு சூத்திரன் பிணத்தை நான்கு பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றார்களே - இது எங்கள் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி (பலத்த கரவொலி!) என்றுதானே சொன்னேன்.
சீனாவில் புரட்சி நடத்திய மா-சேதுங் சொன்னது தான் என் நினைவிற்கு வருகிறது. நம் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்களை, நம் எதிரிதான் தீர்மானிக் கிறான் என்று சொன்னதை இங்கு நினைவுபடுத்து கிறேன் (பலத்த கரவொலி!).
இதே சிறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதே - அதனால் எந்த கெடுதல் வந்து விட்டது? அதனை எதிர்த்துக்கூட உச்சநீதிமன்றம் வரை சென்றார்களே - வெற்றிபெற முடிந்ததா? அதிலும் பெரியார் தானே வெற்றி பெற்றார்.
2012-இலும் நாங்கள் சூத்திரர்களா?
நாங்கள் என்ன கேட்கிறோம்? 2012-இலும் நாங்கள் சூத்திரர்களாக இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் என்ன? நீங்கள் எழுதி வைத்த அசல் மனுதர்மம் இதோ என் கையில் இருக்கிறது. இதில் எட்டாவது அத்தியாயம் 415ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி யாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளி ஏழு வகைப்படுவர். சூத்திரர்கள் என்றாலே தொழிலாளியாம். நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த 2012-இலும் பிராமணாள் என்று போர்டு மாட்டினால் எங்களை சூத்திரர்கள் - பார்ப்பனர்களின் வைப் பாட்டி மக்கள் என்று சொல்வதாக ஆகாதா? இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
காந்தியார்மீதான இழிவைத் துடைத்ததும் யார்?
காந்தியாரையே அவமதித்தவர்கள் ஆயிற்றே பார்ப்பனர்கள்? ஆதாரத்தோடு கூறுகிறேன் - இதோ என் கையில் இருப்பது தமிழ்நாட்டில் காந்தி எனும் நூலில் அதன் 521ஆம் பக்கத்தில் காணப்படும் செய்தியைத்தான் குறிப் பிடுகிறேன்.
நீதிக்கட்சித் தலைவர்கள் ஏ.டி. பன்னீர்செல்வமும், பிரபல வழக்கறிஞ ரான கரந்தை உமா மகேசுவரம் பிள்ளையும் காந்தியாரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் நிலவும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைபற்றி பேசப்பட்டது.
அந்தச் சந்திப்பில் காந்தியார் என்ன கூறினார்?
இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வரு வதைக் காண்கிறேன். சில ஆண்டு களுக்குமுன் நான் சென்னைக்கு வந்தபோது எஸ். சீனிவாச அய்யங்கார் வீட்டுத் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந் திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று காந்தியார் குறிப்பிட்டார் என்றால் இதன் பின்னணி என்ன?
இந்தவுரையாடல் நடந்தது 1927 செப்டம்பர் 16இல்; சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொன்னது - 1925ஆம் ஆண்டுக்கு முன் - சுய மரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்காத காலம்.
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்காத கால கட்டத்தில் காந்தியா ருக்கேகூட உரிய இடம் சீனிவாச அய்யங்காரின் தாழ்வாரம்தான்.
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கிய பிறகு காந்தியார் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் போக முடிந்தது - அவரது மனைவியார் சீனி வாச அய்யங்காரின் அடுப்பங்கரை வரை செல்ல முடிந்தது!
தந்தை பெரியார் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கிய பிறகு காந்தியார் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் போக முடிந்தது - அவரது மனைவியார் சீனி வாச அய்யங்காரின் அடுப்பங்கரை வரை செல்ல முடிந்தது!
காந்தியார்மீதே சுமத்தப்பட்ட இழிவைத் துடைத்தெறிந்தது தந்தை பெரியார் தானே - இந்த இயக்கம் தானே!
அரசு ஆவணங்களில் சூத்திரர் இழிவை ஒழித்தது யார்?
1927ஆம் ஆண்டு வரை கூட அரசுப் பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்ததே! 1927இல் நடத்தப்பட்ட பார்ப் பனர் அல்லாத மாநாட்டில் அந்த இழிவு சுட்டிக் காட்டப்பட்ட பிறகுதானே நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அந்தப் பிறவி இழிவு - அரசு ஆவணங்களில் ஒழிக்கப் பட்டது. அய்.நா. மன்றத்தில் 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றனவே - எந்த ஒரு நாட்டிலும் இந்த நாட்டைத் தவிர சூத்திரன் என்ற பிறவி இழிவு உண்டா?
மாண்புமிகு சூத்திரன்தானே!
மனுதர்மம் இருக்கும்வரை...
இந்து லா என்று சொல்லப்படக் கூடிய அரசமைப்புச் சட்டத்தில் ஆதார நூல்கள் வரிசையில் மனுதர்மம்தானே இன்று வரைக்கும் அடிப்படை - மறுக்க முடியுமா?
மனுதர்ம சாஸ்திரம் அங்கீகரிக்கப் படும் வரை எல்லோரும் சூத்திரர்கள் தானே?
இது ஒன்றும் திராவிடர் கழகத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்லவே!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51a(h) பிரிவு என்ன கூறுகிறது?
குடி மக்களின் அடிப்படைக் கடமை என்பதில் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளதே, மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வை வளர்க்க வேண்டும், விஞ்ஞான மனப்பான்மையை ஊட்ட வேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட் டுள்ளதே - இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் இந்த அடிப்படைக் கடமையினைத் தானே திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது? இதற்குத் தடை போட ஆசைப்படலாமா காவல்துறை? காவல்துறையின் இந்த அணுகுமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் அல்லவா!
மானமுள்ள தமிழன் பிராமணாள் போர்டு மாட்டியிருக்கும் உணவு விடுதிக் குச் செல்லலாமா?
ரயில் நிலையங்களில் மாட்டப்பட்டு இருந்த பிராமணாள் - சூத்திராள் - இதராள் போர்டு நீக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த இயக்கம் இந்த இயக்கம் - தலைவர் தந்தை பெரியார் அல்லவா!
செவ்வாய்க்கிரகம் போகலாம் - கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைய முடியாதா?
இன்னும் தமிழன் கட்டிய கோயில் களின் கர்ப்பக்கிரகத்துக்குள் தமிழன் நுழைய முடியாத நிலை! இதற்காக திராவிடர் கழகம் - தந்தை பெரியார் போராட முன்வந்தபோது கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை இயற்றினாரே - இரண்டாவது முறையும் தீர்மானம் போட்டாரே - அதனை உச்சநீதிமன்றத்தில் முடக்கி வைத்திருப்போர் யார்? பார்ப்பனர்கள் தானே?
செவ்வாய்க்கிரகத்துக்குப் போகலாம்; கோயில் கருவறைக்குள் போக முடியா தாம் - போகக் கூடாதாம்!
இந்து அறநிலையத்துறை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. கோயில் அர்ச்சகர்கள் இனி பஞ்சகச்சம் கட்டியிருக்க வேண்டுமாம் - குடுமியும் வைத்திருக்க வேண்டுமாம்.
ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது என்றால், ஏன் இதுவரை அது வற்புறுத்தப்படவில்லை. என்ன திடீர் என்று ஞானோதயம்?
பல கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லை என்று இன்றைக்கு இந்து ஏட்டில் வெளிவந்துள்ள செய்தி கூறுகிறதே.
அர்ச்சகர் பயிற்சி பெற்றோர் 207 பேர்
அர்ச்சகர் பயிற்சியை முறைப்படி பெற்றுள்ள 207 பேர்கள் வெளியில் இருக் கிறார்களே, அவர்களைக் கொண்டு அந்தக் காலி இடங்களை நிரப்பலாமே!
தினமலர் ஏடே திராவிடர் கழகத்தின் போராட்டத்தை வரவேற்று எழுதி யுள்ளதே பிராமணர் என்பது ஜாதிப் பெயர் அல்ல, வர்ணப் பெயர் என்று கூறி அறிவுரை கூறியிருக்கிறதே கவனத்தில் கொள்ள வேண்டாமா?
எம்.ஜி.ஆர். என்ன கூறினார்?
எங்கள் அரசு எம்.ஜி.ஆர். அரசு என்று நமது முதல் அமைச்சர் கூறுகிறார்! அந்த எம்.ஜி.ஆர். ஆணையே பிறப்பித்தாரே - எந்தத் தெருப் பெயரும் ஜாதிப் பெயராக இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித் தாரே, அதன்படி டி.எம். நாயர் சாலை என்பதுகூட டி.எம். சாலை என்றுதானே மாற்றப்பட்டது?
அந்த எம்.ஜி.ஆர். வழி வந்த அரசு பிராமணாளை அனுமதிக்கலாமா? எடுக்கச் சொல்ல வேண்டாமா?
சிறை ஒன்றும் எங்களுக்குப் புதிதல்ல!
அப்படி எடுக்கப்படாவிட்டால் எடுக்க வைப்போம் - அதற்கான போராட்டத்தில் குதிப்போம்! அந்தப் போர்டு எடுக்கப்படும் வரை போராட்டம் முற்றுப் பெறாது.
டிசம்பர் முதல் தேதி, சென்னையில் கூடவிருக்கும் திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் போராட்டத் திட்டம் அறிவிக்கப்படும். கருஞ்சட்டைத் தோழர் களே, தயாராவீர்!
எங்களுக்கொன்றும் சிறை புதிதல்ல - சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும் - எங்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.
கட்டுப்பாடுள்ள இயக்கம்
இது கட்டுப்பாடு மிகுந்த இயக்கம், தலைமை கட்டளையிட்டால் நூலிழை பிறழாமல் நடந்துகொள்ளக் கூடியவர்கள்.
(இந்த நேரத்தில் கழகத் தலைவர் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருங்கள் என்றார் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவரும் அமருங்கள் என்றார்; அனைவரும் அமர்ந்தனர் - இதனைச் சுட்டிக்காட்டி இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பெயர்தான் கருஞ்சட்டைப் பட்டாளம் - திராவிடர் கழகம் என்று குறிப்பிட்டார்)
தனிப்பட்டவர்மீது காழ்ப்புணர்வு இல்லை
நாங்கள் மான உணர்வுக்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். யார்மீதும் எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பகை இல்லை. காழ்ப்பும் கிடையாது.
இந்தக் கூட்டம் முடிந்தவுடன் யாரும் அந்த உணவு விடுதி பக்கம்கூட செல்லக் கூடாது - வீட்டுக்கு நேராகப் போக வேண்டும்.
தந்தை பெரியாரை அவமதித்துப் பேசுவதா?
அமைதிக்காகப் பாடுபடக் கூடியவர்கள் நாங்கள்; அமளியை ஏற்படுத்த அல்ல; இன்று உண்ணாவிரதம் என்று கூறிப் பார்ப்பனர்கள் என்ன பேசினார்கள். தந்தை பெரியாரையே அவன் - இவன் என்று பேசி இருக்கிறார்கள். அதற்கு உரிய முறையில் பரிகாரம் காணப்படும் (பலத்த கை தட்டல்) என்று குறிப்பிட்டார்.
சிறீரங்கத்தில் பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்துக்குப் போராட்ட வீரர்களின் முதல் பட்டியலை இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் அளித்தனர் (திருவானைக்காவல் 4.11.2012)
-------------------------------------------------------------
கட்சிகளைத் தூக்கி எறியுங்கள்!
கட்சிகளைத் தூக்கி எறியுங்கள், உங்களின் மான உணர்வை எண்ணிப் பாருங்கள் - உங்கள் சுயமரியாதைபற்றி நினைத்துப் பாருங்கள்.
இந்த இழிவை ஒழிக்க சிறை செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாங்கள் தயார்! இப்பொழுதே சிறை செல்ல பட்டியலைக் கொடுத்து விட்டனர் கழக இளைஞரணியினரும், மாணவர்களும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், நாங்கள் தொடர்ந்து பணி செய்யாவிட்டால் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதார் நெற்றியிலும் சூத்திரன் என்று பச்சைக் குத்தி இருக்க மாட்டானா?
ஒரு பெரியார் பிறந்ததால்தானே நாம் மான உணர்ச்சி பெற்றோம். சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது.
- திருவானைக்காவலில் தமிழர் தலைவர்
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- சென்னையில் செட் ஆப் பாக்ஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு
- கூடுதல் மின்சாரம் வேண்டி தமிழக அரசு தாக்கல் செய்த மனு : உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment