Wednesday, November 28, 2012

கார்த்திகைத் தீபமா?


இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அது சடங்குகளின் - பண்டிகைகளின் குவியல். மனிதனின் அறிவைப் பாழ்படுத்துவதோடு நின்று விடாது; மனிதன் கடும் உழைப்பால் ஈட்டிய பொருளையும் சுரண்டக் கூடியதாகும்.
சித்திரை - தமிழ் வருஷப் பிறப்பு, சித்ரா பவுர்ணமி, இராம நவமி, ஆடி மாதம் பூர நட்சத்திரம் விழா, ஆடிப்பூரம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி புரட்டாசி, நவராத்திரி (ஒன்பது நாள் கூத்து)
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி இன்னோரன்ன... புரட்டாசி சனி (4 சனிக்கிழமை களிலும் விரதம்) மகாளய அமாவாசை அய்ப்பசி - தீபாவளி கந்தர்சஷ்டி கார்த்திகை மாதம் - கார்த்திகைத் தீபம்
மார்கழி: ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி.
தை தமிழர் திருநாளையும் மாற்றி சங்கராந்தி ஆக்கப்பட்ட கொடுமை! (புராணக் கதை புகுத்தப் பட்டுள்ளது) தைப் பூசம், தை அமாவாசை மாசி மகம், மகாசிவராத்திரி; பங்குனி - பங்குனி உத்திரம், காமன் பண்டிகை.
இப்படி பார்ப்பன சுரண்டலுக்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்துள்ளனர். தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்த கதையாக ஒவ்வொரு நாளும் பண்டிகை - பண்டிகை என்று கூறி மக்களை சக்கையாக உறிஞ்சி எடுக்கும் மகா மகா கொடுமை.
இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் கதை களோ ஆபாசம் - அருவருப்பு - அடி முட்டாள்தன மாகும்.
ஒரு கதையா? இரு கதையா? பைத்தியக்கார னுக்குக் கள் ஊற்றிய மாதிரி உளறல்! உளறல்!!
நவராத்திரி, தீபாவளி முடிந்த கையுடன் கார்த்திகை வந்து விட்டது. வீட்டுக்கு வீடு அகல் விளக்கு ஏற்றி வைப்பது என்பது எண்ணெய் செலவுக்குத்தான் கேடு.
இன்று திருவண்ணாமலையில் மகா தீபமாம்.
இதற்கு என்ன கதையளப்பு?
பிர்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போட்டி- இரண்டு பேர்களில் யார் பெரியவன் என்ற சண்டையாம் (கடவுள்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது சண்டைதானா?)
பரமசிவன் நடுவில் புகுந்து ஜோதி உருவெடுத்து என் அடி, முடிகளை யார் முதலில் காண்கிறார்களோ அந்த ஆள் தான் பெரிய ஆள் என்றானாம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டே போனானாம். அடியைக் காண முடியாமல் திரும்பினானாம். (இதனை வைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது வேறு கதை!)
பிரம்மன் அன்னப் பறவை உருவெடுத்து மேலே பறந்து சென்றானாம். அப்பொழுது தாழம்பூ ஒன்று மேலேயிருந்து கீழே வந்து கொண்டு இருந்ததாம்! எங்கிருந்து வருகிறாய் என்று அன்னப் பறவை தாழம் பூவைப் பார்த்துக் கேட்டதாம். சிவன் முடியிலிருந்து நீண்ட காலமாக வந்து கொண்டுள்ளேன் என்றதாம் தாழம்பூ.
எனக்கு ஒரு உதவி செய். சிவன் முடியை நான் பார்த்துவிட்டதாக சாட்சியம் சொல்லு என்று அன்னப் பறவை - கெஞ்ச, தாழம்பூவும் பரிதாபப்பட்டு பொய்ச்சாட்சி சொல்ல ஒப்புக் கொண்டதாம். சிவனிடம் வந்து சொல்ல, சினம் கொண்ட சிவன் சபித்து விட்டானாம். உனக்குக் கோயில் இல்லாமல்  போகக் கடவது! என்று பிர்மாவுக்கும் - பூசைக்கு உதவாமல் போகக் கடவாய் என்று தாழம்பூவுக்கும் சிவன் சாபமிட்டானாம்!
விஷ்ணுவும், பிர்மாவும் தவறுகளை ஒப்புக் கொண்டு - சிவனே நீதான் சக்தி வாய்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு, தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததன் அடையாளமாக இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்க வேண்டும்! என்று கேட்டுக் கொள்ள, சிவபெருமானும் சம்மதித்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகைப் பண்டிகையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று கூறினானாம். அதுதான் திருவண்ணாமலையில் மகா தீபம் கொண்டாடப்படும் இலட்சணம்!
இதில் சில கேள்விகள் உண்டு. பிர்மா, விஷ்ணு எனும் கடவுள்களிடையே யார் பெரியவன் என்று சண்டை போடுவது அசல் சிறுபிள்ளைத்தனம் அல்லவா!
இரண்டாவது, படைத்தல் கடவுள் என்று பார்ப்பனர்கள் கூறும் பிர்மா பொய் சொல்கிறானே, இது எந்த வகை ஒழுக்கம்?
மூன்றாவது, சிவன்தான் மற்ற இரு கடவுள் களையும்விட பெரியவள் என்பதை வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்வார்களா?
நான்காவது, கார்த்திகையில் ஜோதியாய்த் தோன்றுவேன் என்று சிவன் சொன்னபடி, அவனாக அல்லவா ஜோதியாக உருவெடுக்க வேண்டும்? மாறாக மனிதர்களே கொப்பறை சட்டியில் நெய்யை ஊற்றி காடாத் துணியைப் பற்ற வைப்பது யாரை ஏமாற்ற? இது பச்சையான மோசடியல்லவா!
பக்தி வந்தால்தான் புத்தி போய் விடுமே - யார் சிந்திக்கப் போகிறார்கள்? உணவுக்குப் பயன்பட வேண்டிய நெய்யை டன் டன்னாக நெருப்புக்கு இரையாக்குகிறார்களே - இதைவிட பொறுப்பற்ற செயல் வேறு உண்டா? சிந்திப்பீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...