Friday, November 30, 2012

பகுத்தறிவுச் செம்மல் கலைவாணர் என்.எஸ்.கே. என்றும் வாழுகிறார்!


இன்று (நவம்பர் 29) நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.
மூடநம்பிக்கை முட்புதர்களே நிறைந்த நாடகம் மற்றும் சினிமா துறைகளில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி செய்த மாமேதை அவர்.
அவருடன் இணையாக டி.ஏ. மதுரம் அம்மையார் நடித்து, அந்த ஜோடிப் புறாக்கள் புதுவானத்தில் தன்னிகரற்றுப் பறந்தன; பார்த் தோரைப் பரவசமாக்கியது மட்டுமா? பார்த்தவர்களை ஒரு நொடிப் பொழு தாவது (சிரிக்க வைப்பதோடு) சிந்திக்கவும் வைத்தார்கள்.
அப்படிப்பட்ட இணையர் தேடி னாலும் எளிதில் கிடைக்க மாட் டார்கள்.
நாகர்கோயில் குமரி தந்த குணாளர் என்.எஸ்.கே. ஒரு படிக்காத மேதை - ஆனால் மற்ற படித்த மேதை களுக்குப் புரியாதவை, தெரியாதவை எல்லாம் இவர்களால் நாட்டுக்கே வகுப்பெடுத்து பாடங்கள்போல் சொல் லிக் கொடுத்தார் என்பது ஒரு தனி வரலாறு.
இவ்வளவு பகுத்தறிவுப் பாடங் களை, தமது எளிய நகைச்சுவைக் காட்சிகளை எங்கிருந்துதான் கற் றாரோ இவர் என்று வியத்த பலருக்கும் அவரே அந்தப் புதையல் அவருக்குக் கிடைத்த இடம் அக்காலத்தில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு ஏடு; நாடகக் கம்பெனியில் அவர் நடிகனாக இருந்த அக்காலத் தில் 80 ஆண்டுகளுக்குமுன்பே குடி அரசின் வாசகனாக - இல்லை இல்லை மாறாக காதலனாக அவர் மாறியதின் விளைவு அவர் அதன்மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார்!
அந்த பச்சை அட்டைக் குடிஅரசுப் பயிற்சிப் பட்டறையில்  உருவான அந்த வாள்வீச்சு எத்தனையோ பழமையை, சனாதனத்தை, ஜாதி ஆணவங்களை வீழ்த்திட பல லட்சம் மக்கள் மனதைப் பக்குப்படுத்தியது.
அவ் வாள் தலையை வெட்டவில்லை; தலைக்குள் இருந்த அறியாமையை வெட்டிச் சாய்த்து, மூளைச் சலவை செய்து, பலரும் சிந்திக்கும்படிச் செய்தது!
அக்காலத்து உத்தமபுத்திரன் திரைப்படம் அதில் இவரது நகைச்சுவைப் பாத்திரம் ஒரு வைதீக வைஷ்ணவ அய்யங்கார் பாத்திரம்; மதுரம் அவரது மனைவி.
தன் பசு மாட்டிற்கு புல்லுக்கட்டு கொண்டு வந்து விற்கும் கீழ் ஜாதி (பறைச்சி வேடம்)ப் பெண் வேறு ஒருவர்.
ஜாதி குலம் எல்லாம் தான் காமத்தின் முன் சுட்டெரிக்கப்படும் என்பதை வைத்து, இந்த அய்யங்கார் அந்தப் பெண்ணை (பின் வழியாகத்தான் எப்போதும் வருவார் அவர்) ஒரு நாள் தனியே புல்லுக்கட் டுடன் மாலை வரச் சொல்லுகிறார்.
தனது மனைவி (மதுரத்தை) வேண்டு மென்றே சண்டை போட்டு, (சுடும் தோசையை கீழே  போட்டு புரட்டி மண்ணுடன் தான் உனக்கு தோசை விக்கத் தெரியுமோ, நீ ஒரு மனுஷியா? என்று வம்பு செய்து, ஆத்திரமூட்டுவார்; சண்டை முற்றும்... என் தாய் வீட்டுக்குப் போவதாக இவர் சொல்லி விட்டு வெளியேறுகிறார்.
வைணவ அய்யங்காருக்கோ மகிழ்ச்சி - தன் திட்டப்படி அவரது மனைவி வெளியேறிவிட்டார்!
மாலை காத்திருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோயால் தவிக்கிறார்!
இவரது மகன் (8 வயது பையன்) காக்கா இராதா கிருஷ்ணன் அப்போது இளைஞர், அந்த வேடம் ஏற்றவர்) ஓடி வந்து, அப்பா அப்பா என்று குறுக்கிட்டு இடைஞ்சல்போல பேசித் தொணதொணக்கிறார். அவருக்கு 4 அணா - பெரிய காசு அப்போது - எடுத்துக் கொடுத்து டேய் வெளியே போய் பக்ஷணம் வாங்கி சாப்பிட்டு வாடா என்று விரட்டுவார். மகனும் மகிழ்ச்சியோடு ஓடுவார் - வெளியே போகும் சமயம் இந்த தோப்பனார் அய்யங்கார் பையனை சத்தம் போட்டு கூப்பிட்டு டேய் பக்ஷணம் வாங்கிச் சாப்பிடும்போது, நம்மவா கடையாய்ப் போய் பாத்து சாப்பிடு; சூத்ராள் கடையில் இடையில் வாங்கி சாப்பிட்டிராதே; வாங்கி சாப்பிட்டு அப்புறமாக என்று அந்த அப்புறத்தை அழுத்திச் சொல்லுகிறார்  (அரங்கமே கைத்தட்டலால் அதிரும்).
பிறகு புல்லுக்கட்டுடன் கீழ் ஜாதிப் பெண் வருவா அவளை எதிர்கொண்டு சாகசமெல்லாம் செய்வார்; ஏஞ் சாமி, நீங்க உசந்தவங்க, நாங்க கீழ்ஜாதி - என்ன நீங்க...
அட நீ ஒண்ணு அதெல்லாம்... என்றெல்லாம் வசனம் பேசிடுவார்! தன் மனைவி பற்றி அவர் புல்லுக் கட்டுக்காரியிடம் அலட்சியமாகப் பேசுவார்; பிறகு தலை முக்காட்டை சிறிது நேரம் (வசனம்) பேசியபின், நீக்கிப் பார்த்தால் தன் மனைவிதான் (டி.ஏ. மதுரமே) அந்தப் புல் சுமந்த பெண்ணாக இருப்பார்! (ஏற்கெனவே அந்த கீழ்ஜாதிப் பெண் இவரது தகாத  உறவு அழைப்புபற்றி வீட்டு எஜமானி மதுரத்திடம் சொல்லியதால் இது மதுரம் செய்த ஏற்பாடு) அய்யங்காரை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளுவார் (மதுரம்) மனைவியார்!
இந்தக் காட்சி எப்படிப்பட்ட அருமையான உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவப் புரட்டு பற்றியது பார்த்தீர்களா?
எத்தனையோ ஆண்டுகள் முன் பார்த்த காட்சி - கண்ணை - கருத்தை விட்டு அகலாக் காட்சி. கலைத்துறையில் அக்கால பெரியார் கொள்கை பரப்பாளர் அவர். இன்றும் வாழுகிறார்கள் அவ் இணையர்கள். மறையவில்லை என்றும் வாழ்வார்கள்.
கலைவாணர் - மதுரம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...