மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்!
மதுரை, நவ.2- சேது சமுத்திரத் திட்டம்
கூடாது என்பது எம்.ஜி.ஆருக்குக்கூட செய்யும் துரோகம் அல்லவா? என்ற வினாவை
எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
எது தேவை? இராமனா? சேது சமுத்திரத்
திட்டமா? என்ற தலைப்பில் மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் திராவிடர்
கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்கூட்டத்தில் 26.10.2012,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய
தொடர்ச்சி வருமாறு:
ராமாயணத்திலே எதைத்தான் நம்ப முடிந்தது?
தசரத சக்கரவர்த்திக்கு எவ்வளவு மனைவி என்று கேட்டால், 60 ஆயிரம் மனைவிகள்
என்று சொல் வார்கள்.
தமிழ்நாட்டில் ராமன் கதை எடுபடாது!
தந்தை பெரியார் பொதுக்கூட்டங்களில் உரை யாற்றும்பொழுது சொல்வார்கள்,
60 ஆயிரம் மனைவிகள் இருந்தார்கள் என்று
சொன்னால், 20 ஆயிரம் பேர் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி; மூன்று
முனிசிபாலிட்டியா தசரத னுக்கு? ஒரு ரவுண்டு ஒரு மனைவியைப் பார்த்து விட்டு,
அடுத்த ரவுண்டு வரவேண்டும் என்றால், எத்தனை வருடத்திற்குப் பிறகு
வரவேண்டும்? இப்படி ஆராய்ச்சி செய்து, அக்குவேறு ஆணிவேறாக பெரியார்
மக்களைச் சிந்திக்க வைத்ததால்தான், தமிழ்நாட்டில் ராமன் கதை எடுபடாது!
ராமனைக் காட்டி தேர்தலில்கூட வெற்றி பெற முடியாது என்பது மிக முக்கியம்.
அதே ராமன்தான் இந்த ஆட்சிக்கு முடிவு
கட்டக் கூடிய அளவிற்குப் போகும் என்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள
வேண்டாம். உத்தரகாண்டம் என்ற பகுதியில் என்ன சொல் கிறார்கள், ராம
ராஜ்ஜியத்திலே எப்படி ஆள்கிறான்?
சூத்திரனுக்கு நேரே கடவுளைப் பார்ப்பதற்கு உரிமை கிடையாது!
ஒரு பார்ப்பனப் பையன் இறந்துவிட்டான்
என்று தூக்கிக்கொண்டு ராமனிடம் வருகிறார்கள். ராமா உன் ஆட்சியில்
தருமத்திற்கு விரோதமாக நடக் கிறது என்று சொல்கிறார்கள். என்ன என்று ராமன்
கேட்கிறான்.
இதோ பிராமணச் சிறுவன் இறந்துவிட்டான்
என்று சொல்கிறார்கள். எதனால் இறந்து விட்டான்? என்று ராமன் கேட்கிறான்.
தருமத்திற்கு விரோதமாக இருக்கு. என்ன தருமத்திற்கு விரோதம் என்றால்,
சூத்திரனுக்கு நேரே கடவுளைப் பார்ப்ப தற்கு உரிமை கிடையாது -
மனுதர்மத்திலே, வைதீக தருமத்திலே, வருணாசிரம தருமத்திலே.
ஆனால், சம்புகன் என்ற சூத்திரன் கண்ணை
மூடிக்கொண்டு உன்னுடைய ஆட்சியிலே ஊருக்கு வெளியிலே தவம் செய்கிறான். அவன்
யாருக்கும் இடையூறு செய்யவில்லை; இல்லாத மோட்சத் திற்குப் போகவேண்டும்
என்று தவம் செய்தான்; கடவுளைக் காணவேண்டும் என்று அவன் முயற்சி செய்தான்.
அப்படிப்பட்ட ஒரு நிலையிலே, இவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
விசாரணைக் கமிஷன் வைக்காமல்...
தருமத்திற்கு விரோதமாக நடந்ததால், என்
பையன் இறந்துவிட்டான் என்று சொல்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? என்று
ராமன் கேட்டான். அவனுக்குத் தண்டனை கொடுத்தால், என் பையன் உயிர் பெற்று
எழுவான் என்று சொல்கிறார்கள்.
விசாரணைக் கமிஷன் வைக்காமல், உடனே ராமன்
நேரே போனான், சம்புகன் என்ற சூத்திரனை கண்ட துண்டமாக வெட்டினான்.
சூத்திரனுக்கு மனுதர்மப்படி, வருணாசிரம தருமப்படி, யாகம் செய்வதற்கு,
கடவுளைக் காண்பதற்கு, தொழுவதற்கு உரிமையில்லை.
குறுக்கே ஒரு புரோக்கர்மூலம்தான் காண வேண்டும். அவர் யார் என்றால், அவர்தான் புரோகிதன். அதுதான் தர்மம்.
அதனாலேதானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
ஆவதற்கும் இடையூறாக தடுத்துக் கொண்டிருக்கிறான். எப்படி சேதுக் கால்வாய்த்
திட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டிருக்கிறார் களோ, அதுபோலவே, அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லி, அதற்கேற்ப ஒரு
சட்டத்தையும் நிறை வேற்றி, ஏறத்தாழ 1970ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு சட்டம்,
மறுபடி முடக்கப்பட்டு, மறுபடி எழுந்து நின்று, மீண்டும் திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சியிலே, கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே, தந்தை பெரியார்
நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்துவிடுகிறேன் என்று சொல்லக்கூடிய அளவிலே,
அதையும் செய்த பிற்பாடு, இன்றைக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு
ஒரு பிடி போட்டு வைத்திருக்கின்றானே, அதுவும் இதே தத்துவம்தான்.
ராமன் என்ன மனிதநேயக்காரனா?
ராமன் எந்தக் காரணத்தைச் சொல்லி சூத்
திரனாகிய சம்புகனை வெட்டினான் என்று சொல் கிறார்களோ, அதே தத்துவம்தான்
நண்பர்களே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகக்கூடாது. கடவுளை நீ நேராகத்
தொழுவதற்கு உரிமையில்லை.
எங்கள்மூலமாகத்தான், எங்கள் மொழியின்மூலமா
கத்தான் அந்த மந்திரமே உள்ளே போகவேண்டும் என்று சொல்லக் கூடிய ஒரு சூழல்
ஏற்பட்டிருக் கிறது என்றால், ராமன் என்ன மனிதநேயக்காரனா? மனிதத் தர்மம்
என்பது வேறு; மனுதர்மம் அதற்கு நேர் முற்றிலும் முரணான ஒன்று. ராமன் என்பது
ஒரு குறியீடு; அதுதான் மிக முக் கியம்.
அந்தக் குறியீடு என்ன? ஒரு மனிதன் அல்ல;
அவதாரமா? என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாம். மிகப்பெரும்பான்மையான
மக்களுக்கு எந்த உரிமையும் கூடாது; மிகப்பெரும்பான்மையான மக்கள் எல்லாம்
அடிமையாக இருக்க வேண்டும். கல்வி அற்றவர்களாக இருக்கவேண்டும். அடி
மைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது.
வருணாசிரம தருமத்திலே, பிராமணர்,
சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருண தருமம், அதற்கும்கீழே
பஞ்சமர்கள், அய்ந்தாவது ஜாதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எங்கள்
சகோதரர்கள் அய்ந்தாவது ஜாதி. எல்லா வகையான பெண்களும் அதற்கும் கீழே இதுதானே
மனுதர்ம அந்த அமைப்பு.
ஆரியர் - திராவிடர் போராட்டம்
ராமனுடைய அந்த வருணதர்மம் காப்பாற்றப்
படவேண்டும் என்று சொன்னால், அவதாரம் எடுத்ததே அதற்காகத்தான் என்று
சொன்னால், பேராசிரியர் அருணன் எழுதிய நூலில் தெளிவாக சொல்கிறார்:
ராட்சதர்களை ஏன் அழிக்கவேண்டும் என்று
எழுதும்போது, அவர்கள் வருணாசிரம தருமத் திற்கு எதிரிகள். இதுதான் ஆரியர் -
திராவிடர் போராட்டம் என்று இன்றைக்கு நாம் சொல்கிறோம் பாருங்கள்; அன்றைக்கு
அந்தப் போராட்டம். இதற்கு ஆதாரமாக, பண்டித ஜவகர்லால் அவர்கள் எழுதிய
அந்தப் பகுதிகள், அதையும் இந்நூலில் சொல்லியிருக்கிறார்கள்.
நம்பிக்கை என்று சொல்வதா?
ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கக்கூடிய
குணம் கூட ராமன் என்ற அந்தப் பாத்திரத்திற்குக் கிடை யவே கிடையாது
என்பதைத்தான் பல்வேறு சம்பவங்கள்மூலம் சொல்லலாம்.
ராமன்பாலம் என்று உச்சநீதிமன்றத்தில்போய்,
நம்பிக்கை என்று சொல்வதா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
யோசித்துப் பார்க்க வேண்டாமா? நம்பிக்கை என்று சொல்ல ஆரம்பித் தால் என்ன
ஆகும்? நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறதல்லவா, தன்மீது ஒருவன்
நீதிமன்றத்தில் வழக்குப் போடலாம். என்னவென்று?
எங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்குத்
தாத்தா இருந்த இடம் இதுதான். என்ன ஆதாரம் என்று நீதிமன்றம் கேட்டால்,
இல்லீங்க, எங்க தாத்தா என் கனவில் வந்து சொன்னார்; எங்க நம்பிக்கை என்று
சொன்னால், சட்டத்தில் ஆதாரம் உண்டா? இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? உலகம்
உருண்டை என்று நினைக்காமல், உலகம் தட்டை என்று நம்பிக் கொண்டிருந்தோம். அது
நம்பிக்கை - அதனை இன்றைக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா?
மின்வாரியத் தோழர் சுவிட்சைப் போட்டால்தானே விளக்கு எரியும்!
நீண்ட கால மரபாக கோவில்களில் தீப்பந்தம்
தானே ஏற்றிக் கொண்டிருந்தார்கள்; அங்கே விளக்குதானே இருந்தது. இன்றைக்கு
ஏன் மின்சார விளக்குப் போட்டிருக்கிறார்கள்? பவர் கட் என்றால்,
பகவானுக்கும்தானே பவர் கட். பகவான் தனியே மின்சாரத்தை விட்டுவிடுவாரா?
மீனாட்சி வந்து சுவிட்சைப் போட்டு விடுவாளா? என்னதான் அழகர் ஆற்றில்
இறங்கினாலும் சரி அல்லது சொக்க நாதப் பெருமாளும் மற்றவர்களும் ஊர்வலம்
வந்தாலும் சரி, சுவிட்சை நம்ம சர்வீஸ்ல இருக்கக் கூடிய மின்வாரியத் தோழர்
போட்டால்தானே விளக்கு எரியும்? பிளக்கை எடுத்துவிட்டால் விளக்கு எரியாதே!
கடவுளை மற; மனிதனை நினை! என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை நினைத்துப் பாருங்கள்.
பழையன கழிதலும், புதியன புகுதலும்
ஆகவே, இதனுடைய அடிப்படை என்ன? நம்பிக்கை,
வெறும் நம்பிக்கை என்று சொல்லக் கூடாது? இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால்
பாலம் கட்ட முடியுமா? அப்படியே இருந்தாலும், பழையன கழிதலும், புதியன
புகுதலும் என்பதற்கொப்ப, எது பயன்படுதோ, அதைப் பயன்படுத்துகிறோம்.
நமது முன்னோர்கள் கட்டை வண்டியைப்
பயன்படுத்தினார்கள்; நாம் இப்போது என்ன கட்டை வண்டியையா பயன்படுத்துகிறோம்?
இன்றைக்கு ஏன் விமானத்தில் போகிறோம்? ஏன் ராக்கெட்டில் போகிறோம்? தயவு
செய்து சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
இவ்வளவு காலமாக சேது சமுத்திரக் கால்வாய்
திட்டத்தை ஆதரித்துவிட்டு, திடீரென இந்தத் திட்டத்தை எதிர்த்து ஒரு போட
வேண்டிய காரணம் என்ன?
2001 ஆம் ஆண்டின் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை
இந்த தேர்தல் அறிக்கை அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2004 ஆம் ஆண்டின் நாடாளுமன்றப்
பொதுத் தேர்தல் அறிக்கை. இதிலே சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தைப்பற்றி
எழுதி இருக்கிற கருத்தினைத்தான் இங்கே உரை யாற்றிய தோழர்கள் எடுத்துச்
சொன்னார்கள். இதற்குமுன் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்
அறிக்கையிலும் இந்தத் திட்டத்தை வலியுறுத்தியுள்ளார்கள்.
2001 மே 10இல் அ.இ.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரு பகுதியை இங்கே படித்துக் காட்டுகிறேன்:
இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை
தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து
கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால், இலங்கையைச்
சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண் டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான், சேது
சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத் திற்கும், இலங்கையின்
தலைமன்னாருக்கும் இடை யில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல்
போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் ஆகியவைகளை அகற்றி
ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய
நோக்கம்.
இத்திட்டத்தை எதிர்ப்பது எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்வது அல்லவா?
இத்திட்டம் காலங்காலமாக ஏறத்தாழ 100
ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக, உருப்படியாக
உருவாகவில்லை. ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலைப்
பெற்ற பின், சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர்கள், குழுக்கள்
நியமிக்கப்பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு, பின் கிடப்பில்
போடப்பட்டுவிட்டது.
இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981 இல்
ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான்
கொடுத்தது. (இப்ப நடக்கிறது எம்.ஜி.ஆர். அரசு என்று சொன் னால்,
இத்திட்டத்திற்கு மறுப்பு சொல்வது என்பது எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்வது
அல்லவா? அண்ணா நாமம் வாழ்க! அது பரவாயில்லை. எம்.ஜி.ஆர். நாமமும் வாழ்கவா!)
-(தொடரும்)
No comments:
Post a Comment