இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கப்படுகிறது. இந்தத் தொடராவது அமைதியாக நடக்குமா? மன்ற உறுப்பினர்கள் தத்தம் தொகுதிப் பிரச்சினை பற்றிப் பேசுவார்களா? பேசத்தான் விடுவார்களா?
தொகுதியையும் தாண்டிப் பொதுப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா? அல்லது பேசத்தான் விடுவார்களா?
இந்த வினாக்கள் சர்வ சாதாரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன. அந்த அளவுக்கு நாட்டை நடத்த வேண்டியவர்கள் வழிகாட்ட வேண்டியவர்கள் தசை வலியைக் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தக் காட்சிகள் நேரடியாக தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் நேரில் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பவும் செய்யப்படுகிறது.
தங்களுக்கு வாக்களிக்கும் மகாராசர்களாகிய பொது மக்கள் தொலைக்காட்சி வழியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே என்ற அச்சமோ, கவலையோ, பண்பாடோ சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை.
தனிப்பட்ட யாரை மக்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்? ஏதோ ஒரு கட்சியின் வேட்பாள ராக நிற்கும்போது, தனிப்பட்டவர்கள் குறித்த கேள்வி எழுவதில்லை; எல்லாம் கூட்டத்தில் கோவிந்தா! தான்.
ஜனநாயக நாட்டின் மிகப் பெரிய அவையாகிய நாடாளுமன்றமே அமைதி குலைந்து அமளியாகும் போது, உள்ளாட்சி மன்றங்களின் போக்குகள் பற்றி விளக்கவா வேண்டும்? அவர்களும் தங்கள் பங்குக் குக் கூச்சல் போடுவது நாற்காலிகளைத் தூக்கி வீசுவது (நல்ல வாய்ப்பாக இந்த நோய் நாடாளு மன்றத்தைத் தொற்றவில்லை) மன்றத் தலைவர் களைச் சூழ்ந்து கொண்டு முழக்கமிடுவது இன்னோரன்ன ஜனநாயகத்தின் தலை சிறந்த கடமையை (?) ஆற்றி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் திட்டவட்டமான வகையில் ஏற்பாடுகள் வரையறுக்கப்படாத வரை ஜனநாயகம் என்பது அசல் கோமாளி நாயகமாகத்தான் ஆட்டம் போடும்; யாரும் யாரையும் கண்டிக்கவும் முடியாது.
இவ்வளவுக்கும் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டமன்றமாக இருந்தாலும் சரி, அவை நடைபெற மக்கள் தரும் வரிப் பணம் தானே பாழாய்ப் போகிறது?
இதற்காகத்தானா இவர்களுக்கு வாக்கு அளித்தோம் என்று வாக்காளர்கள் துணுக்குறும் வண்ணம் மாண்புமிகு உறுப்பினர்கள் நடந்து கொள்கிறார்கள்.
தொலைக்காட்சிகளில் அவை காட்டப் பெறுவதால் தங்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் என்று ஒருக்கால் எண்ணுகிறார்களோ, என்னவோ தெரியவில்லை.
அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு குடி மக்களையும், மாணவர்களையும் இளைஞர்களையும் கூடத் தவறான வழியில் போகச் செய்கிறது.
வேலியே பயிரை மேய்ந்தால் இந்த நிலைதான்.
இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆளும் கட்சியாக இருந்தால் இதோபதேசம் செய்வார்கள்; அவர்களே அடுத்து எதிர்க்கட்சியானால் அதனை மறந்து விட்டு சபையை நடத்த விடாமல் சண்டியர்த்தனம் செய்வார்கள்.
ஆளும் கட்சியின் குறிப்பிட்ட மசோதாக்களை எதிர்ப்பதில்கூட எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவும் வாய்ப்பு இல்லை.
என் மருமகள் என்ன உனக்கு இல்லை என்று சொல்லுவது. நான் சொல்கிறேன் - உனக்கு ஒன்றும் கிடையவே கிடையாது! என்று பிச்சைக்காரரைப் பார்த்து சத்தம் போடும் மாமியாரைப் போல அரசியல் கட்சிகள் நடந்து கொள்வது வெட்கக்கேடு!
மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இருந் தால் இந்த அரசியல்வாதிகளைக்கூட வழிக்குக் கொண்டு வரலாம்.
அரசியலால் பிளவுண்டு கிடக்கும் மக்கள் மத்தியிலே இந்த விழிப்புணர்வு ஏற்படாது; காரணம் எல்லாரும் ஆங்கே தனித் தனிதான்! எடுத்துக் காட்டு: சில்லறை வாணிபத்தில் அந்நிய முதலீடுகள் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் நெல்லிக்காய் மூட்டைகளாகச் சிதறி கிடப்பதாகும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment