ஈழத் தமிழர்கள் கடுமையான தாக்குதலுக்கு
ஆளான கால கட்டத்தில் - குறிப்பாக 1983இல் ஈழத்திலிருந்து தமிழர்கள்
தமிழ்நாட்டை நோக்கி அலை அலையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களில்
போராளிகளும் உண்டு.
அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் முக்கிய பாத்திரம் வகித்து அத்தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.
சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவின்யூவில் இத்திசையில் கூட்டப்பட்ட முதல் பொதுக் கூட்டத்தை திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு
கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தச் சிறப்புப் பொதுக்
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பழ.
நெடுமாறன், பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள்
போர் முரசு கொட்டினர்.
ஈழத் தமிழர்களுக்காகப் பல்வேறு இன்றியமையாத பொருள்கள் நன்கொடையாக பொது மக்களிடம் திரட்டப்பட்டன.
தமிழ் நாட்டில் பல இடங்களிலும்
போராளிகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் பிரதமர்
இந்திராகாந்தி, தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆகியோர் இதற்குப்
பச்சைக் கொடியும் காட்டினர்.
மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே
திராவிடர் கழகம் நடத்தியதுண்டு. ஈழத்திலிருந்து அமிர்தலிங்கம், கவிஞர் காசி
ஆனந்தன் உள்ளிட்டவர்கள் எல்லாம் அம்மாநாட்டில் கலந்து கொண்டு கர்ச்சனை
புரிந்தனர்.
ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் நடத்தப்பட்ட வெங் கொடுமைகளை விளக்கும் கண்காட்சியும் நாடகமும் அம்மாநாட்டில் இடம் பெற்று இருந்தன.
தமிழ்நாட்டில் பல அமைப்புகளும் போட்டிப்
போட்டுக் கொண்டு ஈழத் தமிழர்களுக்காக முன்வந்தன. அதன் பரிணாம வளர்ச்சிதான்
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான டெசோ உருவாகியது.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.
அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசியக் கட்சியின்
தலைவர் பழ. நெடுமாறன், பார்வேர்டு பிளாக் தலைவர் அய்யண்ணன் அம்பலம் ஆகியோர்
டெசோவில் அங்கம் வகித்தனர் - தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம்
பேரணியும், பொதுக் கூட்டமும் எழுச்சியுடன் நடத்தப்பட்டன.
தமிழ்நாடே கொந்தளிக்கும் எரிமலையாக விண்முட்ட எழுந்து நின்றது என்பதெல்லாம் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகள்.
இப்பொழுது டெசோ தனது இரண்டாம் நிலை
பணியைத் தொடங்கி இருக்கிறது. அதன் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநாடு
உலகத் தமிழர்களை மட்டுமல்ல; மனித உரிமைப் பேணும் உலக மக்களையும், அய்.நா.
போன்ற அமைப்புகளையும் பெரிதும் ஈர்க்கச் செய்தது. அதில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் மிகச் சரியாக வடித்தெடுக்கப்பட்டவை என்று பொது நிலையாளர்களின்
மத்தியில்கூட கருத்து வலுப் பெற்றது.
டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை அதிகாரப் பூர்வமாக அய்.நா.வின் பொதுச் செயலாளரிடம் அளிப்பது என்பது மிக முக்கியமான செயல்பாடாகும்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்,
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர்
நியூயார்க்குக்குச் சென்று (1.11.2012) அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளர்
யான் லிசானைச் சந்தித்துள்ளனர். டெசோ தீர்மானங்கள் அவைபற்றிய விளக்கங்கள்
எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
அய்.நா. துணைப் பொதுச் செயலாளர் கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கக் கூடிய வகையில் கூறப் பட்டுள்ளன.
அய்.நா.வின் துணைப் பொதுச் செயலாளரும்
பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து உங்கள் கோரிக்கைகளை அய்.நா. பரிசீலிக்கும்
என்ற நம்பிக்கை மிகுந்த பதிலினை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு உலகளாவிய அளவில் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை. இப்பொழுது தேவையெல்லாம்
இதனை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழர்களின் செயல்பாடுகள் அமைய
வேண்டும்.
இதிலும் அரசியல் என்ற கல்லைத் தூக்கி எறிந்து, எதிரிகள் பலன் அடையும் அலைகளை எழுப்பிட வேண்டாம் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.
29.10.2012 அன்று சென்னை - பெரியார்
திடலில் திராவிடர் கழகம் நடத்திய சிறப்புக் கூட்டத்திலும் திராவிடர் கழகத்
தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முக்கிய வேண்டுகோளாக
இதனைத்தான் முன் வைத்தார்.
கடந்த காலத்தைக் கிளற ஆரம்பித்தால்
ஒவ்வொரு தரப்பிலும் கேள்வி - பதில் நிகழ்ச்சிகள், அதிரடியான பட்டிமன்றங்கள்
- எரிந்த கட்சி - எரியாத கட்சி லாவணிகள் தான் நடைபெறும்.
இடையில் புகுந்து கயிறு திரிக்கும்
நிரந்தர எதிரிகளுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் ஆகிவிடும். இலங்கை
ராஜபக்சேவுக்கும் புதுத் தெம்பை ஊட்டும். மிக நெருக்கடியான கால கட்டத்தில்
இலங்கை அதிபர் ராஜபக்சே மாட்டிக் கொண்டு திணறுகிறார். இந்தச்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆளுக்கொரு தர்மஅடி கொடுக்க வேண்டுமே தவிர,
வேறு கண்ணோட்டம் வேண்டாமே!
No comments:
Post a Comment