Saturday, October 6, 2012

பெருஞ்சித்திரனாரின் வாழ்வியல் முத்துகள்!


பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அரிய, சிறந்த, கவிதைகள் சிலவற்றை வாழ்வியலுக்குப் பயன்படும் வகையில் சூலூர் தன்மானத் தோழர் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் தொகுத்துள்ளார்.
அதையே தனது அன்பு மகள் செல்வி. க.தாய்மொழி அவர்களுக்கும் செல்வன் இளந்தமிழனுக்கும் நடை பெற்ற வாழ்விணையேற்பு விழாவின் போது அன்பளிப்பு நூலாக வந்தோ ருக்கும், வராதோருக்கும் தந்து மகிழும் வாய்ப்பை கோவை விஜயா பதிப்பகம் உரிமையாளர் பதிப்பக ஏறு தமிழ் இன உணர்வாளர் மு.வேலாயுதம் அவர்கள் வெளியிட்டு அளித்துள்ளார்.
மணவிழா நாள் 06-11-2011 ஏறத்தாழ ஓராண்டு கழித்து இது பற்றி எழுதிடும் நிலைக்குக் காரணம், நூல்கள் குவியலில் இது சிக்கி விடுதலை ஆனதால் இந்த தவக்கம்.
தன்மானப் புலவர் செந்தலை கவுதமன் அவர்கள் தந்தை செயல்வீரர் செந்தலை நடராசன் முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தவர். செந்தலையில் பல கால முன்பே வரகூர் நடராசனின் தோழராக இருந்து, கழகப் போராட் டங்களில் கலந்து கொண்ட கருஞ் சட்டையாளர். தந்தை பெரியார் காலம் முதல் இன்று வரை மாறாத கட்டுப் பாட்டின் சின்னம். அவரது குடும்பத் தவர்களும் சுயமரியாதை வீரர்களாகவே திகழ்வது அந்தக் கொள்கை ஆயிரம் காலத்துப் பயிர் என்பதைக் காட்டும்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை எனது பிறந்த ஊராகிய கடலூரில் அவர் அஞ்சல் துறையில் பழைய பெயருடன் இருந்தபோதே திராவிடர் இயக்கப் பற்றாளர் - எனது மூத்த சகோதரர் திரு.கோவிந்தராசனின் நெருங்கிய நண்பர். என்னையும் மாணவப் பருவம் முதல் அறிந்து பழகியவர்.
நறுக்குத் தெறித்தாற் போன்ற நயம் பொங்கும் சிந்தனை வீச்சுகளைக் கொண்ட அக்கவிதை வரிகள் வாழ்வியல்  ஒளியை வையத்தவருக்கு அளிக்கும் வைரவரிகள்.
உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்து பார்!
தள்ளத் தகுவன உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்று    அறிவு நேர்வதைக்
கொள்ள முயற்சி செய்!   கொடுநினைவு அகற்று!
######################
இன்றைய நாள் நினை; இனிவரும் நாள் நினை;
என்றும் புதியன், நீ  யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!   அனைத்தும் இனியன!
ஒன்று, கைபோகின் ஒன்றுடன் கைவரும்!
#####################
புகழ்ச்சியின் மயக்கறு!    புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு; எள்ளலை எடுத்தெறி.
நிகழ்ச்சியை வரிசை செய்;   நினைவை உறுதி செய்,
மகிழ்ச்சியும் துயரமும்   மனத்தின் செயல்களே...
#####################
நகைப்பவர் யாவரும்   நண்பர்கள் ஆகார்!
தொகைப் பெருக்கென்பதும்   தோழமைக்கில்லை;
மிகைப்பட பழகுதல்
மிகுதுயர் செய்யும்!
பகைப்பவர் என்பவர்   பழகி இருந்தவர்.
#####################
உன்றன் விழிகளை   உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை  உலகெலாம் பரப்புக
குன்று பார்! கதிர்பார்!  கோடி விண்மீன் பார்
நின்று பார்! நடந்து பார்!   சிறுநீ, உலகம்!
######################
சாதிக் குப்பையைச்  சாம்பலாக்கு!
பாதியை அறிவுப்   பயிருக்கு உரமிடு!
மீதியை ஒற்றுமை  மேன்மைக்கு உரமிடு
உலகம் எல்லாம்     ஒரு குலம் என்றும்
உயர்ந்த கொள்கைக்கு    உரமிட்டு வளர்க்க!
########################
உன்றனுக்கு    முன்னும் பின்னும்
உலகம் உண்டாம்    என்பதெண்ணி வாழ்வாய்! - செய்யும்
நன்றிருக்கும்!   தீ செயின் தாழ்வாய்!
இப்படிப் பல முத்துக்கள்! மருந்துக் குப்பிகள்! (Capsules)   வாழ்க்கைக்குப் பயன்படுபவையானவை!
படித்துப் பயன் பெறுங்கள்!



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...