Sunday, September 23, 2012

ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாகங்களை இந்தியா தாங்காது! மத்திய அமைச்சர் கபில்சிபல்


central-minister
(15.9.2012 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் மத்திய அமைச்சர் கபில்சிபல் ‘Can’t Have Multiple Executives’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை முரசொலி நாளிதழ் தமிழாக்கம் செய்து வெளியிட்ட கட்டுரை)
இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களுள் ஒன்றான நிர்வாகத்தைத் தவிர, மற்ற அமைப்புகள் புதிய கொள்கைகளை வகுக்க முயலும்போது, அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக் கும். புதிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், அதைச் செயல்படுத்தும் அதிகாரமும் மத்திய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.
கொள்கைகளைத் தவறாக வகுத்தாலோ அல்லது செயல்படுத்தினாலோ, அதற்காக மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் மத்திய அரசைக் கேள்வி கேட்பார்கள். நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம் மற்றும் விவாதங்களில் இது எதிரொலிக்கும்.
அரசின் முடிவுகள் அரசியல் சட்டத்திற்கு உடன் படாததாக இருந்தால், அது நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே, அரசு நிர்வாகம் என்பது பொறுப்புடைமைத்தன்மை கொண்ட அமைப் பாகும்.
சி.ஏ.ஜி. என்பவர் கொள்கை வகுப்பவர் அல்லர்!
சமீப காலமாக அரசியல் சட்டப்படியான அமைப்புகள் கொள்கை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மரபு மீறலுக்கு சி.ஏ.ஜி. தான் (இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) ஒளிரும் உதாரணமாகும்.
அரசியல் சட்டத்தின்படி 149ஆவது பிரிவின்படி சி.ஏ.ஜி. யின் பணி என்பது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மத்திய அரசின் நிதிக் கணக்குகளையும், மாநில அரசுகளின் நிதிக் கணக்குகளையும் தணிக்கை செய்வது தான். அரசின் அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், அனைத்து செலவுகளும் விதிகளுக்குட்பட்டிருப்பதையும் உறுதி செய்வதற்கான அதிகாரம் சி.ஏ.ஜி.க்கு உண்டு. ஆனால், சி.ஏ.ஜி. என்பவர் கொள்கை வகுப்பாளர் அல்லர்; அதுதான் உண்மை!
ஒரு குறிப்பிட்ட இயற்கை வளம் ஏலத்தில் விடப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதை சி.ஏ.ஜி. முடிவு செய்ய முடியாது. அவ்வாறு செய்வது தணிக்கைப் பணி அல்ல! இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது என்பது பட்ஜெட் ஒதுக்கீட்டைப் போன்றதல்ல; அதன் பயன்பாடும் பட்ஜெட் ஒதுக்கீட்டைப் போன்றதல்ல!
ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை, அப்போது நிலவும் சூழலைப் பொறுத்து - ஒரு குறிப்பிட்ட சமூக, பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒதுக்கீடு செய்வதற்கான அதிகாரம் அரசுக்கு உண்டு.
ஆகாஷ் கணினி விவகாரம்
இந்தியாவில் 1 கோடியே 10 லட்சம் மேனிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆகாஷ் கணினியை இலவசமாக வழங்குவது என்று முடிவெடுத்தால், அந்தக் கொள்கை முடிவு பற்றிக் கருத்துக் கூறும் அதிகாரம் சி.ஏ.ஜி.க்கு இல்லை. இன்னும் கேட்டால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தனக்கு வரும் வருவாயை அரசு இழக்கலாம். ஆகாஷ் கணினி விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலோ அல்லது ஏலத்தில் விடப் பட்டாலோ அதனால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், அது அரசின் நோக்கமல்ல!
ஆகாஷ் கணினியை மாணவர்களுக்கு எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வது சி.ஏ.ஜி.யின் அதிகார வரம்புக்குட்பட்டதல்ல. வேண்டு மானால், தனது அதிகாரம் குறித்த, தனிப்பட்ட புரிதலின் அடிப்படையில் ஆகாஷ் கணினியைப் பெற்ற மாணவர்களில் யார் யாருக்கெல்லாம் அதற்கான கட்டணத்தைச் செலுத்து வதற்கான வசதி இருக் கிறதோ, அவர்களிடமிருந்து கணினிக்கான முழுவிலை யையும் அரசு வசூலித் திருக்க வேண்டும். அவ் வாறு செய்யாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறி, எதிர்ப்பு தெரிவிக்க லாம். அவ்வாறு சி.ஏ.ஜி. எதிர்ப்பு தெரிவித்தால், அரசு என்ன செய்யலாம்?
பொதுக் கணக்குக் குழுவின் செயல்பாடு
இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் அரசு எழுப்ப முடியாது. ஏனெனில் சி.ஏ.ஜி.யின் அறிக்கை முதன்முதலில் பொதுக்கணக்குக் குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும். பின்னர் சி.ஏ.ஜி.யின் அறிக்கையைப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்து, வரைவு அறிக்கையைத் தயாரிக்கும். அந்த வரைவு அறிக்கை பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, இறுதி அறிக்கை யாக நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பப்படும். அந்த அறிக்கையில் சி.ஏ.ஜி. அறிக்கை மீதான பொதுக்கணக்குக் குழுவின் முடிவுகளும், பரிந்துரை களும் இடம்பெற்றிருக்கும்.
பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை மீது விவாதம் நடத்தும் அதிகாரம் மக்களவைக்கு உண்டு என்ற போதிலும், பெரும்பாலும் அத்தகைய விவாதம் நடைபெறுவதில்லை. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்களை உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குறிப்பிடுவார்கள் என்றபோதிலும், இது தொடர்பாகத் தனி விவாதம் நடப்பதில்லை.
சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது
ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் அவையின் முன் கொண்டு வரப்பட்டு, அது குறித்த தீர்மானத்தின்மீது விவாதம் நடத்தப்பட்டாலும், இறுதியில் அது வாக்கெடுப்புக்கு விடப்படாது. சி.ஏ.ஜி. தெரிவிக்கும் கருத்துக்கள் நிச்சயமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலமாக மாயமாகி விடாது. சி.ஏ.ஜி.யின் அறிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் முடியாது. ஏனெனில், சி.ஏ.ஜி. யின் அறிக்கையால் யாரையும் கட்டுப்படுத்த முடியாது; இதற்கு அரசிடம் எந்தத் தீர்வும் இல்லை.
சி.ஏ.ஜி.யின் அறிக்கையும் கண்டுபிடிப்புகளும் பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்காகத் தாக்கல் செய்வதுடன் அதன் பணி முடிவடைந்து விடுகிறது. வேறெந்த ஒரு அரசியல் சாசன அமைப்புக்கும் பதில் கூறும் கடமை சி.ஏ.ஜி.க்கு இல்லை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக வருவாய் கிடைத்திருக்கும், அவ்வாறு செய்யாத தால் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்று கொள்கை திணிப்பைச் செய்து, அதனடிப் படையில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கை பொதுக் கருத்தில் பெரும் திரிபை ஏற்படுத்திவிட்டது. இந்த விஷயத்தில் உண்மை எங்கோ தொலைந்து விட்டது.
அதன் விளைவாக, நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விடாததால், தனியார் நிறுவனங்க ளுக்கு 1,85,591.34 கோடி லாபம் கிடைக்கக் கூடும் என்று கணக்கிடும் அளவுக்கு சி.ஏ.ஜி.க்குத் துணிச்சல் ஏற்பட் டிருக்கிறது.
இத்தகைய தணிக்கை அறிக்கையால் நாடாளு மன்றம் ஸ்தம்பித்ததுடன், அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் முடங்கிவிட்டன. சி.ஏ.ஜி.யின் கொள் கை பரிந்துரைகள் காரணமாக நாம் இப்போது அரசியல் சட்டசிக்கலில் சிக்கிக் கொண்டிருக் கிறோம்.
கொள்கை முடிவுகளைப் பரிந்துரைப்பது அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாகும்
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2008 ஜனவரி 10 அன்று வழங்கப்பட்ட அனைத்து 2-ஜி உரிமங்களையும் ரத்து செய்வதாக அறிவித் தது, சி.ஏ.ஜி.க்குப் பெரும் துணிச்சலை ஏற்படுத்தியிருக்கக் கூடும். நிர்வாக முடிவுகளை ரத்து செய்வதற்கான நீதிமன்ற உரிமைகள் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது. எனினும், இயற்கை வளங்கள் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறும்போது, அதை எதிர்த்து வினா எழுப்பலாம். அவ்வாறு நீதிமன்றங்கள் கொள்கை பரிந்துரைகளை அளிப்பதென்பது, அதன் அதிகாரத்தைப் பயன் படுத்துவதில் உள்ள குறையாகும்.
ஏற்கெனவே நான் கூறியபடி, அரசு நிர்வாகத்தால் உருவாக் கப்படும் கொள்கை என்பது நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படக் கூடியதாகும். ஆனால், நீதிமன்றம் பரிந் துரைக்கும் கொள்கை என்பது நாடாளுமன்றத்தால் ஆய்வு செய்ய முடியாது என்பதுடன், நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த வாய்ப் பற்றதாகும். எனவே, நீதிமன்றங்களோ அல்லது சி.ஏ.ஜி.யோ கொள்கை முடிவு களைப் பரிந்துரைப்பது என்பது அரசியல் சட்டப்படியான அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி, வலிமையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது தத்துவத்திற்கு எதிரான, தார்மீக நெறியற்ற செயலாகும்.
மக்கள் நலம் காப்பதே அரசின் நோக்கம்
வருவாயைப் பெருக்குவதற்கான வணிகத்தில் அரசு ஈடு பட்டிருக்க வில்லை. தன் வருவாயைப் பெருக்கிக் கொள்வ தற்குப் பதில், சாதாரண மக்களின் வருவாயைப் பெருக்கு வதற்கான சூழலை ஏற்படுத்துவ தற்கான நலம் விரும்பும் அரசை உருவாக்குவதுதான் எங்களின் நோக்கமாகும்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற் பட்டாலும், அது தொலை அடர்த்தியை அதிகரிப்பதற்கும், பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் உதவியது. இதனால் அரசின் வருவாய் பெருகாவிட்டாலும், மக்கள் பயனடைந்தனர்.
அதன்பின் 2010ஆம் ஆண்டில் 3-ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விட்டதின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததால், அரசு பயன் பெற்றது. ஆனால் அதன் பின் இன்றுவரை சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இன்று வரை இந்தியாவில் 3-ஜி சேவைகள் தொடங்கப்படவில்லை. இந்தச் சேவை தொடங் கப்படாத நிலையில், வங்கியிலிருந்து செல்பேசி நிறுவனங் கள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இன்றைய நிலையில் தொலைத் தொடர்புத் துறை கடுமையான கடன் வலையில் சிக்கியிருக்கிறது. இன்னும் மீளவில்லை.
இந்திய அரசை ஒரே நேரத்தில் மூன்று நிர்வாகங்கள் நிர்வகிப்பதை அனுமதிக்க முடியாது. இதன் விளைவுகள் இப்போதே வெளியில் தெரிய தொடங்கிவிட்டன. வலிமையாக இருந்த தொலைத் தொடர்புத் துறை இப்போது நலிவடைந்து வருகிறது. 2 ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இரு தரப்பு முதலீட்டு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய அரசு மீது பல்வேறு வழக்குகள் தொடரப்படவுள்ளன.
பல லட்சக்கணக்கான டாலர் தற்போது சிக்கலில் உள்ளது. எந்தத் தவறும் செய்யாத செல்பேசி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை இழந்திருக் கின்றன. இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று வெளிநாட்டு முதலீட் டாளர்கள் கருதும் சூழல் ஏற்பட்டால், அதை நம்மால் சமாளிக்க முடியாது. தனிப்பட்ட ஒதுக்கீடுகளை, நீதிமன்றங்கள் ரத்து செய்யக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. குற்ற நோக்கம் கொண்ட தனிப்பட்ட செயல்பாடுகள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டியவை ஆகும். குற்றத் தவறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேபோல் அரசு, தன் நிதியைத் தவறாகப் பயன்படுத்தினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பயன் பாட்டிற் கான பட்ஜெட் ஒதுக்கீட்டைச் சிறப்பாகப் பயன்படுத்தா விட் டாலோ, அதற்காக அரசைக் குறைகூறும் உரிமை சி.ஏ.ஜி.க்கு உண்டு.
ஆனால், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காகப் பொதுச் சொத்துக்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றங் களோ, சி.ஏ.ஜி.யோ அல்ல!
(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, 15.09.2012)
- நன்றி: முரசொலி (22.9.2012)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...