Friday, August 10, 2012

மீண்டு(ம்) வந்துள்ளேன் உழைப்பதற்கு! தமிழர் தலைவர் தம் உருக்கமிகு அறிக்கை


புதியதோர் உலகு செய்ய புத்தாக்கத்துடன் பயணிப்பதற்கு மீண்டு வந்துள்ளேன், மீண்டும் வந்துள்ளேன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கழகக் குடும்பத்தவர்களே, நலம் விரும்பும் நமது இன உணர்வாளர்களான நண்பர்களே,
அன்பு வணக்கம். நேற்று (9.8.2012) வியாழன் காலை சென்னை வந்து சேர்ந்தோம். பயணக் களைப்பு, இரு வேறு பகுதிகளின் கால மாற்றத்தினால் ஏற்படும் சோர்வு - இவை காரணமாக வீட்டில் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்து, பணிகளுக்கு ஆயத்தமாகி உள்ளேன்.
இந்த நாள்...
இன்று (10.8.2012) என்னை விடுதலை ஆசிரியர் பொறுப்பில் நியமித்து, மற்றவர் களுக்குத் தராத சுதந்தரத்தை - அவரது ஏகபோகத்தில் விடுதலை நாளேட்டை விட்டு விடுகிறேன் என்று அறியாத இளைஞனாக இருந்த என்மீது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையைச் சுமந்து, அளவுக்கு மீறிய பொறுப்புணர்ச்சியையும், கடமை உணர்வையும் காட்டவேண்டும் என்ற மன உறுதியை மேற்கொண்டேன்.
எம்மைச் செயல்பட வைப்பது...
பெரியார்தம் ஒளி எம்மை தடம் மாறாமல் செயல்பட வழிகாட்டியது. அன்னை மணியம்மை யாரின் அன்பும், ஆதரவும், பாசமும், கழகக் குடும்பத்தினரின் உற்சாகமும், ஊக்கமும் என்னை கடந்த 50 ஆண்டுகளாக அலுப்பு அயர்வின்றி செயல்படுத்தி வருகிறது. நம் ஆசான் உருவாக்கிய வழிகாட்டும் நெறிமுறை கள் எனக்குத் தக்கதோர் புரசிஜர்கோட் (Procedure Code) ஆகி இருக்கின்றன.
இதைத்தான் எனக்குப் பெரியார் தந்த புத்தி போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறி வருகிறேன். இதை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தெரியாத சிலரின் அரைவேக் காட்டு விமர்சனங்களைத் தூசி தட்டிவிட்டு பணியைத் தொடருவோம்.
கழகப் பெருமக்களின் மறைவு!
அமெரிக்கப் பயணத்தின்போது இழக்கப் படக் கூடாத சமூக விஞ்ஞானிகளைப் போன்ற நம் இயக்கச் சுயமரியாதைச் சிங்கங்கள், கொள்கைத் தங்கங்கள் பலரது மறைவு எம்மை மிகவும் வருத்தியது; வாட்டி மனவேதனையை அடையச் செய்தது!
என்ன செய்வது! இயற்கையின் கோணல் புத்தி அது!
லட்சிய வீரர்கள் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகுவாளர்கள் எஸ்.எஸ். மணியம், மூத்த பெரியார் பெருந்தொண்டர் எஸ்.கே. சின்னப்பன், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோமல் நடராசன், சட்ட எரிப்பு வீரர் எடகீழையூர் து. கண்ணுசாமி, காஞ்சிபுரம் கழக ஆர்வலர் டாக்டர் இராகவன், வாஞ்சைமிகு தஞ்சை ப. நாராயணசாமி, நாஞ்சில் ஆறுமுகம் மற்றும் பெரியார் விருது பெற்று, கணினித் துறையில் புதுமைகளைப் புகுத்திய ஆண்டோ பீட்டர்.... முதலியவர்கள் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவர்களுக்கு நமது வீர வணக்கங்கள்!
என்னிடம் ஏற்படுத்திய நம்பிக்கை
துன்பமும், இன்பமும் கலந்து மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்பது! அதன்படி நான் தமிழ்நாட்டில் இருக்காமல், அமெரிக் காவில் பல கல்விப் பல்கலைக் கழகங்கள் நடப்பதை அறிந்தும், இதய நெருக்கடி காரண மாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதால் ஏற்பட்ட கால நீட்டத்தில் நாளும் விடாமல் இணையத்தின்மூலம் கழகச் செய்திகளையும், பிரச்சாரக் களங்கள்பற்றியும், விடுதலை சந்தா சேர்க்கும் கடமையாற்றுவதில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட மற்றும் அனைத்துக் கழகப் பொறுப்பாளர்கள் காட்டிய ஆர்வம், கடமை உணர்வு மிகுந்த என்னுள் நம்பிக்கையை ஏற்படுத்தின.
மீண்டு(ம்) வந்துள்ளேன்!
அமெரிக்க மருத்துவமனைக்குள்ளே சென்று மிகவும் அபாயத்தை உள்ளடக்கிய ஒரு இதய சிகிச்சைக்கு ஆயத்தமானபோது, அய்யாவும், அம்மாவும், கழகத் தோழர்களும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிய நிம்மதி எனக்குத் துணிவினை, வலுவினைத் தந்தது.
மீண்டு வந்துள்ளேன்!
மீண்டும் வந்துள்ளேன் - உழைப்பதற்கு!!
இனி என் கடன் என்றும்போல் பணி செய்து கிடப்பதே!
பயணங்கள் முடிவதில்லை - பாதைகள் செப்பனிடப்படுகின்றன.
விடுதலை பரவாத கிராமம் - வீடு இல்லை என்ற அளவுக்கு - புதுப்புது உத்திகள் - புதுப்புது முயற்சிகளை உருவாக்கி ஆசானின் கொள்கைகளை அகில உலக மயமாக்குவோம்!
அதற்கு அய்யா தந்த அறிவாயுதம் கூர்மழுங்காது; வாளின் வலிமையைவிட இந்த ஏட்டின் வல்லமை அதிகம்!
புதியதோர் உலகு செய்வோம்!
புதியதோர் உலகு செய்ய, புத்தாக்கத்துடன், புத்தெழுச்சியுடன் பயணிப்போம்!
உடனடியாக சென்னையில் டெசோ நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் சந்திப்போம்!
வாருங்கள் தோழர்களே, தோழியர்களே!
நன்றி! நன்றி!! நன்றி!!!

கி.வீரமணி,
ஆசிரியர், விடுதலை


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...