Thursday, August 30, 2012

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைப் பாருங்கள்!


மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையை முன்னிலைப் படுத்தி ஒரு பிரதமரை மாற்றலாம். அதன் மூலம் தேர்தலில் அறுவடை காணலாம் என்ற நப்பாசையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாண ஆட்டம் போடுகிறது.
சாகப் போகிறவனுக்கு ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் பெரிய தூணாகத் தெரியும் என்பதுபோல பி.ஜே.பி. நடந்து கொள்கிறது.  பிஜேபி ஆளும் மாநிலங்களிலேயே ஆட்சியும், கட்சியும் சவுத்துப் போய்விட்டன.
2014 மக்களவை  தேர்தலில் காங்கிரசும் ஆட்சியை பிடிக்காது; பி.ஜே.பி.யும் ஆட்சியைப் பிடிக்காது என்று பி.ஜே.பி.யின் மூத்தத் தலைவரும், பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராகக் கருதப்பட்ட வருமான லால்கிஷண் அத்வானி கையை விரித்துவிட்டார். அது கட்சிக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் அதற்குச் சப்பைக் கட்டுகட்டும் ஒரு வேலையிலும் இறங்கினர். இப்படி தன்னம்பிக்கை இழந்து தளர்ந்துபோன கட்சிக்கு இந்த நிலக்கரிச் சுரங்கம் பகிர்வுபற்றி தணிக்கை அதிகாரியின் அறிக்கை உயிர் தண்ணீர் ஊற்றி இருப்பதாக நம்புகிறார்கள்.
இது ஒரு யூக நட்டம் என்று சொல்லப்படுவது ஆகும். ஆனால் நிஜ ஊழல்களைச் செய்ததில் பிஜேபியை அடித்து வீழ்த்த வேறு கட்சிகளோ தலைவர்களோ உண்டா?
இதே பிரச்சினையில் பிஜேபி ஆளும் மாநில முதல்வர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களே என்ற வினாவுக்கு அறிவு நாணயமாகப் பதில் சொல்ல முடியவில்லை அந்தக் கட்சியால். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநில பிஜேபி அரசுகளும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் குற்றச்சாற்றுக்கு ஆளானதுபற்றி பேச்சு மூச்சு இல்லையே - ஏன்?
இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்று பிரதமர் ஒளியூட்டமாக அறிவித்த நிலையில், அதனை எதிர் கொள்ள பிஜேபிக்குத் துணிவு இல்லையே  - ஏன்?
பொதுவாக இதுபோன்ற பிரச்சினையில் குற்றச் சாற்றுக்கு ஆளானவர்கள்தான் விவாதங்களை எதிர் கொள்ள அஞ்சுவார்கள் இங்கு வேடிக்கை என்னவென்றால் குற்றச்சாற்றைச் சொல்லுகிறார்கள் அஞ்சுகிறார்கள். குற்றச்சாற்றை சுமந்தவர்கள் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார்கள். எப்படி இருக்கிறது கதை!
மேலும், ஊழல் என்ற விடயத்தில் பிஜேபி மார்தட்டலாமா? அவர்கள் ஆளும் எந்த மாநிலத்தில் ஊழல் இல்லை? கருநாடகாவைவிட ஊழலுக்கு இன்னொரு மாநிலம் உண்டா?
கருநாடக மாநிலத்தில் அமைச்சர்களாக இருந்த ரெட்டிசகோதரர்கள் ஏன் சிறைபிடிக்கப்பட்டனர்? கருநாடக மாநில முதல் அமைச்சர் எடியூரப்பா ஏன் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது? இன்னும்  பிணையில்தானே இருக்கிறார்?
உத்தமபுத்திரன் பிஜேபி ஆளும் குஜராத்தில்  பாருங்கள் - பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று வாய் ஒழுக எழுதும் ஊடகங்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி; அறிவு நாணயத்துடன் பதில் சொல்வார்களா?
பி.ஜே.பி. நரேந்திர மோடியின் குஜராத் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடுகளைச் செய்துள்ள தாக இதே இந்தியத் தலைமைக் கணக்கு அதிகாரி கூறியுள்ளாரே!
குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால், 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
தேவையற்ற முறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் கவுதம் அதானி, அதானி மின்னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின்  ரிலையன்ஸ் குழுமம் ஆகியவையும் அடங்கும்.
அடக்க விலைக்கும் குறைவான விலையில் எரிவாயுவை விற்ற வகையில்  71 கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவனத்திற்கும், கெப்பாசிடி கட்டணங்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம் 12.02 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கும்  குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் லாபம் அளித்துள்ளது. குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் ஒரு நடைமேடையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டியதால்,  நடை மேடையின் வாழ்நாள் உறுதித் தன்மைக்கு  குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில், முறையான நிதி மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற் கொள்ளாமல் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை   குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் மேற் கொண்டதன் காரணமாகவே  பெரும்பாலான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் அளவு ரூ. 10.223 கோடியாக இருந்தது, இறுதியில் 130 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சட்டமன்ற அவையில் இறுதி வேலைநாளில் வைத்ததன் மூலம், அதன் மீது அவையில் விவாதம் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் மோடி செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இதற்குப் பதில் என்ன? வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீராக!

1 comment:

Anonymous said...

nice post....

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...