பார்ப்பனர்களின் பாதுகாவலனாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மூதறிஞர் சோ.ராமசாமியின் இந்த இதழில் ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். எழுதியவர் எஸ்.குருமூர்த்தி என்பார். பிராமணதர்மம் பிறழாமல் _புரோகிதம் பார்ப்பதற்குப் பதில் பெரு முதலாளிகளின் கள்ளக்கணக்குப் பேரேடுகளைப் புரட்டிக் காசு பார்ப்பவர். ஆர்.எஸ்.எஸ்.காரர். அதன் ஆக்டோபஸ் கரங்களில் ஒன்றான சுதேசி ஜாக்ரான் மஞ்ச்சின் தலைவர். அதாவது உள்நாட்டுப் பொருள்களை மட்டுமே வாங்கவேண்டும், விதேசிப் பொருள்களை வாங்கக்கூடாது எனப் பிரசங்கம் செய்பவர். இதற்காக ஒரு முறை மதுரை மூதூருக்குப் போய்க் கல்லூரி மாணவர்களை 30_40 பேர் அடங்கிய மாபெரும் கூட்டத்தில் பிரசங்கம் செய்தார். சென்னையிலிருந்து மதுரைக்கு விதேசிக் கண்டுபிடிப்பான விமானத்தில்தான் பயணம் செய்தார். மாட்டு வண்டியில் போகவில்லை. வலது கையில் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டிருப்பார்.
அது சுவிஸ் அல்லது ஜப்பான் வாட்ச் ஆக இருக்கலாம். அல்லது விதேசி கண்டுபிடிப்பை பாரதத்திலேயே உற்பத்தி செய்கிறார்களே, அதுவாகக் கூட இருக்கலாம். ஆக, ஊருக்குத்தான் உபதேசம்! தனக்கல்ல என வாழ்பவர்! தலைப்பே தவறு
கட்டுரையின் தலைப்பு கடவுள் அணுவும் சிவனின் நடனமும் என்பது. அண்மையில் கண்டறியப்பட்ட ஹிக்ஸ்போசான் என்பதை அவர் கடவுள் அணு என்கிறார். சில ஏடுகள் கடவுள் துகள் என்றன. தூள் தூள் ஆன கடவுள்என்று உண்மை தலைப்பிட்டது. குருமூர்த்தி கொடுத்த தலைப்பு சரியா? ஏற்கெனவே கண்டறியப்பட்ட 12 துகள்களும் 4 விசைகளும் மட்டுமே பேரண்டத்தை உருவாக்கின எனக் கூறிட இயலவில்லை; இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது, அதனையும் கண்டறியவேண்டும் என்கிற ஆய்வு ஆர்வத்தை 1964இல் விதைத்தவர் பீட்டர் ஹிக்ஸ் எனும் நாத்திகரான விஞ்ஞானி. அவரின் பெயராலும், இந்தத் துறையில் 1930 வாக்கில் ஆய்வு செய்த இந்திய அறிவியலாளர் சத்யேந்திரநாத் போஸ் பெயராலும் இது ஹிக்ஸ் போசான் என்று அழைக்கப்படுகிறது.
கடவுள் வந்த கதை
ஹிக்ஸ் சொல்லி 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1993இல் லெயான் மேக்ஸ் லெடர்மேன் எனும் விஞ்ஞானி நூல் எழுதினார். அதன் தலைப்பு காட் டாம்ன் பார்டிக்ள் என்பதுதான். இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த வியாபாரி வணிகநோக்கில் கவர்ச்சியான தலைப்பு தருவதாகக் கருதிக் கொண்டு (GOD PARTICLE) என்று தந்துவிட்டார். அதன்படிகூட கடவுள் துகள் என்றுதான் தமிழில் குறிப்பிட வேண்டும். குரூமூர்த்தி அய்யர்வாள், அக்கிரகாரத் தன்மையோடு கடவுள் அணு என்றாக்கி விட்டார்.
செய்யலாமா? செய்து வந்தனர் பார்ப்பனர். இறந்த காலத்தில் என்ன, நிகழ்காலத்திலும் செய்கிறோம் என்று பூணூல் தட்டும் (மார்தட்டுவதும், தொடை தட்டுவதும் வீரர்கள் செய்வது என்பதால் இந்தப் புது சொல்லாடல்) செயலில் இறங்கியிருக்கிறார் கோயங்கா குடும்பக் கணக்குப்பிள்ளை.
பார்ப்பனர் ஏடெழுதும் பாழ் நிலைமை போகுமட்டும்
பைந்தமிழ்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும்
நன்மையில்லை என எழுதினார் புரட்சிக்கவிஞர்! குருமூர்த்தி நிரூபிக்கிறார்!
கடவுள் படைக்கவில்லையே
துகளும் அணுவும் வெவ்வேறு: அணு மூன்றாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. மூன்றும் சேர்ந்து, அணுக்கள் கோடிகோடியாகச் சேர்ந்து எடை பெற்று பேரண்டத்தில் காணும் எல்லாப் பொருள்களும் உருவாகின என்பது அறிவியல். இதை ஏற்கும் குருமூர்த்தி இதையும் ஏற்பார் என எதிர்பார்க்கிறோம் _ இவர் சிலாகித்து எழுதும் நடராசன் சிலையும்கூட இந்தச் சேர்க்கையால் வந்ததுதான். ஏற்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
இதுதான் கண்டுபிடிப்பு
இந்தச் சேர்க்கையை ஏற்படுத்தியது எது என்பதைத்தான் இப்போது கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். ஆனால் குருமூர்த்தி இந்தத் துகளை உபஅணு என்று எழுதிக் குழப்ப முயல்கிறார். அந்தக் கட்டுரையில் வந்திருக்கும் பெட்டிச் செய்தியில் குழப்பும் கைங்கர்யத்தை நன்னாச் செய்திருக்கிறார்.
ஆரியக்கூத்து எப்படியெல்லாம் ஆடியிருக்கிறது என்பதை, அத்வைதத்தைத் திணிப்பதிலிருந்தும் செத்துப்போன சாமிநாத சங்கராச்சாரி எழுதியதை எடுத்துப் போட்டிருப்பதிலிருந்தும் புரிந்துகொள்ள லாம். இந்த அபத்தப் பைத்தாரப் பிதற்றலை (பைத்தியக்கார என்பதை அவாள் அப்படித்தான் சொல்லுவா) அறிவியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்வார்களா? குறைந்தபட்சம் வடகலை, தென்கலை வைணவர்களோ, மாத்வர்களோ அத்வைதத்திற்கு முகாமை தருவதை ஏற்றுக்கொள் வார்களா?
நடனம் ஆடினானா?
சிவன் ஆடினான், அது பிரபஞ்ச நடனம் என்கிறாரே, குருமூர்த்தி! அறிவியல் ஆய்வுகளின் மூலம் தன் முடிவுகளை நிரூபிப்பதுபோல, நடராஜ நடனத்தை நீரூபிப்பாரா? எவராவது நிரூபித்திருக்கிறார்களா? இல்லை எனும்போது, ஏன் பொய்? பித்தலாட்டம்?
பாரத பூமி என்றே பிடிவாதமாக எழுதுகிறார். அது ஆர்.எஸ்.எஸ். பிடிவாதம். போகட்டும். அந்த ஞானபூமி இதுவரை எதில், எந்த வகையில் உலகச் சமுதாயத்திதற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? ஒன்றும் இல்லை எனும்போது, அவர்கள் செய்ததில் இவாள் தங்கள் மூக்கைப் புகுத்துவது வெறுக்கத் தக்கதல்லவா?
பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும்... நம் சமுதாயத்திற்கு விடிவில்லை; உயர்வில்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம்!
- சு.அறிவுக்கரசு
No comments:
Post a Comment