Wednesday, July 4, 2012

சேது சமுத்திரத் திட்டம்


தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் செயல்பாடுகள் ஓடி விளையாடு பாப்பா! என்ற பாடலைத்தான் நினைவு படுத்துகிறது. ரூ.2427 கோடி செலவு திட்டத்தில்  இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
2005 ஜூலை 2ஆம் நாள் பெரும் எதிர்பார்ப்புக் கிடையே இந்தத் திட்டம் ஆரம்பமானது.
30 மீட்டர் அகலம் 12 மீட்டர் ஆழத்தில் 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணியில் பெரும் பாலான அளவுக்கு முடித்து விட்ட நிலையில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி  ஆகியோர் தொடர்ந்த வழக்கினைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் திட்டத் திற்கு இடைக்காலத் தடை விதித்ததானது. பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில், பொருளாதாரக் கண்ணோட்டத் தில் எந்த வகையிலும் ஏற்கவே முடியாததாகும்.
யாரோ ராமனாம், 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்குமுன் பாலம் கட்டினானாம். அந்த ராமன் பாலத்தை இடித்துவிட்டு இந்தத் திட்டத்தை நிறை வேற்றக் கூடாது என்று சொல்லுகிறார்கள் என்றால் நாம் தற்காலத்தில் இருக்கிறோமா? அல்லது கற்காலத்தில் இருக்கிறோமா? என்ற அய்யப்பாட்டைத்தான் ஏற்படுத்து கிறது.
ஏற்கெனவே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள பணிகளை மேலும் தொடர விடாமல் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராயுமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நிபுணர்களின் கருத்தின் அடிப்படையில்  மத்திய அரசு உச்சநீதிமன்றத் தில் இப்பொழுது கூறிவிட்டது. 37 பக்கம் கொண்ட பச்சுவரி அறிக்கையினை மத்திய அரசின் வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) ரோஹிண்டன் நரிமன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ராமர் பாலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாற்றுப் பாதை தேடுவது என்பது  ஏற்கத்தக்கதல்ல; பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.
ஆய்வின் அடிப்படையிலும், நிர்வாக அணுகு முறையின் அடிப்படையிலும் மட்டுமல்லாமல், சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் பார்க்கிறபோது - மாற்றுத் திட்டம் என்று சொல்லப் படுகின்ற 4ஏ பாதையில் (தனுஷ்கோடிக்குக் கிழக்கில்) என்பது கேள்விக்குறியே!
விரிவான ஆய்வுகளில் எழுந்த அய்யப்பாடு களைத் தொடர்ந்து 4ஏ பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவது உசிதமான ஒன்றாக இருக்காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர் அறிக்கை மிகவும் தெளிவாக திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
அறிக்கையைத் தயாரித்தது அரசியல்வாதியும் அல்லர். பிரபலச் சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே. பச்சுவரி தலைமையிலான நிபுணர் குழுவாகும்.
இதற்குமேல் கற்பனைப் புராணச் சகதியை மனதிற் கொண்டு, மக்கள் நலத் திட்டத்தை மண் மூடச் செய்ய லாம் என்றால், அதைவிட அபத்தமும், பொறுப்பற்ற தனமும் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது - முடியவே முடியாது.
இன்றைக்குச் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பாலத்தை உடைத்து நிறைவேற்றக் கூடாது என்று கொடி பிடிக்கிறார்களே - இதே பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் இதே பாதையில் (வழித் தடம் 6) அதாவது ராமன்பாலம் இருப்பதாகச் சொல்லப்படுகின்ற இதே பாதையில் திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது என்பது அடிக் கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும். அன்றைக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் (பிஜேபி) ஆவார்.
அப்பொழுது ராமன் பிரச்சினை ஏன் வரவில்லை? என்பது முக்கியமான வினாவாகும்.
அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் அந்தத் துறைக்குப் பொறுப்பாக இருந்து செயல்படுத்தினார்; அதன் அரசியல் லாபம் திமுகவுக்கும் போய்ச்சேர்ந்து விடுமே என்கிற அரசியல் சுயநலக் காழ்ப்பே இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
அ.இ.அ.தி.மு.க. இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திடீர் தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் என்ன?
நாட்டு நலனைவிட சொந்த அரசியல் சுயநலம் மேலானதா? பொது மக்களே சிந்திப்பீர்!
மத்திய அரசு தன் நிலையை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து விட்டது. அதற்கு மேலும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போடாது என்று நாடே எதிர்பார்க் கிறது.
மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() கூறுவதை நாம் உச்சநீதிமன்றத்திற்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் இல்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...