Thursday, June 14, 2012

இந்தியாவில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டது எப்படி?


ஜப்பானியப் பேராசிரியரின் நூலை எடுத்துக்காட்டி வேலூர் பெண்கள் மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

வேலூர், ஜுன் 8- இந்து மதத்தில் பெண்கள் அய்ந்தாம் ஜாதிக்கும் கீழ் வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர் எழுதிய நூலை எடுத்துக்காட்டி விளக்கம் தந்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
வேலூரில் 29.5.2012 அன்று நடை பெற்ற திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா, புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
அன்னை மணியம்மையாரைத் தந்த ஊரில்
அன்னை மணியம்மையார் அவர்களைத் தந்த மண்ணான இந்த வேலூர் நகரத்தில் இவ்வளவு சிறப்பானதொரு மாநாட்டை புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநில மாநாடாகவும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவையும் இணைத்து முற்றிலும் மகளிரே முன்னின்று கடந்த பல வாரங்களாக இந்த மாநாட்டிற்காக, பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இந்த மாநாட்டினுடைய முழு வெற்றிக்கு மகளிருடைய உழைப்புதான் காரணமென்பதை மனமுவந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம் (கைதட்டல்).
மகளிருடைய பேராதரவு இருந்தால்
எந்த இயக்கத்திலும் மகளிருடைய பங்கு எங்கே சிறப்பாக இருக்கிறதோ அங்கு நிச்சயமாக அந்த கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புண்டு. ஒரு திரைப்படம் எடுத்தால்கூட, மகளிர் விரும்பிப் பார்த்தால்தான் அது வெற்றித் திரைப்படமாகிறது. அது போலவே ஊடகங்களுடைய வெற்றிக்கே கூட, மகளிருடைய பேராதரவும் மிகப்பெரிய பங்களிப்பும் தான் அவைகளை வெற்றிகரமாக கொண்டு போய் சேர்க்கின்றன. அதுபோல தந்தை பெரியார் அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கிய நேரத்திலே இதனால் மிகப் பெரிய லாபத்தை அடைந்தவர்கள் உண்டு என்று சொன்னால் அது பெரிதும் மகளிர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக் கத்தைத் தொடங்கினார்கள். அப்படித் தொடங்கி நடத்திய நேரத்திலே அவர்கள் மய்யப்படுத்தியது. ஒரு கொள்கையை ஒரு லட்சியத்தை மற்ற கொள்கைகள் எல்லாம் அதை ஒட்டியதுதான். என்ன அந்த இலட்சியம் என்றால் மனிதர்கள் மனிதர்களாக வாழவேண்டும். மனிதர்களுக்குள்ளே எந்த விதப் பேதமும் இருக்கக் கூடாது. மனிதர்களு டைய வாழ்வில் எல்லோரும் சமம் - எல்லோருக்கும் சம வாய்ப்பு என்பதை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கருதினார்கள். நம்முடைய நாட்டிலே பிறவி பேதம் இருக்கிறது. பிறக்கும் பொழுதே ஒருவரைத் தாழ்த்தி இன் னொருவரை உயர்த்தியுள்ள ஒரு சமூகக் கட்ட மைப்பு இருக்கிறது. அதை முழுமையாக மாற்றிட வேண்டும். அதற்குத்தான் இந்த இயக்கம் தேவை என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள். மற்ற நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் இந்த சமூக கட்டமைப்பிலே ஒரு வேறுபாடு உண்டு.
நம்முடைய நாட்டில் மட்டும் தான் பிறவி பேதம்
பிறவி பேதம் என்று சொல்லும் பொழுது மற்ற நாடுகளில் எல்லாம் பிறக்கும் பொழுதே ஒருவன் பார்ப்பானாகப் பிறப்பதில்லை பிறக்கும் பொழுதே ஒருவன் பறையனாகப் பிறப்பதில்லை. பிறக்கும் பொழுதே ஒருவன் பிராமணனாகப் பிறப்பதில்லை. பிறக்கும்பொழுதே ஒருவன் சூத்திரனாக, ஒருவன் பஞ்சமனாகப் பிறப்பதில்லை. மற்ற நாடுகளில் எல்லோரும் மனிதர்களாகத் தான் பிறக்கிறார்கள். ஆனால் நம்முடைய நாட்டிலே மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டிலே பிறவி பேதம் என்பது இரத்தத்திலே வைக்கப்பட்டு விட்டது. எனவே மனுதர்மத்தின் முதல் அடிப்படை என்ன? அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைப் படைப்பதற்காக நான்கு வகையான ஜாதிகளை உருவாக்கினார் என்று சொல்லுகிறார்கள்.
முகத்தில் இருந்து பிறந்தவர் பிராமணர். தோளில் இருந்து பிறந்தவர் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன். அதற்கும் கீழே பஞ்சமன் என்று சொல்லி விட்டார்கள். பஞ்சமன் என்பது அய்ந்தாவது ஜாதிய கட்டமைப்புக்கு வெளியே. அதனால் அவன் இந்துவே இல்லை என்று ஒரு கட்டத்தில் சொல்லிவிட்டான். இந்து மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான் ஜாதீய அமைப்பு. அதற்கு கீழே ஆளைத் தேடி பிடித்தான்.
புத்துலகப் பெண்கள் மாநாடு ஏன் தேவை?
இந்த இடத்தில் தான் கவனிக்க வேண்டும். ஏன் புத்துலகப் பெண்கள் மாநாடு தேவைப்படுகிறது என்பதை தாய்மார்கள் மற்றெல்லோரும் கவனிக்க வேண்டும். பெரியாருடைய தொண்டின் அருமை பெருமை எப்பொழுது விளங்குமென்று சொன் னால் ஜாதிய கொடுமையால் பாதிக்கப்படும் பொழுதுதான் விளங்கும்.
மற்ற நாடுகளில் இந்தப் பக்கம் ஒன்று அந்த பக்கம் ஒன்று என்று எதிரெதிரே இருக்கிற மாதிரி நம்முடைய நாட்டில் இல்லை. ஏணிப்படிக்கட்டு ஜாதிய முறை. மேடு பள்ளம் மாதிரி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து என்று மேலிருந்து கீழாக வரிசையாக வந்தார்கள். இந்த அய்ந்தாவதற்கும் கீழே ஒருத்தர் இருந்தாங்க. அது யார் என்றால் எல்லா வருணங்களைச் சேர்ந்த எல்லா ஜாதிகளையும் சேர்ந்த பெண்கள் என்று ஆக்கிவிட்டார்கள்.
ஆகப் பெண்களை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ, எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ் வளவு இழிவுபடுத்தி விட்டார்கள். அடிமைகளுக்கும் அடிமைகள் அவர்கள். சூத்திரர்கள் அடிமைகள் என்றால், அந்த அடி மைகளுக்கும் அடிமைகள் பெண்கள் பெண்கள் என்றால்
அடிமைகளுக்கும் அடிமைகள்!
அண்மையில் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். சிங்கப்பூருக்குச் செல்லும்பொழுது புதுப்புது நூல்களை வாங்கி படிப்பேன். அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு ஜப்பானிய பேராசிரியர். மிகப்பெரிய ஆய்வாளர் அவர் ஒரு வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். மனித குல வரலாறு தோன்று வதற்கு முன்னால் இருந்து பிரெஞ்சுப் புரட்சி வரையில் என்று ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தில் அவர் சொல்லுகிறார்.
இந்திய சமூகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் இந்தியாவில் ஒரு மறு பார்வையும், மறு பயணமும் செய்ய வேண்டும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால்- ஆரம்பத்தில் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் சிந்துவெளி நாகரிகம் என்ற அற்புதமான ஒரு நாகரிகம் இருந்தது. இந்த நாகரிகத்தில் மனிதத் தன்மை போன்ற உயர்ந்த தன்மைகள் எல்லாம் இருந்தன. ஆனால் வெளியில் இருந்து வந்தார்கள் - பாருங்கள் ஆரியர்கள் குதிரைகள் மற்றவைகளை எல்லாம் இறக்கினார்கள். இவர்களால் அவர்களை எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலை இருந்தது.
ஆகவே அவர்கள் இந்தியாவின் மற்ற பகுதி களுக்கும் வர வேண்டிய அவசியம் வந்தது.
வெளிநாட்டிலிருந்து படை எடுத்து வந்தவன் எப்படி வெற்றி பெற்றுவிட்டு ஆளுமை செய் வானோ அதே போல வெற்றி பெற்ற ஆரியர்கள் அடிமைப் பட்டு பிடிபட்ட வர்களை தஸ்யூக்கள் - தாசர்கள் என்று சொன்னார்கள். ஆக இரண்டே பிரிவு தான் அப்பொழுது இருந்தது. ஒரு பிரிவு ஆரியர்கள். இவர் கள் வெற்றி பெற்ற வர்கள். இன்னொரு பிரிவு அவர் களாலே அடக்கி ஆளப்பட்டவர்கள். அவர்கள் தான் தஸ்யூக்கள் தாசர்கள். ஆரியர்கள், பிராமணர்கள் என்று தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டு நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந் தவன் என்று சொல்லிக் கொள்பவர் களைப் பற்றி அந்த பேராசிரியர் எழுதுகிறார்.
வரலாற்று உண்மை
இந்த வரலாற்று உண்மை இது வரையிலே யாரும் சிந்திக்காத ஒரு புதிய சிந்தனை. மறுவாசிப்பு மாதிரி மறு சிந்தனை. மறு பார்வையோடு, மறு பயணமாக இதை செய்திருக்கிறார்.
அவர் சொல்கிறார். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வர்ணாஸ்ரம தர்மத்தை அவர்கள் உருவாக்கினார்கள். மவுரியர்கள் காலத்தி லிருந்து குப்தர்கள் காலத்தில் வலியுறுத்தப்பட்டு மனுதர்மம் எழுதப்பட்டது. அதிலே இந்த ஜாதிய அமைப்பு முறை இருந்தது. அதிலே பெண்களை பெரும் அளவுக்கு கொச்சைப்படுத்தினார்கள். ஏன் பெண்களை கீழ்மையாக வைத்தார்கள்?
ஆடு, மாடு ஓட்டிக் கொண்டு வந்தவர்கள் ஆண் கள் தான் வந்தார்களே தவிர அவர்கள் பெண்க ளோடு வரவில்லை. அவர்களுடைய பெண்கள் இங்கு வராததினாலே இங்கிருந்த பெண்களோடு தான் அவன் நாளாவட்டத்தில் வாழ்க்கையே அமைத்துக் கொண்டான். இங்கிருந்த பெண்கள் என்னதான் இருந்தாலும் தங்களுக்குச் சமமானவர் கள் இல்லை என்று சொல்லுவதற்காக அந்தப் பெண்களை எவ்வளவு கீழே வைக்க வேண்டுமோ அவ்வளவு கீழே வைத்தார்கள் என்று சொல்லியிருக் கிறார். இதை தெளிவாக எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய செய்திகளை எழுதியிருக்கிறார்.
விடுதலையில் வெளிவரும்
அடுத்து விடுதலையில் அதன் பல்வேறு பகுதி கள் வரும். எதற்காக இதை உங்களுக்குச் சொல்லு கிறேன் என்றால், பெண்கள் எப்படித் தாழ்த்தப்பட் டவர்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப் பட்டார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்களை விட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். சிலர் கேட்கலாம். எதுக்குங்க புத்துலகப் பெண்கள் மாநாடு? இப் பொழுதுதான் பெண்கள் எல்லா உரிமைகளையும் பெற்று விட்டார்களே. ஆண்கள் உரிமைகளைப் பெற்றிட சங்கம் வைத்திருக்கிறோம் என்று சிலர் கேளிக்கையாக விதண்டாவாதத்திற்காகச் சொல்ல லாம். என்ன பெண்கள் பெரிய அளவுக்கு உரிமை பெற்று விட்டார்கள்? பெண்கள் பேண்ட் போட்டுவிட்டால் பெரிய அளவுக்கு உரிமை பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தமா? பெரியாரால் ஆண்களுக்கு இணையாக டிகிரி வாங்கியிருக் கிறார்கள் என்பதெல்லாம் வெற்றிதான்! அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் இன்னமும் போக வேண்டிய தூரம் கடக்க வேண்டிய தூரம் அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை ஒரு அளவு கோல் வைத்துப் பார்க்க வேண்டும்; ஒன்று, இரண்டு, மூன்று என்று சுருக்கமாகச் சொல் லுகின்றேன். கடுமையான வெயில் புழுக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறீர்கள்.
(தொடரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...