Wednesday, June 13, 2012

இடஒதுக்கீடும் வருமான வரம்பும்


மத்திய அரசுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங் களில் சேரவும், வேலை வாய்ப்பில் இடம் பெறவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு சட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் கல்வியில் முழுமையான அளவுக்குச் செயல்பாட்டுக்கு வரவில்லை.
மண்டல் குழுவின் பரிந்துரைகளின் காரணமாக  வாய்ப்புப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது.
சாதாரணமாக எளிதான முறையில் இந்த வாய்ப்புகள் கிட்டவில்லை; மண்டல் குழுவின் பரிந்துரைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் பார்ப்பன ஆதிக்க நிர்வாகக் கும்பல் அதற்குப் பல வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டு வந்திருக் கின்றன. ஒரு பக்கம் ஆளும் வர்க்கம், நிருவாக வர்க்கம் இப்படியென்றால் இன்னொரு பக்கம் நீதிமன்றம் தன் பங்குக்குச் சமூக நீதிக்கு எதிரான சாட்டையைச் சுழற்றியது.
1950-க்கும் 1977-க்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கினை விசாரித்த நீதிபதிகளின் எண்ணிக்கை 50. இதில் பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை 48.
இவ்வளவுக் கட்டுகளையும், தடைகளையும் மீறி மண்டல் குழுப் பரிந்துரைகளை ஓரளவு செயல்படுத்து வதில் வெற்றி பெற்றுள்ளோம்.
மண்டல் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்க வைக்கவே பெரும் பாடுபட வேண்டி யுள்ளது. அதற்காகவேகூட சென்னை சைதாப்பேட்டை யில் திராவிடர் கழகம் மாநாடு நடத்தியதுண்டு. அம்மாநாட்டில் கருநாடக முதல் அமைச்சர் தேவராசு அர்ஸ் அவர்கள் கலந்து கொண்டு  சமூக நீதிக்கான குரலை அழுத்தமாகக் கொடுத்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டும், அதனைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு மனம் வராத நிலையில், வீதிக்கு வந்து திராவிடர் கழகம் போராடியது. இந்த வகையில் 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியதுண்டு; டில்லி சிறை வரை சந்தித்து வந்தனர் திராவிடர் கழகத் தோழர்கள்.
சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தபோதுதான் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு என்பது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியை வெளியி லிருந்து ஆதரித்துக் கொண்டிருந்த பி.ஜே.பி., வி.பி. சிங் அவர்களின் 27 விழுக்காடு அறிவிப்புக்குப் பின் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் மூலம் தமது சமூக அநீதி முகத்தை ஒரு முறை பி.ஜே.பி. நாட்டுக்குக் காட்டிக் கொண்டது.
சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத்தயார் என்ற வரலாற்றுப் பிரகடனத்தை செய்த பெருமகனாக வி.பி.சிங் அவர்கள் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஈர நெஞ்சில் குடியிருப்பார்கள்.
வி.பி. சிங் அவர்களின் அறிவிப்பினை எதிர்த்து  வழக்கம்போல உயர்  ஜாதி ஆதிக்கக் கூட்டம் உச்ச நீதிமன்றம் சென்றது. 1992 இல் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில்தான் தேவையில்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத பொருளாதார அளவுகோல் ஒன்றை கிரிமீலேயர் என்ற புதிய சொல்லாக்கத்தைத் திணித்தது. அதன்படி ஆண்டு வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு உள்ள பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது.  அப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகை மாறி மாறி மாற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது மாற்றியமைக்கப்படுகிறது. 1993இல் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. 2004இல் நான்கரை லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அது 7 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பி.வி. நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது உயர் ஜாதியில் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செய்ய முன்வந்தது. அவ்வழக்கில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என்று தெரிவித்த அதே உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் கிரிமீலேயர் என்ற பொருளாதார அளவுகோலைத் திணித்தது முரண்பாடு அல்லவா!
இதை அன்று முதல் தொடர்ந்து திராவிடர் கழகம் சுட்டிக் காட்டி எதிர்த்து வருகிறது. இப்பொழுதும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் இடஒதுக்கீடு என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர, எந்த இடத்தில் கிரீமிலேயர்கள் இல்லை. இதனை முற்றாக நீக்குவதே சரி! புதிய சட்டத் திருத்தம் மூலம் இதனைச் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...