Monday, June 25, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல் எனும் குறியீடு...


குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப் பட்டது. பல கட்சிகளின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. ஆமை முயல் கதை என்பார்களே அதுதான் இந்த விடயத்திலும் நடந்திருக்கிறது.
அவசர அவசரமாக ஒரிசாவின் பட்நாயக்கும் தமிழ்நாட்டின் முதல மைச்சரும் ஒரு வேட்பாளரை முன்னிறுத்தினார்கள்.
விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களில் கருத்தைக் கேட்கா மலேயே மேற்கு வங்க முதல் அமைச் சர் மம்தா பானர்ஜி அவர் பெயரை  முன்மொழிந்தார்.  (அவர் இசைந் திருந்தால் ஒருக்கால் இப்பொழு துள்ள அரசியல் மேகங்கள் வேறு திசைகளில் கொஞ்சம் பயணித் திருக்கக் கூடும்).
அப்துல் கலாம் பெருமை மிக்க ஒரு மணி மகுடம்!  அரசியல் வாதி களின் வெட்டுப் புலி ஆட்டத்தில்  சிக்கிக் கொள்ளாமல் மக்கள் மனதில் குடியேறி விட்டார்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யிடம் தலைவர் பதவி  உங்களுக்கு; துணைக் குடியரசுத் தலைவர் பதவி எங்களுக்கு என்று பேரம் பேசிய பி.ஜே.பி.யின் தாஜா பலிக்கவில்லை.
என்ன செய்வது என்று முடியைப் பிய்த்துக் கொண்டதில் பி.ஜே.பி. அணிக்குத்தான் முதலிடம்.
சரியான தேர்வை செய்ய முடியாத தாலும் 2014 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல் அமைச்சர் தாமோதரதாஸ் நரேந்திர மோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்ற பிம்பம் தூக்கிப் பிடிக்கப் பட்டதாலும் அது வரை காத்திராமல் தம் அதிருப்தியை வெளிப்படுத்த வெளிச்சமான சந் தர்ப்பம் இதுதான் என்று கருதிய பிகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார், தங்கள் வாக்கு பிரணாப் முகர்ஜிக்கே என்று வாக்கு சுத்தமாகச் சொல்லி முடித்துவிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அடுத்த பிரதமராக வரக்கூடியவர் மதச் சார்பின்மைக் கொள்கைக்குச் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்று கறாராகவே பட்டுத் தெரித்தது போல மனிதன் போட்டு உடைத்து விட்டார்!
குடியரசுத் தலைவர் தேர்தல் நம் கைவிட்டுப் போனாலும் பரவா யில்லை; 2014 மக்களவைத் தேர்தல் என்னும் தேரின் அச்சு இப்பொழுதே முறிந்து விட்டதே என்ற கவலையில் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது  பி.ஜே.பி.  போதும் போதாதற்கு, சிவ சேனையும் கழன்று கொண்டு விட்டது.
இன்னொரு பக்கத்தில் உச்சநீதி மன்றத்தில் மோடிக்குத் தொடர்ந்து மொத்துகள் விழுந்து கொண்டு இருக்கின்றன. அவர் மீது வழக்கு தொடுக்கப்படுவதற்கான சகல அம்சங்களும் அம்சமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய் யப்பட்ட வழக்கறிஞர் (அமிகஸ் குரியா) ராமச்சந்திரனின் அறிக்கை கூறிவிட்டது.
அனேகமாக 2014 மக்களவைத் தேர்தலின் போது மோடி உள்ளே இருப்பாரா? வெளியே இருப்பாரா? நீதிமன்றத்தின் கைகளில் இருக் கிறது இதற்கான பதில்.
(சாதாரண குற்றங்களல்ல; குற்றப் பிரிவுகள் 53 A(1)(a),  6 (b), 153-B, (1) (c), 166 மற்றும் 505 (3) பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.)
இது மட்டுமல்ல. கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்பு. கட்சியின் தலைவர் நிதின் கட்காரியும் அவருக்கு எதிர் அணிதான். அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் என்ற ஒரு நீண்ட பட்டியலே பிரதமர் பதவிக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவு - நீரோ மன்னன் மோடிக்கு இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
பரிதாபம் சோ ராமசாமியோ உடல் நலம் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தாலும், படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறார் -  எப்படியும் மோடியைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக.
சண்டை போட்டுக் கொள்ளா தீர்கள். ஒழுங்காக மோடியை முன்னி றுத்துங்கள் என்று ஒவ்வொரு துக்ளக் இதழிலும் கெஞ்சிக் கூத் தாடுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் மக்களவைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதாவின் தயவு தங்கள் பக்கம் இருக்கும் என்ற கணக்கு ஒரு புறம்.
எது எப்படி இருந்தாலும் குடிய ரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. அணிக்கு கிடைக்க இருக்கும் மரண அடி போன்ற  தோல்வி அந்த அணியை மேலும் கலகலக்க வைத்து விடும் என்பதில் அய்யமில்லை.
அடுத்த இரண்டாண்டுகளில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - மக்களின் பொருளாதாரச் சுமைகளை இறக்கும் வகையில் நடைபோடுமா என்பது கேள்வி!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...