- வாஷிங்டனிலிருந்து சோம இளங்கோவன்
உலகெங்கும் மத நம்பிக்கையற்றவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மிகுந்து வருவதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு பக்கம் மத வெறி தலைவிரித்தாடினாலும் மறுபக்கம் அதற்கு எதிராக மத நம்பிக்கையற்றவர் களும் வெள்ளமெனத்திரண்டு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்திலே கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து எதிர்காலத்திலே இங்கிலாந்தில் மத நம்பிக்கையற்றவர்கள் மிகுந்து விடுவார்கள் என்று அண்மையில் ஒரு ஆய்வு வெளிவந்தது..பல சர்ச்சுகள் மூடப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவிலும் மத நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதை ஒத்துக் கொண்டு வருகின்றனர். அமெரிக்கத் தலைவர் ஒபாமா, அவர் தன் பேச்சிலேயே அமெரிக்கா ஒரு கிருத்துவ நாடு என்பதை மறுத்து மற்ற மதங்களையும் குறிப்பிட்டு அதை விட முக்கியமாக மத நம்பிக்கையற்றவர்களையும் குறிப்பிட்டு அனைவர்க்குமான அமெரிக்கா என்று பேசினார்.பலர் மூக்கில் விரலை வைத்தனர்.
அமெரிக்க நாத்திகர்கள் புன் சிரிப்பை உதிர்த்தனர்.
அந்த புன் சிரிப்பின் எதிரொலியாக அமெரிக்க மத நம்பிக்கையற்ற 20க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவில் முதன் முறையாக ஒரு மாபெரும் நாத்திகச் சங்கமத்தை அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில் வாசிங்டன் மால் எனும் மிகவும் புகழ் பெற்ற இடத்திலே மார்ச் 24 அன்று கூட்டினர். இங்கே தான் 1963 லே மார்ட்டின் லூதர் கிங் எனது கனவு என்ற அற்புதமானப் பேச்சை அங்கேற்றினார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து மக்கள் வந்து குவிந்தனர். பல பேருந்துகள் வந்து குவிந்தன. கனடாவிலிருந்தும் மக்கள் வந்தனர்.
ஆண்கள் மட்டுமன்றி பெரும்பான்மையாகப் பெண்களும், கைக்குழந்தைகளுடன் குடும்பமாகவும் வந்திருந்தனர்.மத ஆதிக்கம் மிகுந்திருக்கும் கருப்பினத்திலிருந்து ஆண்களும் பெண்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெள்ளை, மெக்சிகன், இந்தியர் என்று பலரும் பங்கேற்றனர்.
இங்கிலாந்தின் ரிச்சர்டு டாக்கின்சு மத வெறியர்கள் படிப்பில் தரும் தொந்தரவை கடுமையாகச் சாடினார். பல கோடி ஆண்டுகளாக உருவாகி வரும் உலகத்தைப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடவுள் படைத்தார் என்று சொல்வது அமெரிக்கத் தலை நகரம் வாசிங்டனுக்கும் கலிபோர்னியா மாநிலத்தின் சான்பிரான்சிசுகோ நகரத்திற்குமுள்ள தூரமான 6000 மைல்கள் , ஒரு மீட்டர் தான் என்று கூறுவது போன்ற மடத்தனமாகும்.இதைப் பள்ளிகளில் பாடமாகச் சொல்லித் தரவேண்டிச் சட்டம் இயற்ற முயல்கின்றனர். இதைத் தோற்கடிப்போம் என்று அறைகூவல் விட்டார்.
நமக்கு உடனே ராமன் பாலம் தான் நினைவுக்கு வருகின்றது.இல்லாத ராமன் இல்லாத பாலத்தைக் கட்டியாதாகச் சொல்லும் மேல் தாவிகள் தான் இந்தியாவை ஆளத் துடிக்கின்றார்கள். அரசன் அம்மணமாக இருக்கின்றான் என்று சொல்லத் துணிவில்லாத அறிஞர்கள் ஆகா என்ன அற்புதமானத் துணி அணிந்திருக்கின்றார் என்று சொல்லும் பலர் நிறைந்த இந்தியாவில் தந்தை பெரியாரின் அறிவுப் புரட்சியின் அவசியம் புரிகின்றது. புது டில்லியிலே பகுத்தறிவுச் சங்கமம் தேவைப்படுகின்றது.
மருத்துவர், எழுத்தாளர், நாத்திகர் என்று புகழ் பெற்ற தஸ்லீமா நஸ்ரீன் அம்மையார் பெண்ணடிமையை மதமாக்கி உலகத்தின் பல பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதை எதிர்த்தார்.குரானைப் படிப்பவர்கள் அதை எதிர்க்காமல் இருக்க முடியாது.பெண்கள் விழித்தெழுந்து புறப்பட்டு அநியாயத்தை ஒழிக்க வேண்டுமென்றார்.
உலகின் சிறந்த தந்திரவாதியாகப் பல பரிசுகளைப் பெற்றவர் ஜேம்சு ராண்டி. பல நூல்கள் எழுதியுள்ளார்.பல ஆண்டுகளுக்கு முன்னேயே ஒரு மில்லியன் டாலர் பரிசை ஏற்படுத்தியவர்.அவரிடம் எந்த தந்திர, மந்திர வாதியும் வந்து செய்து காட்டிப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தவர்.இன்னும் அந்தப் பரிசு அப்படியே இருக்கின்றது.உலகின் பல ஏமாற்று வித்தைகளைப் பிய்த்து வைத்தவர். அவர் தந்தை பெரியார் போலவே உங்கள் மீது எங்களுக்கு வெறுப்பில்லை.உங்கள் மூட நம்பிக்கைகளைத் தான் வெறுக்கின்றோம். நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ளத் தயார். கடவுள் இருக்கின்றார் என்று காண்பியுங்கள், நாங்கள் உடனே ஏற்றுக் கொள்கின்றோம். வெறும் ஏமாற்றுக்களை கேள்வி கேட்காமல் நம்பச் சொல்கின்றீர்களே இது பித்தலாட்டம் இல்லையா என்று கேட்டார்.
ஆஸ்திரேலியாவிலிருந்து டிம் மிச்சின், செக்கி சீகல் என்ற இரண்டு பாடகர்கள் நகைச்சுவை கூடிய மத நம்பிக்கையற்றப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
அமெரிக்காவின் நடிகர் எழுத்தாளர் பில் மாகர் நகைச்சுவையுடன் மத நம்பிக்கையாளர்களின் ஏமாற்றுக்களை எடுத்துரைத்தார். மக்கள் சிரிப்பு வெள்ளத்தில் பெய்த மழையையும் பொருட் படுத்தாமல் மகிழ்ந்தனர்
அமெரிக்கப் பள்ளியிலே கடவுள் வாசகங்கள் இருந்த பதாகை பள்ளியில் இருந்ததை எதிர்த்துப் போராடி நீதி மன்றத்தில் வெற்றி கண்ட 16 வயது ஜெச்சிக்கா ஆல்குயிச்ட் தனது தனிமைப் படுத்தப்பட்ட, நண்பர்களும் குடும்பங்களும் எதிரிகளானப் போராட்டத்தை எடுத்துரைத்தார்.
என்னைப் பாராட்ட வேண்டாம், நான் செய்ததை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம் என்றார். அவரது துணிவைப் பாராட்டி அவரது கல்லூரிப் படிப்பிற்காக 62000 டாலர் காசோலையை பல நிறுவனங்கள் சேர்ந்தளித்தனர்.
ரோமேனியா, மெக்சிகோ,தென் ஆப்பிரிக்கா விலிருந்து பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் தலை சிறந்த நாத்திக நிறுவனங்களும், அதன் தலைவர்களும் பேசினர். இனி நாம் மறைந்திருக்க வேண்டியதில்லை. பெருமையுடன் வெளியே வருவோம். நாத்திக வாழ்வே நல் வாழ்வு, நல்லவராக வாழக் கடவுளோ மதமோ தேவையில்லை. எவ்வளவு விஞ்ஞானிகள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் நாத்திகர்கள். மத வாதிகள் உலகெங்குமெத்துனை பேர் அயோக்கியர்கள், சிறையிலிருக்க வேண்டியவர்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டினார்கள்
இந்தியர் ஹேமந்த் மேத்தா மாணவர்கள் படும் பாட்டைச் சொன்னார். பல மாணவர்கள் அவரிடம் வந்து கேள்விகள் கேட்பதை எடுத்துச் சொன்னார். அவர்கள் உண்மையான விடைகளைத் தேடுகின்றர்கள். யாரிடம் கேட்பதென்று தெரியாது விழிக்கின்றார்கள். பெற்றோர்கள் சொல்லும் பதிலில் உண்மையில்லை என்பதைத் தெரிந்துள்ளனர். மூட நம்பிக்கையில் வாழ விரும்பவில்லையென்று மாணவர்களின் தேவை அறிவு மயமான விடைகள் என்றார்.
எங்கு பார்த்தாலும் பதாகைகள்
நாத்திக வாழ்வே நல் வாழ்வு
நல்லவராக வாழக் கடவுள் தேவையில்லை.
மதமே ஏமாற்றாதே.
பெரிய ஒளித்திரைகள் ஆங்காங்கே பார்வையாளருக்குப் பார்க்க எளிதாக வைக்கப் பட்டிருந்தன.
பலர் நாள் முழுதும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நின்று கொண்டே கேட்டனர்.
அமெரிக்க போர்ப்படையிலிருக்கும் நாத்திகர்கள் தங்கள் கொடிகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ப்பீட ச்--_டார்க்கும். டிம் ஃகாக்கின்சும் பாராட்டினர்.
அமெரிக்காவின் ஆரம்பத் தலைவர்கள் மேடிசன், ஜெஃபர்சன் கடவுளைப் புகுத்தவில்லை.பின்னால் வந்தவர்கள் தான் புகுத்தினார்கள் .
உலகெங்கும் உள்ள நாத்திகர்கள் சேர்ந்து மதமற்ற, கடவுளற்ற மனித நேயத்தைப் பரப்புவோம் என்று உறுதியெடுத்து விடை பெற்றனர்.
No comments:
Post a Comment