- கலி.பூங்குன்றன்
துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்?
அடுத்த பிரதமர் இந்தியாவுக்கு நரேந்திர மோடிதான்! அவர்தான் இந்தியாவைக் காக்க வந்த அவதாரப்புருசன் என்று ரொம்பவே எழுதுகிறார்.
குஜராத்தில் அவர் ஆட்சியில்தானே அநியாயமான வகையில் படுகொலை நடந்தது. சிறுபான்மை மக்கள் பல்லாயிரக்கணக்கில் வேட்டையாடப்படவில்லையா?
கர்ப்பிணிப் பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு, சிசுக்கள் தீயில் தூக்கி எறியப்பட்டு அதனைக் கண்டு குதூகலித்தனரே. குழந்தைகள் வாயில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, தீயின் உருவமாகவே குழந்தைகள் மாறி, அலறியபோது குதியாட்டம் போட்டது யார் ஆட்சியில்?
இப்படி ஒரு குரூர மனிதனை வேண்டுமானால் இலங்கையில் ராஜபக்சே உருவத்தில் காணலாம், வேறு எங்கும் காணவே முடியாது.
ஊருக்கு மட்டுமல்ல, உலகுக்கே தெரிந்த கொடூரம் இது.
உள்ளே வராதே என்றது அமெரிக்கா. இந்த இடிஅமீனை அனுமதிக்க மாட்டோம் என்றது இங்கிலாந்து.
எல்லோருக்கும் தெரிந்த இந்த அவலம் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவே தெரியாது. அந்த ஆசாமி திருவாளர் சோ ராமசாமிதான். அதற்கு அவர் வைத்திருக்கும் துருப்புச் சீட்டு சாதாரணமானதுதானா?
எந்த நீதிமன்றமாவது மோடியைக் குற்றவாளி என்று சொன்னதா? குறை கூறியதா? கையை நீட்ட முடியுமா? என்று யாரும் பதில் சொல்ல முடியாத கேள்வியை அவர் கைவசம் வைத்துள்ளார். ஆமாம், நம்புங்கள்.
சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் துக்ளக்கின் 42ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கூட இந்தக் கேள்வியை எடுத்து வீசினாரே பார்க்கலாம்.
மனதுக்குள் இந்த மனுவின் புத்திரருக்கு மற்றவர்கள் எல்லாம் மாங்காய் மடையன் என்ற நினைப்போ!
யார் மறந்தாலும் கருஞ்சட்டைக்காரன் மறக்க மாட்டான் என்பது திருவாளர் சோவுக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
இன்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் நாம் பயணித்தாக வேண்டும். உலக வரலாற்றில் உச்சி ----முடியைக்-- குலுக்கும் ஒரு பயங்கரம் - குஜராத் மாநில வதோதரா நகரில் நடைபெற்றது. பெஸ்ட் பேக்கரி என்ற ஒரு நிறுவனம், இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டது. கோத்ரா ரயில்பெட்டி எரிப்பைத் தொடர்ந்து அன்று இரவு (1-.3.2002) அந்தப் பயங்கரம் நடந்துவிட்டது.
அந்தப் பேக்கரியின் உரிமையாளர் ஹபிபுல்லாஷேக் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்களை விறகுகளைக் கட்டுவது போல கட்டி, அந்த பேக்கரியின் கொடிய நெருப்பில் திணித்து துடிக்கத் துடிக்கக் குரூரமாகப் படுகொலை செய்தனர்.
குடும்பத் தலைவி செஹ்ருன்னிசா, மூத்த மகன் நஃபிதுல்லா, மகள் ஜாஹிரா ஷேக், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் பக்கத்தில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக தப்பிப் பிழைத்தனர்.
குடும்பத் தலைவி செஹ்ருன்னிசா, மூத்த மகன் நஃபிதுல்லா, மகள் ஜாஹிரா ஷேக், மருமகன் மற்றும் இரு பேரக்குழந்தைகள் பக்கத்தில் இருந்த வீட்டில் தஞ்சம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக தப்பிப் பிழைத்தனர்.
இந்தக் கொடூரத்தை நேரில் கண்ட ஒரே ஒரு சாட்சி ஜாஹிரா ஷேக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வேறு வழியின்றிக் காவல்துறை பெயரளவிற்கு வழக்கைப் பதிவு செய்தது என்றாலும் அபாயகரமாக பல வகைகளிலும் அச்சுறுத்தப்பட்டார். பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் மது ஸ்ரீவச்சலா என்பவர் உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை! எச்சரிக்கை! என்று மிரட்டியதன் காரணமாக நீதிமன்றத்திலேயே பிறழ் சாட்சி சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார். விளைவு குற்றஞ் சாட்டப்பட்ட அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர். (27.6.2003)
மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர் - இந்தப் பொல்லாத் தீர்ப்பினைக் கண்டு. வேறு வழியின்றி காவல்துறை மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.
நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் குழு என்னும் அமைப்பினைச் சேர்ந்த டீஸ்டா செடல்வாட் இந்த வழக்கினைக் கையில் எடுத்துக் கொண்டார். இவர் ஒரு நீதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது ஆகும்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த துரைசாமி ராஜு மற்றும் அர்ஜித்பசாயத் ஆகியோர் ஆவர்.
உயர் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றங்களை நீதிபதிகள் கடுமையாகச் சாடினார்கள்.
அந்தத் தீர்ப்பின் வரிகள் ரத்தம் பீறிட்ட மனித நேயத்துக்குப் போடப்பட்ட அருமருந்து என்று சொல்லலாம்.
இது சட்டத்தின் பார்வையில் விடுதலையே அல்ல. தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவுகள் மதிக்கத் தகுந்தவையல்ல, நம்பிக்கைக்கு உரியவையும் அல்ல.
மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடக்கின்றன. இதைப் பார்க்கும்பொழுது அவர் மதித்த அனைத்துக் கோட்பாடுகளையும் உதாசீனப்படுத்தும்படியான அளவிற்குச் சிலர் போய்விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
எந்தவிதப் பாதுகாப்புமற்ற அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டது - இந்தச் சமுதாயத்திற்கே இழைக்கப்பட்ட அவமானமாகும்.
பாதுகாப்பற்ற பெண்கள், அப்பாவிக் குழந்தைகளை எரித்துக் கொன்றார்கள். மனித நேயத்தின் சிறு சிறு துளிகள் சேர்ந்துதான் மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம் வற்றிப் போய்விட்டதோ? ஒரு சமுதாயத்திற்குச் சொந்தமான வீடுகளில் பிறந்தார்கள் என்பதற்காகவா இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்?
குஜராத் விரைவு நீதிமன்றத்தின் அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓர வஞ்சமும் ஒருதலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பாங்கே இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு!
நீதி வழங்கும் நெறிமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டு உள்ளன. துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன. தான் விரும்பிய வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் புலனாய்வோ, கடன்காரத்தனமாக ஏனோ தானோ என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டுபிடித்து குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் வகையில் புலனாய்வு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தீர்ப்புரையில் கூறியுள்ளனரே, அவை யாரை நோக்கி?
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை நோக்கித்தானே இத்தனை சொல்லம்புகளும். முதலமைச்சர் மட்டுமல்ல - காவல் துறையையும் அவர்தான் வைத்திருக்கிறார் என்கிறபோது இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கும் அறிவு நாணயமான முறையில் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் மோடி அல்லவா?
எவ்வளவு அசட்டுத் துணிவு இருந்தால் சோ சொல்லுவார்-? எந்த நீதிமன்றமாவது குஜராத் முதல்வர் மோடி மீது குற்றம் சுமத்தி இருக்கிறதா என்று கூச்சநாச்சமின்றி சென்னையில் பேசியிருக்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் இந்தத் தீர்ப்பு உரையில் நீதிபதிகள் பயன்படுத்திய ஒரு சொல் இருக்கிறதே அதுதான் மிகுந்த உச்சகட்டம். அது, நவீன நீரோ மன்னன் என்பதுதான் மோடியின் தலைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் சூட்டப்பட்ட மிக உயர்ந்த பட்டம் என்று சோ சொன்னாலும் சொல்லுவார். (அப்படித்தானே!)
இந்திய அரசமைப்பில் நாடாளுமன்றத்திற்கும் மேலான உச்ச கட்ட அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றமே மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறிவிட்டதே!
ஒருக்கால் சோ அய்யர்வாளின் கண்ணோட்டத்தில் மோடியை சாதாரண மனிதரோடா ஒப்பிட்டுச் சொல்லியுள்ளார்? உச்ச நீதிமன்றமோ நீரோ என்ற மன்னனோடு அல்லவா கூறியுள்ளது? என்று உச்ச நீதிமன்ற வரிகளை உருட்டல் புரட்டல் செய்து பாஷ்யம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இஸ்ரத் ஜஹான் என்பவர் உட்பட நான்கு பேர்களைப் போலி என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளியது குஜராத் காவல்துறை.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அஜ்மத் அலி, ராணா மற்றும் ஜீஷன் ஜோஹார் ஆகியோர் மோதலின்போது கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு லஷ்கர்_இ_கொய்பா அமைப்போடு தொடர்பு உடையவர்கள் என்றும் குஜராத் மாநில முதல் அமைச்சர் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டு இருந்தனர் என்றும் மோடி ஆட்சியின் சிறப்புப் புலனாய்வுக் குழு கூறியதே!
இந்த விசாரணை குறித்து குஜராத் மாநில உயர் நீதிமன்றம் கூறியதுதான் இங்கு முக்கியமானது. இந்த வழக்கில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்துவார்கள் என்று குஜராத் காவல்துறையை நம்பமுடியாது. தேசிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் வழக்கு என்பதால் மத்திய புலனாய்வுக் குழு இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் கறாராகவே தெரிவித்ததே. இது என்ன மோடியின் நல்லாட்சிக்காகச் சூட்டப்பட்ட கணையாழியா?
இதற்குள் புகுந்து உள்குத்து விமர்சனம் செய்வாரோ வேதியர் குல திலகம் திருவாளர் சோ? ஊழலற்ற முறையின் இலக்கணமாக மோடி அரசு ராஜநடை போடுகிறது என்று சோ நற்சான்றுப் பத்திரம் இழைத்துக் கொடுக்கும் நரேந்திர மோடி தமது மாநிலத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் லோக் அயுக்தாவைச் செயல்பட விடவில்லையே ஏன்? மோடிதான் மடியில் கனம் இல்லாதவராயிற்றே! லோக் அயுக்தாவிற்கு நீதிபதியை நியமிப்பதில் ஏன் தயக்கம்?
ஆளுநர் அந்தப் பொறுப்பை ஏற்று நீதிபதியை நியமனம் செய்ததை எதிர்த்து மோடி தொடர்ந்த வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடியின் மண்டை ஓடு நொறுங்கும் வகையில் வாசகங்களைப் பயன்படுத்தித் தீர்ப்பு வழங்கியுள்ளதே!
குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முதல் அமைச்சர் மோடி மறுத்துள்ளது - மக்களாட்சியின் சாரமான சட்டத்தில் ஆட்சியில் உள்ள நம்பிக்கையையும், லோக் அயுக்தா அமைப்பின் நேர்மையையும் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது.
முதலமைச்சர் மோடியின் தலைமையிலான அமைச்சரவை பகுத்தறிவிற்குப் புறம்பாக இவ்வாறு துணிவுடன் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஆளுநர் கம்லா பேனிவால் அரசமைப்புச் சட்டத்தின் 163ஆவது பிரிவின்படி தனக்கு அளிக்கப்பட்டுள்ள தனது முடிவின்படி செயல்படும் அதிகாரத்தின் கீழ் ஓய்வு பெற்ற நீதிபதி மேதாவை லோகாயுத்தாவாக நியமித்தது சரிதான் என்று தாம் கருதுவதாக குஜராத் உயர் நீதிமன்ற நீதியரசர் வி.எம்.சகாய் விளாசிவிட்டாரே! (18.1.2012)
பகுத்தறிவுக்குப் புறம்பாக நரேந்திர மோடி நடந்து கொண்டுள்ளார் என்று நீதிபதி சொல்லி இருப்பதால், இங்குள்ள பகுத்தறிவு இயக்கத் தலைவரான வீரமணியின் தூண்டுதலால்தான் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி எழுதியிருக்கிறார் என்று சோ சொல்லக்கூடியவர்தான்.
குஜராத் மாநில முதல் அமைச்சர் மோடி பற்றி எந்த நீதிபதியாவது குற்றம் சொல்லியிருக்கின்றாரா என்ற திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளுக்கு, இந்த எடுத்துக்காட்டுகள் போதும் என்று நினைக்கிறோம்.
நிஜமாகத் தூங்குபவராக இருந்தால் இது போதும்; ஆனால் தூங்குவது போல பாசாங்கு செய்பவராயிற்றே சோ - அதுவும் நடிகரும் ஆயிற்றே! சுலபத்தில் முழிப்பாரா?
மேலும் ஒரு குட்டு!
குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட படுகொலைகளின்போது கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட, அடையாளம் தெரியாத 28 பேரின் சடலங்களைத் தோண்டி எடுத்தது தொடர்பாக சமூக சேவகர் டீஸ்டா செட்டால் வாட் மீது விசாரணைக்கு மாநில அரசு ஆணையிட்டதை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இது அவரைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டுள்ள போலியான வழக்குதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் குஜராத்தில், 2002இல் மதவெறி சக்திகளால் சிறுபான்மை மக்கள் மீது கொடூரமான தாக்குதல் தொடுக்கப்பட்டது. அப்போது கான்பூர் வட்டத்தின் பாந்தர்வாடா உள்ளிட்ட கிராமங்களில் கொல்லப்பட்ட 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை எனக்கூறி புதைக்கப்பட்டன. அந்தச் சடலங்களை அனுமதி பெறாமல் தோண்டி எடுத்ததாக ஷெட்டால்வாட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவியல் சட்டத்தின்கீழ் அவர் மீது விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது. இதை எதிர்த்து ஷெட்டால் வாட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவின் மீது (பிப்.21) விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு, இது மனுதாரரைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்டிருக்கிற 100 விழுக்காடு போலியான வழக்குதான் என்றும், இது போன்ற வழக்குகள் மாநில அரசுக்குப் பெருமை சேர்க்காது, என்றும் நீதிபதிகள் கூறினர்.
மாநில அரசு இந்த விசாரணையைத் தொடர்வது முறையல்ல என்று கூறிய நீதிபதிகள், ஷெட்டால் வாட் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் பிரதீப் கோஷ் படித்துப் பார்த்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும் என்று பணித்தனர். இதே போல், குஜராத் அரசின் வழக்குரைஞர் ஹேமன்டிகா வாஹி அந்த முதல் தகவல் அறிக்கையைப் படித்துப் பார்க்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
நீதிமன்றத்தின் இந்தக் குட்டு மோடிக்கு மகுடம் சூட்டப்பட்டதாகப் பொருளோ! ஒரு குலத்துக்கொரு நீதி என்பதுதானே சோ வகையறாக்களின் மனுதர்மச் சிந்தனை?
No comments:
Post a Comment