அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க மாநாடு நாக்பூரில் இம்மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்கள் குறிப்பிடத் தக்கவையாகும்.
2013 ஆம் ஆண்டில் முதன்மைச் செயல்பாட்டுத் திட்டமாக அரசியலிலிருந்து மதத்தைப் பிரித்திட வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கிப் பயணம் நடத்துதல் என்பது முதன்மையான தீர்மானமாகும்.
இது பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. பல்வேறு இனம், மதம், கலாச்சாரம் கலந்த ஒரு நாட்டில் மதச் சார்பின்மை என்பதுதான் சரியானதும், மிகவும் பொருத்தமானதுமாகும்.
நெருக்கடி நிலை காலத்தில் மதச்சார்பின்மை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பாக இணைக்கப்பட்டது.
ஆனால், நடைமுறையில் இந்த அம்சம் கறாராகச் செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பதைவிட, இதன் பொருள் உண்மையான முறையில் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியமான வினாவாகும்.
மதச் சார்பின்மை என்பதற்குத் தங்கள் விருப்பப்படி விளக்கம் சொல்பவர்கள் உண்டு. எல்லா மதங்களை யும் சமமாகப் பாவிப்பது என்று வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விமர்சனக் கர்த்தாக்கள் உண்டு.
தந்தை பெரியார் கூறும் உவமானம்தான் இதன் தன்மையைச் சரியாகப் படம் பிரித்துக் காட்டவல்லது.
செக்குலர்-மதச் சார்பற்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால், ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமானால், அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருளன்று. எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி கூப்பிட்ட வனிடம் எல்லாம் கலவி செய்யவேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பது போலப் பொருள் சொல்லுகிறார்கள் (விடுதலை 3.12.1971) என்று தந்தை பெரியார் தெரிவித்துள்ள கருத்து எளிதில் புரியும்படிச் சொல்லப்பட்டதாகும்.
செக்குலரிசம் என்ற சொல் எந்த ஆங்கில மொழியில் உருவானதோ, அந்த மொழியில் அதற்கு என்ன பொருள் என்பதுதான் முக்கியமே தவிர, அவரவர்க்கு விருப்பமான வியாக்கியானம் செய்வது தவறாகும் என்பதைத் தந்தை பெரியார் மேலும் செழுமைப்படுத்திக் கூறியிருக்கிறார்.
இதில் கொடுமை என்ன என்றால் சில மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கும் பி.ஜே.பி. மத்தியிலும் ஆட்சியில் இருந்த அந்தக் கட்சி இந்த மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதில்லை.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் சட்டப் பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று அறிவித்துள்ளனர் என்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் மதச் சார்பின்மைக்கு இது விரோதம் அல்லவா?
தேர்தல் ஆணையம் இதனை ஏன் கண்டுகொள்ள வில்லை என்ற வினா இப்பொழுது எழுந்துள்ளதே!
மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை தனி மனிதன் பிரச்சினை. அவரவர் வீட்டுக்குள் பூஜையறை சமாச் சாரம். அதனைக் கொண்டு வந்து அரசு நிகழ்ச்சி களில் திணிப்பது கடைந்தெடுத்த சட்ட மீறலும், மதவெறித்தனமுமேயாகும்.
உச்சநீதிமன்றம் வரை தெளிவுபடுத்தியிருந்தும் இன்னும் நடைபாதைக் கோயில்களை அகற்றாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பே!
அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சிக்கு உரியதாகும். அரசு அலுவலகங் களில் ஆயுத பூஜை கொண்டாடுவதில் தவறு இல்லை என்பதைவிட சட்டவிரோதம் வேறு எதுவாக இருக்க முடியும்?
கேட்டால் அரசு விடுமுறை நாள்களில்தான் அது நடக்கிறது என்று சமாதானம் கூறியுள்ளார் நீதிபதி. எல்லா மதப் பண்டிகைகளுக்கும்தான் அரசு விடுமுறை உண்டே! அப்படியானால் ஆள் ஆளுக்கு அவரவர் களுக்கு உகந்த வகையில் மதச் சடங்குகளை அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்கலாமா? இதனால் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், சாராதவர்களிடையே கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்படாதா?
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் நாக்பூர் மாநாட்டுத் தீர்மானத்தை சரியான நேரத்தில் வடித்துள்ளது வரவேற்கத்தக்கதே!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தனியார் கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வா?
- பக்தி வளர்க்கும் ஒழுக்கத்தின் இலட்சணம் பாரீர்!
- அவசரப் பணிகள்
- குஜராத் முதல் மாநிலமா?
- ஜெயேந்திரர் ஜே கோஷம் போட்டுத் திரிவது எப்படி?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment