Wednesday, March 21, 2012

கேரளம் வழி காட்டுகிறது


கேரள தேவசம் போர்டுக்கு உட்பட்ட இந்துக் கோவில்களில் 50 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்ற சேதி அறிவிப்பு, ஜாதியின் காரணமாக பிறப்பின் அடிப் படையில் தன்னாதிக்கம் செலுத்தும் பார்ப்பனர் ஆதிக்கத்தின் வேரில் வீசப்பட்ட வெடிகுண்டாகும். இது வரவேற்கத்தக்கதாகும்.
இதற்கு முன்பேகூட கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலங்காடு என்னும் கிராமத்தில் கொங்குப்பிள்ளை நீரிக்கோடு சிவன் கோவிலுக்கு பார்ப்பனர் அல்லாத ஒருவர் சந்திக்காரனாக நியமிக்கப்பட்டார் (மலையாள நாட்டில் பூசாரி அல்லது அர்ச்சகர் சந்திக்காரன் என்று அழைக்கப் படுவார்கள்).
அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு மற்றும் துரைசாமி ராஜு ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தித் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அமர்வுக்காகத் தீர்ப்பை எழுதிய துரைசாமிராஜு அவர்கள் குறிப்பிட்ட தெய்வத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகள், ஓத வேண்டிய மந்திரங்கள் தெரிந்த ஒருவர் பூசாரியாக (சந்திக்காரனாக) இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
மரபுப்படி, எந்த ஒரு கோவிலும் காலங்காலமாகப்  பார்ப்பனர் மட்டுமே பூசை செய்து கொண்டிருக்கலாம் அல்லது சந்திக்காரனாகச் செயல்பட்டிருக்கலாம்; அதற்காகப் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யக் கூடாது என்பதல்ல; சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம். பார்ப்பனர் அல்லாதார்கள் வேதங்களைப் படிக்கவும், சடங்குகள் செய்யவும், பூணூல் அணியவும் தடை செய்யப்பட்டி ருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சந்திக்காரனாக (அர்ச்சகராக) நியமிக்கப்படாமல் இருக்கலாம்; இதை வைத்துக் கொண்டு பார்ப்பனர் மட்டும்தான் கோவில்களில் சடங்குகள் செய்யலாம் எனக் கூறுவது நியாயம் அல்ல; அரசமைப்புச் சட்டம் 35 அய்க்காட்டி பார்ப்பனர் மட்டுமே சடங்குகள் செய்யும் உரிமையுடையவர்கள் என்று கூற முடியாது; பார்ப்பனர் அல்லாதவரை சடங்குகள் செய்ய அனுமதிப்பது அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள மத உரிமையை மீறியது ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை எழுதிப் பெருமை பெற்றார்.
பொது நியாயத்திற்கு அல்லது பகுத்தறிவுக்கு முரணான வகையில், மரபுப்படியான மூடநம்பிக் கையைப் பற்றியிருக்கக்கூடாது என்பது அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது சரத்தில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் மேலும் தீர்ப்பு கூறுகிறது. இந்த வகையில் தந்தை பெரியார் வைக்கம் போராட்டம், நடத்தி வெற்றி பெற்ற கேரள மண், இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமது வாழ்நாளில் இறுதிப் போராட்டம் என்று அறிவிப்பும் செய்தார்.
அதற்கான சட்டம் இயற்றப்பட்டதைத் தம் வாழ்நாளில் கண்டும்  தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டும் வழக்கம் போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்துள்ள நிலையிலும், கேரள மாநில  தேவசம்போர்டு பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகராக நியமித்திருக்கும் சூழ் நிலையையும் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, தந்தை பெரியார் காண விரும்பிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும், பிறப்பின் அடிப் படையில் பேதம் எந்த நிலையில் கற்பிக்கப்பட்டாலும், அது கண்டிப்பாகத் தகர்க்கப்பட வேண்டும்.
2001-2006 கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் இது ஏற்கப்பட்ட ஒன்றுதான் என்பதையும் இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நினைவூட்டுகிறோம். ஆவன செய்வாராக!


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...