ரோம் நாட்டில் வாடிகன் நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான மூன்று நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் வாடிகன் ஆட்சித் தலைவர் போப் ஜான் பென்டிக்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் தற்போது குழந்தை இல்லாத தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. திருமணமான பிறகு தாங்கள் நினைக்கும் நேரத்தில் குழந்தை பெற வேண்டுமென்று குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுகின்றனர். ஆனால் அவர்கள் குழந்தை பெற நினைக்கும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது.
இதனால் மனம் உடைந்து போகும் அவர்கள் உடலுறவு மூலம் குழந்தை பெற முயற்சி செய்வதில்லை. உடனே அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்களிடம் சென்று செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற முயற்சிக்கிறார்கள். மருத்துவர்களும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பெண்ணின் கரு முட்டையைப் பயன்படுத்தி செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தையை உருவாக்குகிறார்கள். சிலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறார்கள்.
இது முற்றிலும் தவறானது. செயற்கைக் கருத்தரிப்பு கடவுளின் படைப்புக்கு விரோதமானது. எனவே அதை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டும்; குழந்தையின்மைக்கான பரிசீலனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கைக் கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக் கூடாது. செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கும் முறையை ஒழிக்க வேண்டும் என்று போப் ஜான் பென்டிக்ஸ் கூறியுள்ளார்.
தேவையில்லாமல் கடவுள் பிரச்சினையை இதில் திணிப்பது அந்தக் கடவுள் நம்பிக்கைக்குத் தான் கேடானது.
குழந்தையைக் கொடுப்பது கடவுள்; ஆயுளை நிர்ணயிப்பது கடவுள் என்ற மூடநம்பிக்கை வெகு காலத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை இப்பொழுதே நேரில் யதார்த்தமாகப் பார்க்கிறோம்.
பொதுவாக மதம், முன்னேற்றத்திற்கு எப்பொழு துமே தடையாகவே இருந்து வந்திருக்கின்றது. அம்மை நோய் என்று அறிந்து அதற்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஜென்னர் என்ற விஞ்ஞானி தண்டிக்கப்பட்டதுண்டு. பிற்காலத்தில் அது அறியாமை என்று உணரப்பட்டு, உலகில் இன்றைய தினம் பெரும்பாலும் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்ற நிலை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அம்மை நோய் இருக்கிறது என்று சொன்னால் ஆயிரம் ரூபாய் பரிசு என்று கூட அரசு அறிவிக்கும் அளவுக்கு அறிவியல் வெற்றி பெற்றுவிட்டதே!
மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சி (Evolution) யின் அடிப்படையில் உருவானவன் என்றார் விஞ் ஞானி டார்வின். அதனைக் கடுமையாகக் கண்டித்தது கிறிஸ்துவ மதம்.
அதே நேரத்தில் பிற்காலத்தில் டார்வின் கொள்கை சரியானதே அதனை எதிர்த்தது வருந்தத்தக்கது என்று போப் ஜான்பால் கூறினார். இந்த உண்மையைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையா? (தி இந்து 26.10.1996).
அதே போல உலகம் உருண்டை என்றும், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றும் கண்டுபிடித்த விஞ்ஞானி கலிலியோவைக் கண்டித்து அவரின் எஞ்சிய வாழ்வினை நிரந்தரமாக வீட்டுக் காவலிலும் வைத்தனர் மதவாதிகள். 360 ஆண்டுகளுக்குப் பிறகு 1992இல் போப் என்ன சொன்னார்?
கலிலியோ சொன்னது அறிவியலின் அடிப்படையில் சரியானதே! அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் காக வருந்துவதாகவும் சொன்னார்.
அந்த வரிசையில் தான் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது கடவுளுக்கு எதிரான காரியம் என்று இன்று போப் சொல்லுவது எதிர் காலத்தில் மாற்றத்திற்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை.
மனிதன் செய்த பாவத்துக்குக் கடவுள் கொடுத்த தண்டனை நோய் என்று கிறித்தவர்கள் சொன்ன துண்டு. அதே கிறித்தவர்கள்தான் உலகெங்கும் மருத்துவமனைகளை நடத்தியும் வருகின்றனர். இது முரண்பாடல்லவா?
செயற்கை உயிரையே உண்டாக்கி விடலாம் என்றும் மனித நகலாக்கம் என்ற அளவுக்கு அறிவியல் வளர்ந்த ஒரு கால கட்டத்தில் மதவாதிகள் பிற்போக் குத்தனமான கருத்தினைத் திணிப்பார்களேயானால், அந்த மதம் அடி வாங்கிப் போய் விடும் என்பதில் அய்யமில்லை.
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- திராவிடர் இயக்கம் (3)
- திராவிடர் இயக்கம் (2)
- திராவிடர் இயக்கம் (1)
- தமிழ்நாட்டுக் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்?
- இந்தியா என்ன செய்யப் போகிறது?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment