Saturday, January 21, 2012

செய்திச் சிதறல்கள்!


எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இந்தியா வருகை ரத்து ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கிய இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்க வருவதாக இருந்த சல்மான் ருஷ்டி கடைசி நேரத்தில் தன் பயணத்தை ரத்து செய்து விட்டார்.

கூலிப்படை மூலம் அவர் கொல்லப்பட இருப்பதாகக் காவல்துறை எச்சரித்ததன் காரணமாக தம் பயணத்தை ரத்து செய்துவிட்டாராம். மதங்களைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர் - மதங்களைக் கடுமையாக விமர்சித்து நூல்களை எழுதியவர் என்பதால் இந்த மிரட்டலாம். மதங்களை விமர்சிக்கக் கூடாதா? கருத்துரிமை என்பது கண்களைக் கட்டி விட்டு நடக்கச் செய்வதுதானா!

மதங்கள் மட்டும் யாரையும் விமர்சிக்கலாமா? கடவுள் மறுப்பாளர்களைப் பேய்கள் என்றும், நாத்திகர்களுக்கு வைத்தியம் கூடச் செய்யக் கூடாது என்றும் கூறலாமா?

மதங்கள்பற்றி ருஷ்டி எழுதினார் என்றால், அவற்றை மறுக்க முடிந்தால் மறுக்க வேண்டியதுதானே?

சுதந்திர விமர்சனத்துக்கு முன் எந்த மதம் தான் தாக்குப் பிடிக்கும்? 

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி 23ஆவது நல்லிணக்க உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  பலே, பலே! ஆடுகளுக்காக ஓநாய்கள் உண்ணாவிரதம் இருந்தன என்றால் அதன் பொருள் -  ஆடுகளைச் சாப்பிடத்தான்! (உண்ணாவிரதம் இருந்தால் பசி அதிகமாக எடுக்கும் அல்லவா!)

முகாம்களில் முடங்கிக் கிடந்த முஸ்லீம்கள் குழந்தைப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றனர் என்று கூச்சம் இல்லாமல் நாக்கைப் புயலாகச் சுழற்றிய மோடிதான் நல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருக்கிறாராம். உச்சநீதிமன்றம் நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டது மோடியை - உயர்நீதிமன்றமோ பகுத்தறி வற்ற தன்முனைப்புக்காரர் என்று பட்டம் சூட்டியது. இதற்கு மேலும் அவரால் மட்டுமே முதல் அமைச்சராகத் தொடர முடிகிறது.

கடந்த முறை உண்ணாவிரதம் இருந்ததற்குச் செலவு ரூ.60 கோடியாம்! இந்த முறை?

விரைவில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிறது - அதற்காகத்தான் இந்த ஓநாய் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. முஸ்லிம்களை அதிகம் திரட்ட வேண்டும் இந்த உண்ணா விரதத் தில் போட்ட திட்டம் புஷ்வாணம் ஆகிவிட்டது என்பது நற்செய்தியே! 

12ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் உயர் கல்விக்காக முந்தைய திட்ட ஒதுக்கீட்டைக் காட்டிலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த உயர்கல்வி என்பது பெரும்பாலும் உயர் ஜாதிக்காரர் களுக்கான கல்விதான். இந்த உயர்கல்வி இடஒதுக்கீட்டிலிருந்து பெரும்பாலும் விதி விலக்குப் பெறும் துறைகளாகத்தான் இருந்து வருகின்றன. 14 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் அடிப் படைக் கல்வி 10 ஆண்டுகளில் அளிக்கப்படும் என்று இந்திய அரச மைப்புச் சட்டம் (1950 ஜனவரி 26) கூறுகிறது. (45ஆவது பிரிவு).

ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. முதல் வகுப்பில் 14 லட்சம் மாணவர்கள் சேர்கிறார்கள் என்றால் +2 படிப்புக்கு வரும்போது 8 லட்சம் மாணவர்கள் காணாமற்  போய் விடுகின் றனர். முதலில் இந்த அடிப்படைக் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும்! மேட்டுக்குடி கல்விக்கு ஒன்றும் அவசரம் இல்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...