இராமாயணத்தைப் பொறுத்தவரை இராவணன் வில்லன். ஆனால் இராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமமும் நம் நாட்டில் இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராமாபாய் நகர் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் கிராமத்தில்தான் ராவணனை வணங்குகிறார்கள்.
சமீபத்தில் இங்கு நடைபெற்ற ராவணமேளாவின்போது, கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. நமது துயரங்களைப் போக்கும் இலங்கை அரசர் வாழ்க என்பது இதன் அர்த்தம். வட இந்தியாவில் தசரா நடைபெறும் வேளையில் புக்ராயன் கிராமத்தில் ராவண விழா களை கட்டுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக இக்கிராமத்தில் ராவண மேளாவை முன்னெடுத்து நடத்தி வருகிறது பாரதீய தலித் பேந்தர் கமிட்டி இக்கிராமத்தினர், ராவணன் புத்த மதத்தைப் பின்பற்றியவன், வேத நிபுணன் என்று கூறுகிறார்கள். அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் சொல்கிறார்கள்.
பத்துத் தலைகள் காரணமாக ராவணனுக்கு தசனன் என்று பெயரும் உண்டு. பத்துத் தலைகளும் அவரின் ஞானத்தையே குறிக்கின்றனவே தவிர, அரக்கத்தனத்தை அல்ல என்பது அவர்களின் கருத்து.
தரசாவின்போது நாடெங்கும் பிரமாண்ட ராவண உருவங்கள் எரிக்கப்படுகையில், புக்ராயன் கிராமத்தினர் அதை எதிர்க்கின்றனர். ராவண மேளாவில் பவுத்த தீட்சை நிகழ்வும் நடைபெறுகிறது. இவ்வேளையில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து புக்ராயன் கிராமத்தில் குழுமும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இன மக்கள், புத்த துறவிகள் முன்னிலையில் புத்த மதத்தைத் தழுவுகின்றனர்.
தீட்சை நிகழ்வுக்கு முன்னால் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. கிராமத் தெருக்களில் சுற்றிச் சுற்றி வரும் அந்த ரதத்தில் இடம் பெற்றிருப்பவர் வேறு யார், ராவணன் தான்! ரதம் நகர நகர அதன்மீது மக்கள் பூக்களையும், வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள்.
யாரும் தவறியும் ராவணனை அவமதித்துவிடக் கூடாது என்பதில் விழாக் குழுவினர் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். ராவணனின் தம்பி கும்பகர்ணன், மகன் மேகநாதனின் உருவங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
உண்மையில் ராவணனைப் போற்றி வணங்குவது புக்ராயன் கிராமத்தில் மட்டும் உள்ள வழக்கமல்ல, அருகில் உள்ள ஷிவாலா பகுதியிலும் இவ்விழா தடபுடலாக நடக்கிறது. இங்குள்ள சின்மஸ்திகா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ராவணனை வணங்குகிறார்கள்.
இங்கு தசனன் கோவில் என்ற பெயரில் ராவணனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. தசராவின் போது மட்டும் 12 மணி நேரம் திறந்திருக்கும் இக்கோவிலில், தீவிர சிவபக்தனாக ராவணன் வணங்கப்படுகிறான்.
115 ஆண்டுப் பழைமையான தசனன் கோவிலில் 5 அடி உயர ராவணன் சிலை இருக்கிறது. சின்மஸ்திகா தேவியின் காவலனாக இப்பகுதி புராணக் கதைகள் ராவணனை குறிப்பிடுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியின்போது அதிகாலையில் இக்கோவில் கதவுகள் திறக்கப்படும். சிறந்த சிவபக்தரான ராவணன், சின்மஸ்திகா தேவியின் காவலராக இருக்கும் வரத்தைக் கோரிப் பெற்றார். அதனால்தான் சின்மஸ்திகா கோவிலுக்கு வெளியே ராவணனின் சிலை நிறுவப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகியான கே.கே. திவாரி கூறுகிறார்.
தசராவின்போது இக்கோவிலில் பெருங்கூட்டம் திரள்கிறது. ராவணனைப் பக்தி சிரத்தையோடு வணங்குகிறது. ஆனால் மாலையில் நாட்டின் பிற பகுதிகளில் ராவண உருவங்கள் எரிக்கப்படும்போது இங்கு கதவு அடைக்கப்படுகிறது.
ராவணன் மிகச் சிறந்த வீரர், உண்மையானவர், ராவணனின் நல்ல அம்சங்கள் காரணமாகவே நாங்கள் அவரை வணங்குகிறோம் என்பது திவாரி போன்ற ராவண பக்தர்களின் கருத்து.
- நன்றி: தினத்தந்தி 6.11.2011 பக்.3
No comments:
Post a Comment