Monday, January 2, 2012

புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் கடும் புயல் சேதம்! வந்தபின் காப்பது என்பதோடு வருமுன் காக்கும் திட்டங்கள் தேவை!



 கடந்த 31ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புதுச்சேரி மாவட்டம் ஆகியவற்றில் கடும் மழை மற்றும் சுனாமியைவிடக் கோரமான புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் துயரத்திற்கு எல்லையே இல்லை!

கடலோரப் பகுதியான அந்தப் பகுதிகள் எந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனாலும் உடனடி பாதிப்புக்கு ஆளாக வேண்டிய பகுதிகளாக இயற்கையிலே அமைந்து விடுகின்றன. எச்சரிக்கைகளைத் தந்த நிலையில், அரசும், அதிகாரிகளும் மேலும் விழிப்போடு கூடுதல் ஏற்பாடுகளைச் செய்திருந்தால்  தற்போதைய தொல்லைகளை ஓரளவு சமாளித்து விட்டிருக்கலாம்.

மின்விநியோகத் துண்டிப்பு வெளியே வராதீர்கள்; மீனவர்கள் கடலுக்குப் போகாதீர்கள்! என்றெல்லாம் சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது சரியானதுதான் என்றாலும், அதையும் தாண்டி மக்களின் அடிப்படைத் தேவை- குறிப்பாக குடிநீர் போன்றவைகளைத் தருவதற்கு உரிய ஏற்பாடுகள் இல்லாதது மிகவும் வேதனைக்குரியதாகும். குடிக்கக்கூட எங்களுக்குத் தண்ணீர் இல்லையே; தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் நாங்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லையே என்ற வருத்தமும், மன வேதனைகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உடனடி உதவியோ, ஆறுதலோ, நம்பிக்கையூட்டி துயர் துடைக்கும் நிலையோகூட ஏற்படும் சூழ்நிலை இல்லை!

பயிர்கள் - பல்வகை நெல், பலா, முந்திரி மற்றும் தானிய வகைகள் எல்லாம் நாசமாகி, நீரில் மூழ்கிய பழ மரங்கள் உள்பட அடியோடு பெயர்க்கப்பட்டு வீழ்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை அழித்து வயிற்றிலும் அடித்துவிட்ட கொடுமை!

உடனடியாக இப்பகுதி மக்களுக்கு உதவிகள், நிவாரணங்கள் அரசுகளால் - மத்திய - மாநில அரசுகளால் வழங்கப்படல் வேண்டும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வருவதில் எந்த சங்கடமும் இல்லை என்றாலும் உரியவர்களுக்கு உரிய முறையில் உதவிகள் சென்றடைவதற்கு ஒருங்கிணைப்பு சரியாக அமைய வேண்டுமே! துயர் துடைப்புப் பணிகளை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

1. உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

2. வீடு, நிலங்கள் பாதிப்புக்கு மாற்று ஏற்பாடுகள் - உதவிகள்.

துடிப்பும், செயல்திறனும் உள்ள நல்ல அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களை அரசு அடையாளம் கண்டு, காலதாமதமின்றி உடனே அங்கே அனுப்பிடல் வேண்டும். புதுவை மாநிலம் மத்திய உள்துறை ஆளுமைக்குக் கட்டுப்பட்டதால் அதுபற்றி போதிய அவசர கவனம் செலுத்த வேண்டும்.

அருள்கூர்ந்து மக்கள் துயர் துடைக்கும் இப்பணியில் அரசியல் பார்வைகளையும், அணுகுமுறைகளையும் ஒதுக்கிவிட்டு, கட்சிக் கண்ணோட்டத்திற்கு யாரும் இடம் தராமல் மனிதநேயத்திற்கே முன்னுரிமை கொடுத்து செயல்பட முன்வர வேண்டும்.

இது அனைவரது கூட்டுப் பொறுப்பாகும்! நமது இயக்கச் சார்பில் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஆகியோர் ஒரு குழுவாக சென்று மக்களை சந்தித்து அது தொடர்பான தகவல்களைக் கொடுக்க   இன்று அப்பகுதிகளுக்கு விரைந்து சென்றுள்ளனர்.  உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டியவைகளுக்குரிய நடவடிக்கைகள்பற்றி விளக்கிட வாய்ப்பு ஏற்படும். 

   கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...