Tuesday, December 27, 2011

ஓர் அரிமா நோக்கு!


1.6.1935இல் நீதிக்கட்சியின் வாரம் இருமுறையாகத் தொடங்கப்பட்டதுதான் விடுதலை இதழ். டி.ஏ.வி. நாதன் அதன் ஆசிரியராக இருந்தார்.

இப்படி ஓர் ஏடு வெளிவந்தது குறித்து வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் பேரானந்தத்தோடு வரவேற்றார். வேறு ஒருவராக இருந்தால் குடிஅரசு இதழுக்குப் போட்டியாக இன்னொரு ஏடு வருகிறதா என்று எண்ணம் கொண்டிருப்பர். சமூகநலனின் ஒட்டு மொத்த திரட்சியாயிற்றே உண்மையான புரட்சித் தலைவர் தந்தை பெரியார் எப்படிப் பாராட்டுகிறார்?

2,3 வருடங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ்ப்  பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்தும், அதன் பயன்களைச் சமீப காலத்தில் ஏற்பட்ட பல தோல்விகள் மூலம் அனுபவித்தும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல. அப்படிப்பட்ட நிலையில் விடுதலை என்னும் பெயரால் பத்திரிகை வெளியாக இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகின்றது என்று கவனிக்க மாட்டார்கள். எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ்ப் பத்திரிகை வந்துவிட்டது. அதைத் துய்த்து தினசரியாக்கி நிலை நிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என்று எழுதினார் தந்தை பெரியார் (குடிஅரசு 9.6.1935)

விடுதலை ஏடு நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பொறுப்பை ஏற்று பெரியார் செயல்பட வேண்டும் என்று பொப்பிலி அரசர், குமாரராஜா முத்தையா செட்டியார், சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரில் தந்தை பெரியார் விடுதலை நாளேட்டை ஈரோட்டிலிருந்து காலணா விலையில் நடத்தத் தொடங்கினார்.

இதற்கு முன்னதாக பகுத்தறிவு நாளேடாக (குறுகிய காலம்தான் 16.4.1934 முதல் 27.5.1934 வரைதான்) நடத்தப்பட்டதுண்டு. மூன்று மாதங்களுக்குப்பின் பகுத்தறிவு வார ஏடாக நடத்தப்பட்டது.

குடிஅரசு பகுத்தறிவு புரட்சி, விடுதலை உண்மை முதலிய தமிழ் இதழ்கள் ரிவோல்ட் ஜஸ்டிஸ்செட் ஆங்கில இதழ்களையும் நடத்தினார். பிற்காலத்தில் தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழும் தந்தை பெரியார் காலந்தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

பத்திரிகை உலகில் தந்தை பெரியார் அவர்களின் பாத்திரம் மிக முக்கியமானது. இனவுணர்வு இன்றி, பகுத்தறிவுச் சிந்தனையின்றி, முடமாகக் கிடந்த நமது மக்கள் மத்தியில் ஏடுகளை, இதழ்களை நடத்துவது என்பது பனி மலையில் தலைகீழாக ஏறுவது போன்றதே!

ஒரு கட்டத்தில் குடிஅரசு இதழை நடத்திய போது தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

ஏதோ பாஷாணத்தில் புழுத்த புழு உயிர் நிலைத்துக் கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இடையில் பார்ப்பனர்களின் எதிர்ப்பு - இருட்டடிப்பு, பார்ப்பனர் அல்லாதாரின் பொறுப்பற்ற தன்மை - அரசுகளின் அடக்கு முறைகள் இவற்றையெல்லாம் கடந்து நன்றி உணர்வற்ற இந்த மக்களுக்குத் தொண்டு செய்தே தீருவது என்ற வைராக்கியமுள்ள தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளை நடத்தியுள்ளார்.

நட்டத்தில் நடந்து தீர வேண்டிய ஏடுகளாக அவை இருந்தாலும், அவை பற்றியெல்லாம் கவலைப்படாமல், சொந்தப்பணத்தை செலவிட்டு, திராவிட சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்றும் பணியைத் தன்னந் தனியராகத் தம் தோளில் சுமந்து கடைசி மூச்சு அடங்கும் வரை செய்து கொண்டே இருந்தார்.

1962இல் விடுதலையை அதற்கு மேல் நாளேடாக நடத்த முடியாது என்ற நெருக்கடி ஏற்பட்ட நிலையில்தான் இயக்கத்திற்கு வாராது வந்தமாமணியாய் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார்கள். அவர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்தார் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார்.

விடுதலை வெள்ளி விழாவின்போது தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் 2500 விடுதலை சந்தாக்களைச் சேர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இரண்டு மாதங்களில் 2500 சந்தாக்கள் என்று அய்யா குறிப்பிட்டு இருந்தார்! இப்பொழுது மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைக் குவித்துள்ளோம் என்றால், இதன் பொருளென்ன?

விடுதலையை வீரமணியின் ஆதிக்கத்தில் தந்தை பெரியார் விட்டுச் சென்றது வீண் போகவில்லை என்பதிலிருந்தே தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு எந்த அளவுக்குத் துல்லியமானது என்பது சொல்லாமலே விளங்கும்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக் குப் பிறகும்  தமிழர் தலைவர் தலைமையில் கழகம் ஆரோக்கிய மாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. தமிழின மக்கள் கழகத்தின் மதிப்பை - தேவையை உணரும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றன என்று தானே பொருள்?

கழகத் தோழர்களே - மாபெரும் சாதனையை நிகழ்த்தி முடிந்துள்ளீர்கள்! உங்கள் கரங்களுக்கு பாராட்டு முத்தங்கள்  நன்றி முத்தங்கள்!

இந்த 50 ஆயிரம் சந்தாக்கள் சேர்ப்பதில் ஒன்றுகூடக் குறைந்து விடாமல், அடிப்படை ஆதாரச் சுருதியாக தக்க வைத்துக் கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக உங்களின் அணுகு முறைகளும், தொடர்புகளும் அர்த்தமுள்ள வகையில் இருக்க வேண்டும். இப்பொழுது நாம் நடத்திக் காட்டியுள்ள சாதனையை விட இதுதான்  மிக முக்கியமானது - மேலானதும்கூட! மறவாதீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...