தோழர்களே, வரும் 17.12.2011 மாலை மதுரை மாநகரில் இரு பெரும் காரணங்களுக்காக திராவிடர் கழக இளை ஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
அடாவடித்தனமான போராட்டம் அல்ல; சட்டப் படியான, நியாயப்படியான, நீதிப்படியான, ஒப்பந்தப் படியான காரணங்களின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டம்.
(1) 1896ஆம் ஆண்டு - திருவனந்தபுரம் சமஸ்தானத் துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஒப்பந்தம் என்பது 999 ஆண்டுகளுக்கானது. அப்படிப் பார்த்தால் 115 ஆண்டுகள் மட்டுமே கழிந்த நிலையில் அதற்குள் வம்படி வழக்கில் கேரள அரசு ஈடுபட்டு இருப்பது சரியா?
(2) 152 அடி அளவுக்குத் தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணை பலமாக தொழில் நுட்ப ரீதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையைப் பொருத்தவரையில் 120 அடிக்கும் கீழ் தேங்கியுள்ள நீரைத் தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ள முடியாது. 112 அடிக்கும் மேல்தான் மலையைக் குடைந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. 112 அடிக்குக் கீழ் உள்ள நீர் சுற்றுச் சூழல் பாதுகாப்புக் காகவும், வனவிலங்குகள் பாதுகாப்புக்காகவும் தான் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கவில்லையா?
(3) அணை இருக்கும் இடத்தில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுகிறது என்று கேரளம் இப்பொழுது கரடி விடுகிறதே - உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 32 ஆண்டுகளுக்கு முன்பே 1979இல் அணை பலகீனமாக உள்ளது. உடைந்துவிடும் என்று பூச்சாண்டியைக் கேரள அரசு கிளப்பியதா - இல்லையா?
(4) மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆய்வை மேற்கொள்ளச் செய்யவே அந்தக் குழுவும் ஆய்வு செய்து அணை பலமாகவே உள்ளது; 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று சொல்லவில்லையா?
எதற்கு சந்தேகம்? 30 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு செலவு செய்து அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்து முடிக்கவில்லையா? (அந்தப் பணிகளையும் செய்ய விடாமல் பல குறுக்கீடுகளை, தொல்லைகளைக் கேரள அரசு செய்தது என்பதும் உண்மை, தமிழகத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட மின் இணைப்பைக்கூடத் துண்டித்ததுண்டு).
அதற்குப் பிறகும்கூட 152 அடி தண்ணீரைத் தேக்கக் கூடாது என்று கேரளம் முரண்டு பிடிக்கவில்லையா?
(5) மதுரை சோ-கோ அறக்கட்டளை, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 1998இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவில்லையா?
அப்பொழுது மத்திய நீர்வள ஆணையத்தின் மூலம் ஒன்பது பேர் கொண்ட உயர்நிலைப் பொறியாளர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப் பணிக்கப்படவில்லையா?
2000 ஆண்டு அக்டோபர் 10,11 ஆகிய இரு நாள் களிலும் அந்த குழு ஆய்வு செய்து அணை பலமாகவே உள்ளது என்று அறுதியிட்டுக் கூறவில்லையா?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்.கே. சபர்வால் (தலைமை நீதிபதி) சி.கே. தக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு (Bench) வழங்கிய தீர்ப்பு என்ன?
நில நடுக்கம் உள்பட பல்வேறு கோணங்களில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டு இருக் கிறது. நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்தில் எந்தவித அடிப்படையும் இல்லை; இன்னும் சொல்லப் போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்து கொண்டதாகவே நிபுணர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
மத்திய நீர்வளத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அணையின் சில பாகங்களில் பழுது பார்க்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி விட்டது. ஆனால் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்குக் கேரள அரசு அனுமதிக்கவில்லை.
அணையின் எல்லாப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. அளவுக்கு அதிகமான நீர்க்கசிவு எங்கும் இல்லை, அணை சமீபத்தில்தான் பலப்படுத்தப்பட் டுள்ளது - என்று உச்சநீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்கிடவில்லையா!
6) இவ்வளவுக்குப் பிறகும் கேரள மாநில அரசு அடம் பிடிக்கிறதே - இதற்குத் தீர்வு தான் என்ன? மத்திய அரசு இருந்தும் பலன் என்ன? உச்சநீதிமன்ற தீர்ப்புக்குத் தான் என்ன மரியாதை?
7) தேசிய நீரோட்டம் பேசும் கட்சிகள் நீர் ஓட்டம் என்று வரும்பொழுது பிரிவினைவாதிகள் ஆகிவிடவில்லையா?
எங்கு சுற்றினாலும் கடைசியில் வந்து சேர வேண்டிய இடம் தந்தை பெரியார் அவர்களின் ஈரோட்டுச் சந்திப்பில் தான். கடைசி வழி வீதிமன்றம்தான் - அது நீதி மன்றத்தை விடப் பலமானது.
மதுரையில் திரள்வீர் தோழர்களே, தமிழர்களே உரிமைக்குக் குரல் கொடுப்போம் - உண்மையை நிலை நாட்டுவோம், வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment