Thursday, December 1, 2011

என்னை இளமையாக்கும் தோழர்களுக்கு நன்றி! நன்றி!!


இவ்வாண்டு (2011) டிசம்பர் 2 ஆம் தேதி எனது 79 ஆம் ஆண்டு பிறந்த நாள்.

பிறந்த ஆண்டைக் கணக்கிடும்போது முதல் பிறந்த நாளை விட்டு, அதன் 2 ஆவது பிறந்த நாளைத் தொடக்கமாகக் கருதி, முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வழமையைக் கணக்கிட்டால் உங்களது வயது 78 ஆம் ஆண்டு நிறைவுதான், 79 அல்ல என்கிறார்கள் சில நண்பர்களும், பிள்ளைகளும்!

முதுமையை நோக்கிப் பயணம்!

நாங்கள் 79 ஆம் ஆண்டு பிறக்கிறது என்றுதான் கணக்கிட்டுக் கொள்வோமே தவிர, 79 ஆண்டு ஆகிவிட்டது என்று கூறவில்லையே என்று பதில் தரவும் மற்ற சில நண்பர்கள் - ஏன் பல நண்பர்கள் உளர்!

எப்படியானாலும் வயது அதிகமாகிறது; முதுமையை நோக்கிய பயணம் துவங்கி, காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற பழமொழிக்கேற்ப, வயது ஏறிக் கொண்டே செல்வது குறித்து கொண்டாடுகிறவர்கள் மகிழ்ந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் (எங்களைப் போன்ற வர்கள்) சற்று கவலைப்படவே செய்வது இயல்புதானே!

அறிஞர்கள் கணக்குப்படி, மனிதர்களின் வயது குறித்து சில முக்கிய கருத்துகள் உண்டு. பிறப்பு கால கணக்குப்படி  (Biological Age  என்றபடி) உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் - 79 ஆம் ஆண்டு பிறந்த நாள் துவக்கம்.

சிலருக்கு உடற்கூற்று அவயப்படி, சீரிளமையான உடலின் உறுப்புகளின் பலமும் உண்டு; 25 வயதில் 50 வயது போன்ற உடல் தளர்ச்சியும், உடல் உறுப்புகளின் நிலையும் உண்டு. இதற்கு அவர்களது (Physiological)   உடல் அவயவங்களைப் பொறுத்த வயது என்றும் சில வல்லுநர்கள் கூறுவர்.

இளமையாக்கும் தொண்டு


இதையெல்லாம் தாண்டி, பிறந்த கணக்கின்படியும், மனித உடல் உறுப்புகளின் நிலையின்படியும் உள்ள யதார்த்தம் எப்படி இருந்த போதிலும், அவர்களது உற்சாகம், பணியில் அவர்களுக்குள்ள ஆர்வம் குறை யாத- தன்னம்பிக்கையான வாழ்க்கை - பிறவி போராட்ட குணம் - இவைகளைக் கொண்டு மதிப்பிட்டுப் பார்த்தால் சிலர் 85 ஆனாலும், 25 அல்லது 35 வயதுக்குரிய மனோ நிலை - மனோபலத்துடன் வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் நம்பிக்கையாளர்களை விட அதிக நாள் - அதிக காலம் வாழ்கின்றனர் என்று  சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் என்ற ஒரு செய்தி வெளியாகியது. ஆம். அவர்களது தளராத தன்னம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம்.

தந்தை பெரியாரே எடுத்துக்காட்டு!

தந்தை பெரியார் அவர்களை விட இதற்கு நல்ல எடுத்துக்காட்டு (Roll Model) வேறு எவரையும் சொல்ல முடியாது. 95 ஆண்டுகள் (சில நாட்கள் குறைவாக)  வாழ்ந்து காட்டிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். அன்னை மணியம்மையாருக்கு இதில் - மருத்துவர்கள் போலவே பெரும் பங்கு உண்டு. அறிஞர் அண்ணா அவர்களே 1968 இல் முதல்வரான பின்பு நண்பர் சம்பந்தமும், நானும் அண்ணாவை நேரில் சந்தித்தபோது அய்யா உடல் நலம் பற்றிய விசாரிப்பில் இதனைப் பெருமிதத்துடன் கூறினார்.

94 ஆண்டுகள் வாழ்ந்த மைசூர் பொறியாளர் - கன்னட விசுவேசுர அய்யா அவர்களிடம் ஒரு செய்தி யாளர் கேட்டபோது, மிகுந்த கட்டுப்பாடுகளை எல்லாவற்றிலும் - உணவு, பழக்க வழக்கங்கள் உட்பட கடைப்பிடிப்பவன் என்பதுதான் காரணம் என்கிறார்!

அதைப் படித்துவிட்டு அன்றைய மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் அவர்கள் நேரில் தந்தை பெரியாரைச் சந்தித்துக் கேட்ட போது, அய்யா அவர்கள் சிரித்துக் கொண்டே, மிகச் சாவதானமாக, அவருக்கு நேர்மாறாக எந்தக் கட்டுப் பாட்டையும் கடைப் பிடிக்காதவன் நான் என்றார்!

அடுத்த நாள், அது பற்றியே ஓர் விளக்க அறிக்கையும் தந்தார்கள்; மூக்கும் நாக்கும் ஒதுக்கும் எதனையும் தவிர மற்ற அனைத்தையும் உண்பேன். கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்றார்.

அன்னை மணியம்மையாரின் கண்டிப்பு

அன்னை மணியம்மையாரால் பற்பல நேரங்களில் காட்டப்பட்ட கண்டிப்புகளுக்கு - உணவை அய்யா அவர்கள் விரும்பி எடுத்துக் கொள்ளும்போது - மட்டும் இசைவது போல் அவர்கள் - அதுவும் மனமில்லாமலேயே - நடந்து கொள்ளுவது தவிர, வேறு கட்டுப்பாடே கிடையாது. புலவர் இமயவரம்பனும் அப்படி அய்யா உண்ணுகிறபோது, மிகவும் வாதாடி அய்யாவை இணங்க வைத்த காட்சிகளும் உண்டு.

விரும்பிய பணியை வேட்கையுடன் செய்வதில் அவருக்கு ஏற்பட்ட மனநிறைவும், தன் இயக்கம் வெற்றிப் பாதையில் வீறுநடை போடத் துவங்கிவிட்டது என்ற நம்பிக்கையும் அய்யாவை, ஓர் இளைஞனைப் போல் இறுதி வரை வாழும்படிச் செய்தது!

அய்யா அவர்களின் தொண்டர்களுக்குத் தொண் டனான எனக்கும், அய்யாவின் தலைமையேற்று, சமுதாயப் பணியை ஏற்று அவர்தம் கொள்கை பிரச்சாரக் கருவி யாகவும், அந்த இராணுவத்தில் ஒரு கட்டுப்பாடு மாறாத போர்வீரனாகவும் ஆனதில்தான் எத்துணை எத்துணை இன்பம்!

இன்னும் 30, 40 ஆண்டுகள் குறையக்கூடாதா?

அறைகூவல்கள் ஒரு புறம்; அகிலம் தனது வழிக்கு வேகமாக வருகிறது என்ற மகிழ்ச்சி மறுபுறம் என்ற நிலையில் அய்யா மறைவதற்குச் சில வாரங்கள் முன்பு உரையாடலின்போது, இப்போது எனக்கு ஆசையாக இருக்கிறது; நமக்கு இன்னும் 30,40 ஆண்டு குறைவான வயதாக இருக்கக்கூடாதா என்று நினைக்கிறேன்; காரணம் உலகம் நம் வழியில் அவ்வளவு வேகமாக வருகிறது. அதனைப் பார்த்து மகிழ்வதோடு, தோன்றும் எதிர்ப்புகளை ஒரு கை பார்த்து விடலாமே! என்றார். வேனில் அதைக் கேட்ட நாங்கள் மகிழ்ந்து, நெகிழ்ந்தோம்.

அதே மனநிலைதான் அவரது தொண்டனும் மாணவனுமான எனக்கும் கூட இப்போது ஏற்படுகிறது! 21 ஆம் நூற்றாண்டும் இனி வரும் நூற்றாண்டுகளும் தொலை நோக்காளரான தந்தை பெரியார்தம் சிந்தனைகளின் செயல் வடிவமாக புத்துலகம் மலர்ந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி.

பன்மொழிகளில் பெரியார்!

பெரியாரை உலக மயமாக்குதல் காலத்தின் கட்டாயம், ஞாலத்தின் தேவை. அதற்கான திட்டங்களில் முதன்மையானது, பன்மொழி களில் பெரியார் என்ற திட்டம். ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளிலும், இந்திய மொழிகளில் முக்கியமாக ஹிந்தி, மராத்தியம், (ஏற்கெனவே மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வந்துள்ளன.) ஆகிய மொழிகளில் வெளியிடும் திட்டம்.  அந்தப் பணி - பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனைப் புலம் வாயிலாகவும், திராவிடர் கழக இயக்கத்தாலும் தொய்வின்றித் தொடர வேண்டும். விரைந்து செயல்படுத்தப் படும்.

பெரியார் பற்றிய மதிப்பீடுகளை - அய்யாவின் தத்துவங்களையும் உள்ளடக்கியவைகளாகக் கொண்டு எழுத வைக்கும் திட்டம் - கருக் கொண்டுள்ளது. விரைவில் உருக்கொண்டு உலா வரும்.

விடுதலை - ஓர் ஆவணம்!

விடுதலை ஏடு என்பது இன்றுள்ள செய்திகளைத் தரும் வெறும் நாளேடு மட்டுமல்ல; இனி வரும் காலங் களுக்கும், தலைமுறைகளுக்குமான ஆய்வுக்குரிய ஆவணப் பெட்டகம் - அறிவாயுதம்! அதனால் மட்டுமே பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து பகுத்தறிவுப் போர் நடத்த முடியும் என்பதால் 50 ஆயிரம் சந்தாக்களை உற்சாகத்துடன் தோழர்களும், தோழியர்களும் திரட்டித் தருவது, விடுதலையை வாழ வைப்பதைவிட இந்த இனத்தின் இழந்த உரிமைகளை மீட்டுருவாக்கிடச் செய்யும் மிகத் தேவையான ஒன்றாகும்.

50 ஆண்டுகள் விடுதலை ஏட்டின் வரலாற்றில் எனது பங்களிப்பு உண்டு என்பதை விட, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும், கழகக் குடும்பத்தவரும் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி வருகிறேன் என்ற மனநிறைவுடன், பணி தொடர ஊக்க மாத்திரையாக 50 ஆயிரம் சந்தாக்கள் அளிப்பு விழா என்னுள் மேலும் பலமாகச் செலுத்துவதாக அமையும் என்பது உறுதி!
கொள்கை உறவுகளும், ரத்த உறவுகளும் கொடுக்கும் ஒத்துழைப்பு!

இந்த நாளில் எத்தனையோ உடல் உபாதைகளி லிருந்தும், மனச் சங்கடங்களிலிருந்தும் எனக்கு நிம்மதி கிட்டும் வகையில்தான் எனது இரத்த உறவுகளும், கொள்கை உறவுகளும் ஒத்துழைப்பு தந்து நடந்து வருகி றார்கள். அது ஒரு அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

என்னைக் கண்டிக்கும் உரிமையுடன் காத்து வரும் (53 ஆண்டு காலமாக) எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களுக்கும், என்னை காப்பாற்றி வரும் மருத்துவ நண்பர்களுக்கும், எனது நினைப்பைப் புரிந்து செயல் மறவர்களாகி செயல்பட்டு, இயக்கப் பணிகளுக்கு ஏற்றம் தரும் என்னருந் தோழர்கள் - அலுவலகமானாலும் - கல்வி நிலையங்களானாலும் அத்தனையும் உள்ளடக்கியே கூறுகிறேன்.

எனது ஓட்டுநர்களிலிருந்து, என்னுடன் பணி புரியும் சக தோழர்கள் அத்துணைப் பேரும் எள் என்றால் எண் ணெயாக நிற்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்றாலும், என்னைக் கேட்காமல் எண்ணெயாக மாட்டார்கள் என்ற கட்டுப்பாடு காக்கும் கடமை வீரர்கள் அத்துணைப் பேருக்கும் எனது இதயத்தின் அடித் தளத்திலிருந்த நன்றியை கை கோர்த்துத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இளமையாக்கும் தோழர்களுக்கு நன்றி!

நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல. என்னைப் பொறுத்தவரை, எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர வேறு பொறுப்பு இல்லை எனவேதான் என்னை நான் வாலிபன் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். இறுதி வரை வாலிபனாகவே இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை  வசதி அளித்திருக்கிறது.

- தந்தை பெரியார் குடிஅரசு 18-3-1944

என்னை இளமையாக்கும் என் தோழர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து,  பாதையில்லா ஊருக்கெல்லாம்  பெரியார் பாதை அமைப்போம்  என்று சூளுரைத்து, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கி. வீரமணி
சிங்கப்பூர்                                                                                                                                                                                 தலைவர்
1-12-2011                                                                                                                                                                     திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...