Thursday, December 8, 2011

விளையாட்டுகளில் அரச விளையாட்டு எனப்படுவது எது?


வெவ்வேறுபட்ட காலங்களில் ரதப் போட்டி (Chariot racing), குதிரை மீது அமர்ந்து ஈட்டிச் சண்டை செய்வது (jousting), வல்லூறு வேட்டை (Falconry) ,  மரப்பந்து விளையாட்டு (Bowls) , குதிரை மீது அமர்ந்து குச்சிகள் கொண்டு விளையாடும் பந்தாட்டம்  (Polo) ஆகியவையும் அண்மைக்காலமாக குதிரைப் பந்தயமும் விளையாட்டுகளில் அரசன் என்ற நிலையைப் பெற்றிருந்தன.
ஆனால் கடந்த 2000 ஆண்டு காலத்தில் அரச அந்தஸ்து அளிக்கப்பட்ட ஒரே ஒரு விளையாட்டு கோழிச் சண்டைதான்.
1835 இல் தடை செய்யப்படுவது வரை, அது இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோழிக் குழி (cockpit) இருக்கும் என்ற பெருமை பெற்றிருந்தது. அரச பரம்பரையினரில் இருந்து சாதாரண பள்ளிச் சிறுவர்கள் வரை இதில் கலந்து கொண்டனர். வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையிலும், டவுனிங் தெருவிலும் கூட கோழிக் குழிகள் இருந்தன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஒரு பென்னி பணம் கொண்டு வரும் மாணவர்கள் தங்கள் சண்டைக் கோழிகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்த சண்டைக்கு விடலாம்.
பழைய இங்கிலீஷ் விளையாட்டு (Old English Game - OEG)   எவ்வாறு இங்கிலாந்து நாட்டுக்கு வந்தது என்பது எவருக்குமே தெரியாது. போனிசிய வர்த்தகவர்கள் அதனை அறிமுகப்படுத்தினர் என்ற கதை நிலவுகிறது. ஆனால் கிழக்கில் இருந்து இங்கு வந்து குடியேறிய இரும்புக் கால மக்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. கி.பி. 54 இல் இறைச்சிக்கு அல்லாமல் சண்டையிடுவதற்காகவே பறவைகளை பண்டைய இங்கிலாந்து நாட்டுக்காரர்கள் வளர்த்ததைக் கண்டு ஜூலியஸ் சீசர் பாராட்டினார்.  OEG என்ற விளையாட்டே அனைத்துக் கோழிச் சண்டைகளிலும் தீவிரமானது என்று உலகம் முழுவதிலும் கருதப்பட்டது. ஒரு நல்ல சண்டைக்கோழி தனிப்பட்ட தூண்டுதல் ஏதுமின்றி இறக்கும் வரை சண்டை போடும். அதனாலேயே சண்டை போடும் பறவைகளில் கோழி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
சண்டைக் கோழி வளர்ப்பவர்களிடையே கடுமையான போட்டி நிலவியது.  துணிவாகச் சண்டையிடும் கோழியைத் தயார் செய்யும் முறை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. வெதுவெதுப்பான சிறுநீரில் அதனை முக்கி எடுப்பது என்பது உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படும் பழக்கம். சண்டைக் கோழியின் கொண்டையும், கழுத்துக்குக் கீழே தாடி போல் தொங்கும் சதையும் நீக்கப்பட்டு, அதன் கால்களில் இரும்புக் கத்திகள் சண்டை போடுவதற்காகக் கட்டப்படும். ஒரு நல்ல கோழிச் சண்டைக்காரன், காயமடைந்த தன் கோழியின் காயம் பட்ட தலையைத் தன் வாயைக் கொண்டு சுத்தம் செய்வதற்குத் தயங்கமாட்டான். கோழிச் சண்டையும், ஓட்டப் பந்தயமும் ஒரே நேரத்தில் இடம் பெறும். இதன் காரணம் இரண்டிலும் பந்தயம் கட்டும் சூதாட்டம் இருப்பதுதான். அமெரிக்காவின் லூசியானா மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்களில் கோழிப் பந்தயம் இன்றும் கூட சட்டப்படி அனுமதிக்கப் பட்டதாகும். மற்ற 16 மாகாணங்களில்தான் இது தடைசெய்யப்பட்டதாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...