தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
ஒரு மிளகாயின் காரம் மிகுந்த பகுதி எது?
ஒரு மிளகாயின் காரம் மிகுந்த பகுதி எது?
காரம் மிகுந்த மிளகாயின் பகுதி அதன் விதைகள்தான் என்று தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் நம்மை நம்பவைத்து வந்துள்ளனர். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் மிளகாய் விதைகள் ஒட்டியிருக்கும் அதன் மத்திய நரம்புப் பகுதிதான் அதிக காரம் மிகுந்ததாகும். அதன் மத்திய நரம்புப் பகுதியில்தான் மிளகாய்க்கு அதிக காரம் அளிக்கும் வண்ணமற்ற, சுவையற்ற கலவையான கேப்சைசின் (Capsaicin) அதிக அளவில் இருக்கிறது.
அமெரிக்க மருந்தியலாளர் வில்பர் எல். ஸ்கோவில்லி என்பவர் 1912 இல் உருவாக்கிய ஸ்கோவில்லி அளவுகோல்தான் மிளகாயின் காரத்தன்மையை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. தனது தொடக்க கால சோதனைகளில் அவர் மிளகாய் சாற்றை சாராயத்தில் கரைத்து, சர்க்கரை நீரில் சேர்த்தார். பல்வேறுபட்ட மிளகாய்களின் சாற்றை, அவற்றின் காரச்சுவையே தெரியாமல் போகும் வரை, குடித்துப்பார்க்கும்படி சோதனையாளர்கள் பலரை அவர் கேட்டுக் கொண்டார். அதன்பின் மிளகாய்களின் காரத்தன்மையை அளவிட ஒரு அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்டது.
எடுத்துக்காட்டாக ஒரு ஜலாபினோ மிளகு ஸ்கோவில்லி கார அளவுகோளில் 4,500 அளவு காரம் கொண்டதாகும். அதன் காரத்தன்மை தெரியாமல் செய்வதற்கு அதனை 4,500 வரை நீர்த்துப் போகச் செய்ய வேண்டியிருக்கும்.
உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்குக் கடற்கரையில் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் விளையும் மிளகாய்தான். மைக்கேல் மற்றும் ஜாய்மைசூடின் ஆகியோர் டோர்சர்செட் நாகா (சமஸ்கிருதத்தில் பாம்பு என்று பொருள்) என்ற, வங்காள தேசத்திலிருந்து வந்த ஒரு தாவரத்தை வளர்த்தனர்.
2005 ஆம் ஆண்டில் அது இரண்டு அமெரிக்க சோதனைச் சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் காரத்தன்மையின் அளவு 9,23,000 ஸ்கோவில்லி அளவு கோலில் இருந்தது தெரிய வந்தது. அதன் ஒரு சிறுபகுதியை சேர்த்தாலும் கூட அந்த உணவை உண்ணவே முடியாது. அவ்வாறு உண்டாலும், உண்பவர் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். என்றாலும் கடந்த ஆண்டு 2,50,000 நாகாக்கள் விற்பனை ஆயின.
சரியான கண்ணோட்டத்தில் கூறவேண்டுமானால், தூய்மையான கேப்சைசின் பொடி 150-160 லட்சம் ஸ்கோவில்லி அளவு கோல் காரத்தன்மை கொண்டதாக இருக்கும். அதன் காரத் தன்மையின் அதிக அளவின் காரணமாக, அதனைச் சோதனை செய்யும் மருந்தியலாளர்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு தனி அறையில், அந்தக் காரத்தை முகர்ந்துவிடாமல் இருப்பதற்கு, உடலை முழுமையாக மூடும் பாதுகாப்பான உடை அணிந்துதான் சோதனை செய்யவேண்டும்.
மிளகாய்களில் 3,510 வகை மிளகாய் ரகங்கள் உள்ளன.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment