Wednesday, December 7, 2011

டிசம்பர் 6


1992 டிசம்பர் 6ஆம் நாள் இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் மட்டுமல்ல - உலக வரலாற்றிலேயேகூட வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு நடந்த நாள்.
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நாள்.
இந்த இடிப்புக்குக் காரணமானவர்கள் சாதாரண மானவர்கள் அல்லர். இந்தியாவின் துணைப் பிரதமராக, வும் உள்துறை அமைச்சராகவும் பிற்காலத்தில் இருந்தவர் உட்பட இந்தக் கேவலமான காட்டு விலங்காண்டித் தனத்தில் ஈடுபட்டார்கள்.
வெட்கக்கேட்டுக்குப் பொட்டு வைத்ததுபோல - இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள்  19 ஆண்டு காலத்திற்குப்பிறகும் தண்டிக்கப்படவில்லை.
இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள்  யார்? பின்னணி என்ன என்பதைக் கண்டுபிடிக்க நீதிபதி லிபரான் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் (16.12.1992 முதல் 30.6.2009 வரை) 17 ஆண்டுகளுக்குப் பின் தன் விசாரணை அறிக்கைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னணியில் 68 பேர்கள் உள்ளனர் என்றும் பட்டியலிட்டும் கொடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயும் இந்தக் குற்றவாளிகளின் பட்டியலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளார்.
900 பக்கங்கள் கொண்ட லிபரான் அறிக்கையையும் பரிந்துரைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் 2009 நவம்பர் 24 அன்று தாக்கல் செய்தார்.
யோக்கிய சிகாமணிகள் போல ரத யாத்திரை நடத்துவோர் இதன்மீது விவாதம் நடத்திட முன்வந்திருக்க வேண்டாமா? என்ன செய்தார்கள்? நாடாளுமன்றத்தையே நடத்தவிடவில்லை. காரணம் என்ன தெரியுமா?
நீதிபதி லிபரான் குற்றம் இழைத்தோர் பட்டியலில்  வாஜ்பேயியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளாராம்.
வாஜ்பேயி என்ன வானத்திலிருந்து குதித்தவரா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டவரா?
இதே வாய்பேயிதானே பாபர் மசூதி இடிப்புக்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாபர் மசூதியை இடிக்கத் தூண்டினார். மறுக்க முடியுமா?
நாளை அயோத்தியில் நடக்க இருக்கும் கரசேவையின் போது அங்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முட்களைப் போன்ற கற்களின்மீது நின்று கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது அல்லவா! அமைதியாக அமர்ந்து பாடுவதற்கு ஏதுவாக மண்ணை சமன் செய்ய வேண்டும் - என்று கவிஞர் என்று தன்னைக் காட்டிக் கொண்டு பேசினாரா - இல்லையா?
இப்படி தூண்டுதல் செய்தவர் குற்றவாளிதானே? கேட்டால் என்ன சொல்லுகிறார்? தமாஷாகப் பேசினாராம். அடுத்த மதத்தவர் வழிபாட்டுத்தலத்தை இடித்துத் தரை மட்டமாக்குவது வாஜ்பேயியின் அகராதியில், பிஜேபியின் வட்டாரத்தில் தமாஷ்தானா?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வாஜ்பேயியின் பெயரை இணைப்பது குறித்து நீதிபதி லிபரான் அறிக்கை ஒருபக்கம் கிடக்கட்டும்.
அகில  உலக விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் ஒருவர் இருக்கிறாரே அசோக்சிங்கால், அவர் என்ன கூறியிருக்கிறார்?
ராம ஜென்ம பூமி இயக்கம்தான் மசூதி இடிப்புக்குக் காரணமாக இருந்தது. அந்த இயக்கத்தோடு முன்னாள் பிரதமர் வாஜ்பேயிக்கு முக்கிய தொடர்பு உண்டு என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் சொன்னதுண்டே! (டில்லி - 27.11.2009).
வாஜ்பேயி குற்றவாளி என்றால், அதனை நீதிமன்றத் தில் மெய்ப்பித்து விட்டு, குற்றமற்ற சொக்கத்தங்கம் என்று வெளியில் வர வேண்டியதுதானே!
ஊழல் வழக்குகளைவிட மிகக் கொடுமையானது - மதவாத வழக்கு அல்லவா?  பாபர் மசூதி இடிப்பின் காரணமாக இரண்டாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனரே, அதற்கு யார் பொறுப்பு?
2ஜி வழக்குப்பற்றி தொண்டையிலிருந்து குருதி பீறிடக் கத்தும் இந்தப் பெரிய மனிதர்கள் உலகையே குலுக்கிய இந்த பாபர் மசூதி இடிப்புக் குறித்து மவுன சாமியார்களாக இருப்பது ஏன்?
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து தானே மும்பையில் கலவரம்? அந்தக் கலவரத்துக்குக் காரணமாக இருந்தவர் - இராணுவத் தளபதி போல வழி நடத்தியவர் பால் தாக்கரே என்று நீதிபதி கிருஷ்ணா ஆணையம் தெளிவுபடுத்தியதே - அவர்மீது நடவடிக்கை உண்டா?
அண்மைக் காலமாக நாட்டில் மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம்பியதற்கும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் - குஜராத் கொடுமைகளுக்கும் அடிப்படை மூல காரணம் பி.ஜே.பி. சங்பரிவார் தலைவர்களும், தொண்டரடி பொடியாழ்வார்களும் 1992 டிசம்பர் 6இல் (இன்றுதான்) பாபர் மசூதியை இடித்ததுதான்.
இதற்கான குற்றவாளிகளுக்குச் சட்டரீதியாக தண்டனை வாங்கிக் கொடுக்காதவரை நாட்டில் அமைதிக்கு உத்தரவாதம் என்பது குதிரைக் கொம்பே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...