Wednesday, November 23, 2011

மனிதரால் கட்டப்பட்ட மிகப் பெரிய ஒரு தனி கட்டமைப்பு எது?


மனிதரால் கட்டப்பட்ட  மிகப் பெரிய ஒரு தனி கட்டமைப்பு  எது?
பெரிய பிரமிடு, சீன நெடுஞ் சுவர், குவைத்தில் உள்ள முபராக் அல் கபில் டவர் என்று பதில் அளித்தால், அவை தவறாகும்.
நாம் இதற்கு அளிக்கும் விடை நியூயார்க் நகரின் ஸ்டேடன் தீவில் உள்ள ஃப்ரெஷ் கில்ஸ் (Fresh Kills) என்னும் குப்பை மேடுதான்.
இந்த ஃப்ரெஷ் கில்ஸ் (Fresh Kills)    என்ற நிலப் பள்ளத்தை குப்பைகளால் நிரப்பும் இடம் 1948 இல் திறக்கப்பட்டது. டச்சு மொழியில் கில் ‘kil’ என்றால் சிறு ஆறு என்று பொருள்படும் இச்சொல்லையொட்டி இப்பெயரிடப்பட்டது. மனித வரலாற்றில் மிகப் பெரிய செயல் திட்டங்களில் ஒன்றாக விரைவில் அது ஆகிவிட்டது. அதன் மூலம், மனிதரால் கட்டப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு என்ற பெருமையை சீனநெடுஞ் சுவரிடமிருந்து இது பறித்துக் கொண்டது.
இந்த இடம் 12 சதுர கி.மீ. (4.6 சதுர மைல்) பரப்பு கொண்டது. பணி நடைபெறும் நாட்களில் 650 டன் குப்பை, கட்டட இடிபாடுகள் கப்பல் மூலம் தினமும் அனுப்பப்பட்டு வந்தது. திட்டமிட்டபடி இந்த இடம் தொடர்ந்து குப்பை கொட்டப் பயன்படுத்தப் பட்டிருந்தால், கிழக்கு கடற்கரையிலேயே மிகவும் உயரமான இடமாக அது வளர்ந்து இருக்கும். ஒரு கட்டத்தில் இந்த குப்பை மேடு 25 மீட்டர் (80 அடி) உயரமாக, சுதந்திரதேவி சிலையை விட உயரமாக இருந்தது. உள்ளூர் நிர்பந்தத்தால் 2001 மார்ச்சில் இந்த குப்பை மேடு மூடப்பட்டது. உலக வர்த்தக மய்யக் கட்டடங்கள் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டபோது விழுந்த இடிபாடுகளைக் கொட்டுவதற்காக மறுபடியும் இந்த குப்பை மேடு திறக்கப்பட்டது.
இப்போது அது முழுவதுமாக மூடப்பட்டுவிட்டது. அதனை மறுபடியும் திறக்கக்கூடாது என்று புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரின் எல்லைக்குள் எந்த குப்பை மேடும் அனுமதிக்கப் படமாட்டாது. இந்த ஃப்ரெஷ் கில்ஸ் குப்பை மேடு தற்போது சமப்படுத்தப்பட்டு பூங்காவுக்கான இடமாகவும், வனவிலங்குகள் சரணாலயமாகவும் மாற்றப்பட்டு விட்டது. நல்லது.
அதிக பரப்பில் பரவியுள்ள பல கட்டடமைப்புகள் உள்ளன என்பது உண்மைதான். அமெரிக்க சாலை இணைப்புகள் மற்றும் இன்டர்நெட், ஜிபிஎஸ் சேடலைட் இணைப்புகள் ஆகியவை பரப்பில் பெரும் அளவு கொண்டவையாக இருக்கக் கூடும். ஆனாலும்,  ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் ஒரே மிகப் பெரிய தனிக் கட்டமைப்பு ஃப்ரெஷ் கில்ஸ் குப்பை மேடுதான்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...