Thursday, November 24, 2011

பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். 

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...