தமிழ்ச் சான்றோருக்கு உரியதாய் இருந்த அந்தணர் என்ற சொல்வழக்கு, அதே பொருளில் சில சங்கப் பாடல்களில் ஆளப்படுகிறது (சிறுபாணாற்றுப்படை 187, பரிபாடல் 1:40, கலித்தொகை 72:18, அய்ங்குறுநூறு 384 போன்றவை), மேல்மட்டத்தில் இருந்த வேந்தர்களின் தொடர்பால், அந்த உயரிய சொல் வழக்கை மெல்ல மெல்ல பிராமணர்கள் தமக்குரியதாக ஆக்கிக் கொண்டதை உணரமுடிகிறது. பல பாடல்களில் பிராமணர்களைக் குறிக்க, அந்தணர் என்ற சொல் பயன்பட்டிருப்பது, இதை உறுதி செய்யும்.
(குறிஞ்சிப்பாட்டு. 225, பதிற்றுப்பத்து 24:8 பரிபாடல் 1:30, புறம் 1, 126, அய்ங்குறுநூறு 387 போன்றவை). மேலும், தொல்காப்பியத்தில், ஆண் - பெண்ணின் அகவாழ்விற்குத் துணைநின்ற, மதிப்புமிக்க பார்ப்பார், நாளடைவில் நிலைதாழ்ந்து, பிழைப்பிற்காக வேறு தொழில்களைச் செய்திருக்க வேண்டும். வேள்வி செய்யாத பார்ப்பான், சங்கறுக்கும் தொழில் செய்ததை, அகநானூறு 24 ஆம் பாடல் கூறுகிறது. முன்னாளில், உயர்ந்த சமூக மதிப்பிற்குரியதாய் விளங்கிய, பார்ப்பான், பார்ப்பார் ஆகிய சொற்களையும் பிராமணர் தமதாக்கிக் கொண்டனர்.
சங்க இலக்கியங்களில் இச்சொல்லாடல்கள், பிராணமர்களையே அதிகம் குறித்தன. (நற்றிணை 32, குறுந்தொகை 156, புறம். 9, 34, 43, அகம்.337 போன்றவை). இதேபோல், தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் உயர்ந்தோர், மூத்தோர் (தமையன், தந்தை) ஆகியோரைச் சுட்ட, அய்யர் என்ற சொல் பயன்பட்டது. (தொல். சூத். 1091, அகம் 126, 240, 302, நற்.222 போன்றவை). இந்தச் சொல்லையும், பிராமணர்கள் பின்னாளில் கைப்பற்றினர். இவை, உளவியல் ரீதியில் மக்கள் மத்தியில் தம்மை உயர்ந்தவர்களாகக் காட்டி, அங்கீகாரம் பெறுவதற்குச் செய்யப்பட்ட, வெற்றிகரமான - ஆதிக்க நோக்கிலான மடைமாற்றங்களாகவே தெரிகின்றன.
சங்ககாலத்தில், வருணதர்மத்தின் வாடை வீசுவதாக எடுத்துக்காட்டப் பயன்படுவது, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் புறப்பாடலும் (183), அதில் வரும் நாற்பால் என்ற சொல்லும்தான். கல்வியின் சிறப்பை வலியுறுத்துவதற்காகப் பாடப்பட்ட பாடல் அது. கற்பிக்கும் ஆசானுக்குத் தேவைப்படும்போது உதவி செய்தும், பொருள் கொடுத்தும், அவரிடம் பணிவுடன் கல்வி கற்க வேண்டும் என்று அப்பாடல் தொடங்குகிறது. நாடாளும் வேந்தன், ஒரு குடும்பத்தில் மூத்தவனை அழைக்காமல், கல்வி கற்றவனையே அழைப்பான்; அப்படிப்பட்ட கல்வி அறிவு உடையவர் காட்டும் வழியில்தான் அரசு செல்லும், என்று அப்பாடல் தொடர்கிறது. அறிவுடையோன் ஆறு அரசு செல்லும் என்று கூறுவது - பிராமணர் கூறும் சாத்திர நெறிப்படிதான், அரசன் ஆட்சிபுரிய வேண்டும், என்ற மனுநீதிக்கு எதிரானது ஆகும். மேலும், ஒரு குடும்பத்தில் தாய்கூட, மற்ற மகன்களைவிட, கற்ற மகனைத்தான் விரும்புவாள் என்றும் அப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இறுதியாக,
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்பால் ஒருவன் கற்பின்,
கீழ்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே _ என்று முடிகிறது அப்பாடல். அதாவது, வேற்றுமை தெரிந்த நான்கு வகையினருள், கீழ்ப்பிரிவில் உள்ள ஒருவன் கற்றவனாயிருந்தால், மேல்பிரிவில் உள்ளவனும் அவனை மதித்து, அவனுடன் இணைந்து நடப்பான் என்பது, இவ்வரிகளின் நேர்பொருள், நாற்பால் - மேற்பால் - கீழ்பால் என்று வருவதால், வழக்கம் போல், இதற்கும் வருண அடிப்படையில் உரையாசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கல்விக்கு (ஓதல்) உரிமையில்லாத சூத்திரனுக்கு பதில், நான்காம் வருணமாக - வேளாளரை உரையாசிரியர்கள் காட்டுகின்றனர்.
இப்பாடல், வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது என்று நச்சினார்க்கினியர் எழுதினார். நான்காம் வருணத்தாருக்குக் கல்வி கற்கும் உரிமை இருப்பதாக ஏற்றுக் கொள்வதே, மனுநீதிக்கு மாறானதாகும்.
சங்க இலக்கியத்தில், வேறு எங்குமே சுட்டப்படாத - அன்றைய நடைமுறையில் இல்லாத, அந்தணர் - அரசர் - வணிகர் - வேளாளர் என்ற நான்கு பிரிவுகளை, பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் எப்படிப் பேசியிருக்க முடியும்? ஏற்கெனவே, முன்னுள்ள வரிகளின்படி, கற்றறிந்தோன், வீட்டில் தாயிடமும் - நாட்டில் அரசனிடமும் சிறப்பு அங்கீகாரம் பெற்றபின், வேறு எந்த மேற்பால் ஒருவனிடமும் அங்கீகாரம் பெற வேண்டிய அவசியம், அன்றைய சூழலில் எழவில்லை. ஒரு வாதத்திற்காக என்று வைத்துக் கொண்டாலும், வேதக்கல்வி கற்ற பிராமணன், வேறு கல்வி கற்ற நான்காம் வருணத்தானை, எப்படி உயர்ந்தவனாகவோ - தனக்கு இணையானவனாகவோ ஏற்றுக் கொள்வான்? எனவே, நாற்பால் என்பது, வருணப் பகுப்பை அர்த்தப்படுத்தாமல், அதற்கு வேறான நான்கு வகையினரை அர்த்தப்படுத்தி இருக்கவேண்டும். பாண்டியன் எந்த நாற்பாலைக் கூறினான் என்பதை, இன்று அய்யத்திற்கு இடமின்றிக் கூறமுடியாவிட்டாலும், ஊகத்தின் வழியே ஒருகருத்தைப் பரிசீலனைக்காக முன்வைப்பது, தவறான அணுகுமுறை ஆகாது. பாடல் தந்த பாண்டியன் அரசனாக இருந்ததாலும் - போரின் வெற்றிதான், நாட்டின் - அரசனின் வெற்றியாகக் கருதப்பட்டது.
போர் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவை தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை மற்றும் காலாட்படை என்ற நான்கு படை வகைகள். இப்படைப் பிரிவினருக்கான சமூக _ அரசியல் மதிப்பும், இதே வரிசையில், மேலிருந்து கீழாகத்தான் இருந்திருக்கும். கடைசிப் பிரிவான காலாட்படை, இயல்பாகவே உடல்பலம் மட்டும் கொண்டவர்களால் அமைக்கப்பட்டதாய் இருந்திருக்கும். பொருளாதார ரீதியில் குறைவுபட்ட, சாதாரணக் குடிகள்தான் இப்படையில் இருந்திருப்பார்கள். அவர்களிடம், மேம்பட்ட கல்வி அறிவு இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நான்காம் பிரிவிலுள்ள வீரன், கல்வியறிவும் பெற்றுவிட்டால் _ அந்த அறிவு, போர்நடத்தும் திறனை உயர்த்தும் என்பதால் - அவனை, மேலே இருக்கும் தேர்ப்படை பிரிவில் உள்ள தளபதி போன்றவர்கள், மதித்துத் தம்மோடு இணைத்துச் செயல்படுவார்கள் என்று ஊகிப்பது, அன்றய போர்ச்சூழலுக்கு முரணானதாக இல்லை.
பிராமணர்கள், அன்று சில அரசர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தபோதும் _ பேரரசன் முதல், இரவும் - பகலும் விழித்துக் காவல் தொழில் செய்யும் கடைக்கோடி மாந்தன் வரை,
உண்பது நாழி: உடுப்பவை இரண்டே ; பிறவும் எல்லாம் ஓர் ஓக்குமே! என்று சமத்துவம் பாடிய நக்கீரர் வாழ்ந்தது சங்ககாலத்தில்தான். அன்று, வருணபேதங்கள் நிலைபெறாத நிலையில், அதற்கான முயற்சிகள் பிராமணரால் மேற்கொள்ளப்பட்டன என்பதை நிறுவ, ஒரு பாடல் துணை செய்கிறது. அந்த ஒருபாடல்தான், முதன் முதலாக மனுவகுத்த ஆறு கர்மங்களை, பிராமணராகிய அந்தணருக்குக் கூறுகிறது. பாலைக் கவுதமனார் என்ற புலவர் பாடிய பதிற்றுப்பத்து 24 ஆம் பாடலில் உள்ள வரிகள் இவை:
ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல்
ஈதல், ஏற்றல் என்று , ஆறு புரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர்.....
ஈதல், ஏற்றல் என்று , ஆறு புரிந்து ஒழுகும்
அறம்புரி அந்தணர்.....
உழவர்கள்: மனுநீதிப்படி, உழவுத் தொழில் வைசியனுக்கு உரியது என்றாலும், பயிரிடும் தொழிலை நிருவகிக்கும் பொறுப்பை மட்டும் அவன் பார்த்துக்கொண்டு, நிலத்தில் உழுவது உள்ளிட்ட, உடலுழைப்பு சார்ந்த விவசாயப் பணிகளை, சூத்திரனைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்று மனு கூறினார். ஏனெனில், அவரது தர்மப்படி, உழவுத் தொழில் இழிவானதாகும். சிலர், பயிரிடுவதை நல்லதென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது.
(மனு தர்மம் - பத்தாம் அத்தியாயம் - சூத்திரம் 84). இங்கே, சிலர் என்பது, உழவை மதித்த -_ உலகாயதம் பேசிய, நாத்திகர்களைக் குறிப்பதாகும். வாழ்க்கை நடத்துவதற்கே சிக்கல் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில்கூட, பிராமணனும், சத்திரியனும் வைசியனுக்குரிய தொழில்களில், பயிர்த்தொழிலைத் தவிர பிற தொழில்களைத்தான் செய்யவேண்டும் என்று விதிக்கும் மனுநீதி, அதை இப்படி நியாயப்படுத்துகிறது; அதிக ஹிம்சை உள்ளதாயும், (உடல் வருத்தம் தரக்கூடியதாகவும்), பாராதீனமாயும் (சுதந்திரமற்ற தொழிலாகவும்) உள்ள பயிரிடுதலை, (பிராமணனும், சத்திரியனும்) நீக்கவேண்டியது அவசியம். (அத்தியாயம் 10 _ சூத்திரம் 83) , இதுதான், உழவுக்கும் - உழவனுக்கும் மனு அளித்த மரியாதை, உழவை இழிவானதாகக் கருதும் பார்வை, பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே காணப்படவில்லை.
நேர்மாறாக, தமிழிலக்கியங்கள் உழவைப் பெருமைப்படுத்தி, உழவனை உயர்த்திப்பிடித்தன. இதற்குச் சங்க இலக்கியத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே, என்பது குட புலவியனாரின் பாடல் வரி. (இதே வரி, அப்படியே மணிமேகலையின் பாத்திரம் பெற்ற காதையில் வருகிறது. - வரி 96). உடலுக்கு உணவுதான் முதல்தேவை ; நிலம் மற்றும் நீரின் சேர்க்கையால் விளைவது உணவு. எனவே, நிலத்தையும், நீரையும் இணைத்து, உணவை விளைவிப்போர், உடலையும் - உயிரையும் படைத்தவர்களாக ஆகின்றனர் (புறம் 18) என்று, உழவர்கள் படைத்துக் காக்கும் கடவுளின் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். -யுத்த களத்தில் உனது போர்ப்படை பகைவரை வீழ்த்தி ஈட்டும் வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பது, உழுபடையின் (உழவர்படையின்) ஏர், நிலத்தை உழுது உருவாக்கிய விளைச்சல்தான் என்று, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற அரசனிடம், வெள்ளைக்குடி நாகனார் எடுத்துரைத்தார் (புறம். 35).
சங்காலத்தில் புன்செய் நிலங்கள், வன்புலம் என்றும், நன்செய் நிலங்கள் மென்புலம் என்றும் அழைக்கப்பட்டன. காலப்போக்கில், மென்புலம், வன்புலங்களைவிட உயர்வாயும், புஞ்சைத் தானியங்கள், நஞ்சைத் தானியங்களைவிட மதிப்புக் குறைந்ததாயும் ஆயின. சோழன் நலங்கிள்ளியின் மருதநில வயல்களுக்கும், பகை அரசனின் புஞ்சை நிலங்களுக்கும் உள்ள முரண்டபாட்டை, புறம். 28 ஆம் பாடல் காட்டியது. இன்று, கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களில் குடியேறுவதைப்போல், அன்று, மதிப்பிழந்த _ வானம்பார்த்த வன்புலப் பகுதியிலிருந்த பலர், வாழ்வுநாடி வளமான மருதநிலப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். புஞ்சை விவசாயம் தவிர _ எந்தத் தொழிலும் அறியாத அவர்கள், வேறு வழியின்றி, குடியேறிய இடங்களில், விவசாயக் கூலிகளாகத்தான் பிழைப்பு நடத்தி இருக்கவேண்டும். அத்தோடு, மருதநிலப்பகுதியில் நில உடைமையாளர் என்ற வர்க்கம் உருவானபோது, இயல்பாகவே பாரம்பரிய உழவர்கள் நிலமற்றவர்களாகவோ - துண்டுநிலங்களுக்கு மட்டும் சொந்தக்காரர்களாகவோ மாற்றப்பட்டனர்.
நில உடைமையாளர்கள், உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாமல், நிலமற்ற உழவர்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து, தமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டனர். இப்படியாக மருத நிலத்தில் உழுவித்து உண்போர் _ என்ற இருபிரிவுகள், தெளிவாக நிலைபெற்றன. உழுவித்து உண்போர், மலைபோன்ற நெற்குவியலுக்கும் - ஏணிகளுக்கு எட்டாத உயரமுடைய நெற்குதிர்களுக்கும் சொந்தமானவர்களாக இருந்ததையும், அவர்களின் வளமான வாழ்வையும் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம் (வரிகள் 240 முதல் 253 முடிய). உழுது உண்பவரின் ஏழ்மை நிலையை _ வீட்டிலிருந்த பழைய சோறு பிடிக்காததால், வெறுப்படைந்து, சாப்பிடாமல் செல்லும் குழந்தைகளையும் _ வைக்கோலால் வேயப்பட்ட எளிய குடிசை முற்றத்தையும் காட்டி வெளிப்படுத்துகிறது, அதே பாடல் (வரிகள் 223 முதல் 227 முடிய). நில உடைமையாளர்களின் உருவாக்கத்தாலும், அரசனுக்கு நெருக்கமாய் இருந்ததன் மூலம், அவர்கள் பெற்ற பதவிகளாலும், அதிகாரத்தாலும், உழுதுண்ணும் உழவர்கள் உடலுழைப்புப் பிரிவினராகத் தாழ்ந்தனர். இது சங்ககால எல்லைக்குள் நடந்தேறிய சமூகப் பரிணாமமாகும்.
No comments:
Post a Comment