Friday, September 23, 2011

பெரியாரின் சமூகநீதி இடஒதுக்கீடு தத்துவம் இன்று உலகமயமாகிக் கொண்டிருக்கிறது


பெரியாரின் சமூகநீதி இடஒதுக்கீடு தத்துவம் இன்று உலகமயமாகிக் கொண்டிருக்கிறது


தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கவுரை

சென்னை, செப்.23- தந்தை பெரியாரின் சமூகநீதித் தத்துவமான இடஒதுக்கீடு இன்று உலக அளவில் ஏற்கப்படும் சூழ்நிலை உருவாகி யிருக்கிறது. பெரியார் உலக மயமாகிக் கொண்டு வருகிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் என்ன வேண்டும்? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பி விளக்க வுரையாற்றினார்.
தமிழர் தலைவர் உரை
சென்னையில் நேற்று (22.9.2011) மாலை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு தமது உரையில் குறிப் பிட்டதாவது:
ஏ. கருணானந்தன்
எனக்கு முன்னாலே பேசிய விவேகானந்தர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் ஏ. கருணானந்தன் அவர்கள் விவேகானந்தர் கல்லூரியில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் போராட்டம் எப்படி உள்ளுக்குள்ளேயே நடைபெற்றது என்பதை மிகச் சிறப் பாக விளக்கினார். இந்த செய்திகளை எல்லாம் நூலாக வெளியிட்டு ஆவணப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் இந்த சமுதாயத்தின் நிலை என்ன என்பதை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள்.
ரமேஷ் பிரபாவின் இன உணர்வு
அதேபோல கலைஞர் டி.வி. ரமேஷ் பிரபா அவர்களும் மிக அழகாக ஒரு கருத்தைச் சொன்னார். பார்ப்பனர்கள் எப்படியிருக்கிறார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றிச் சொன்னார். அவர் இவ்வளவு ஆழமாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. தமிழர்கள் இப்படி புரிந்துணர்வோடு பேசுவதைக் கண்டு பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். அண்ணா வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் இதன் சிறப்பு. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் பார்ப்பனர்களைப் பற்றிச் சொல்லு வார். பார்ப்பனர்கள் வெறும் படிப்பாளிகளே தவிர, அவர்கள் அறிவாளிகள் கிடையாது. அவர்களுக்கு என்றைக்கும் பின்புத்திதான் என்று சொல்லுவார்.
அதேபோல அண்ணல் அம்பேத்கர் அவர்களும் சொல்லுவார். பார்ப்பனர்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. அவர்கள் எதையும் வரிப்படுத்தி, மனப்பாடம் செய்து சொல்வார்களே தவிர, அவர்களுக்குத் தகுதி, திறமை எல்லாம் கிடையாது என்று மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு சொன்னார்.
பச்சையப்பன் கல்லூரியில் இந்த நிலை
1928-க்கு முன்னாலே பச்சையப்பன் கல்லூரி நிலைமை என்ன? பச்சையப்ப முதலியார் அறக்கட் டளையைத் தொடங்கினார். வெள்ளைக்காரர்களும் அதற்கு உதவி செய்தார்கள்.
அந்த பச்சையப்பன் கல்லூரியில் 1928-க்கு முன்பு வரை சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் இடமில்லை.
நீதிக்கட்சி தோன்றிய பிறகு தந்தை பெரியார்தான் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்று அரசு குறிப்புகளில் சூத்திரன் என்ற வார்த்தை அறவே நீக்கப்பட வேண்டும்.
அடுத்த தீர்மானம் தாழ்த்தப்பட்டவர்களையும், முஸ்லீம் களையும் சேர்க்க வேண்டும் என்று பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தினால் தமிழர்கள் பச்சையப்பன் கல்லூரியில் நுழைய முடிந்தது.
அதற்கு முன்பு நான்கு வர்ணத் தாருக்குக் கீழ் உள்ள அவர்ணஸ்தர்கள் என்று சொல்லப்படுகின்ற தாழ்த்தப்பட்ட வர்களை கல்லூரியில் சேர்ப்பதில்லை என்ற கொடுமையான ஒரு சூழ்நிலை இருந்தது.
எஸ்.எம்.எஸ். மூலம் ஓட்டு போட்டவர் களுக்கு இது தெரியுமா? கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய மோகத்தில் இருப்பவர்களுக்கு இது தெரியுமா?
மாற்றத்திற்காக மாற்றமா?
மாற்றத்திற்காக மாற்றம் வேண்டும் என்று சொல்லுகிறவர்களால் இன்றைக்கு நாம் எப்படிப்பட்டதொரு பெரிய சங்க டத்தை அனுபவித்துக் கொண்டு வருகின்றோம்.
பெரியாருடைய மூச்சுக் காற்றை உள்வாங்கி வெளியிட்டவர்கள் தான் பேரறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் போன்றவர்கள்.
அண்ணா அவர்கள் பெரியாரிடம் எப்படி நடந்து கொண்டார்; அவர் இறுதி வரை எப்படி கொள்கைப்பற்று மாறாமல் நன்றி உணர்ச்சியோடு நடந்து கொண் டார் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர்.
19.1.1967  அன்று நாகரசம்பட்டியில் புதிதாகக் கட்டப் பெற்ற பெரியார் ராமசாமி கல்வி நிலையத் திறப்பு விழா. விழாவுக்குப் பெரியார் வருகிறார். ஆகவே தாங்கள் அந்த விழாவிற்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் சொன்னவுடன் அய்யா வருகிறார் அல்லவா. நானும் வருகிறேன் என்று மகிழ்ச்சியோடு சொல்லி அய்யாவும், அண்ணாவும் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். அந்த விழா என்னுடைய தலைமையில் நடைபெற்றது.
பெரியார்மீது சாம்பல் வீச்சு
பெரியார் பேசிய பிறகு அண்ணா பேசுகிறார்: ஒரு முறை பெரியாரும், நானும் ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஈங்கூர் என்னும் கிராமத்தில் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்காகச் சென்றோம். அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவர், நாங்கள் பேசிய இடத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அந்த ஊரில் உள்ள மற்றவர்களை விட்டு, நாங்கள் பேசிக் கொண்டிருக்கிற இடத்தில் காற்றடிக்கும் பக்கம் பார்த்துச் சாம்பலை தூவிக் கொண்டேயிருக்கச் சொன்னார். ஏவி விட்டு பேசிக் கொண்டேயிருந்தார். நான் பேசும்போது குறிப்பிட்டேன். சாம்பலைத் தூவிக் கொண்டேயிருக் கிறீர்களே; அது பெரியாரை என்ன செய்யும்? தாடியிலே படலாம் அது ஏற்கெனவே வெள்ளை அதனால் எந்தக் கெடுதலும் வராது என்று பேசினேன்.
பெரியார் அவர்கள் எடுத்துச் சொல் லுகிற கருத்துகளையும் கொள்கை களையும் பரப்புவதற்கு, செயலாக்கு வதற்கு  நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே (அரசியலே) இருந்து கொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா? அல்லது அதனை விட்டு விட்டு உங்களிடம் வந்து தமிழகத்திலேயே இதே பேச்சைப் பேசிக் கொண்டு உங்களோடு இருக்கவா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர் களுக்கே விட்டு விடுகின்றேன். அவர் என்னோடு வந்து பணியாற்று என்றால் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்று அண்ணா அவர்கள் அன்றைக்கு மிகச் சிறப்பாக பேசினார்.
பெரியாருடன் - அண்ணா வடநாட்டுப் பயணம்
அதே போல இன்னொரு செய்தி மத்தூர் அரசினர் உயர்நிலைப் பள்ளிக் கட்டடத் திறப்பு விழா 19.12.1967 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் அண்ணா பேசுகிறார்:
நான் பெரியார் அவர்களுடன் வடநாடு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். அங் குள்ளவர்கள் நம் மக்களைவிட மத நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். பெரியார் அவர்களின் தோற்றத்தைக் கண்டு அவர் தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சிஷ்யன் என்றும் கருதி விட்டார்கள். அப்படி நினைத்துத்தான், ஆரிய தருமத்தை வளர்ப்பதற்காகவென்றே செயல்பட்ட வரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர் பெரியார் அவர்களைப் பார்த்து, எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர் களுக்குத் தாங்கள் வந்து அறிவுரை கூறவேண்டுமென்று கேட்டார். அவரும் ஒப்புக் கொண்டார். தான் எதைச் சொல் லுகிறாரோ அதை மற்றவர்கள் உடனடி யாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும். மார்க்கத்தில் சென்று அவர்கள் மனம் புண்படாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர் பண்பு.
சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றதுமே எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்குப் போய் நமது கருத்தைச் சொன்னால்  அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று பயந்தேன்; என்றாலும் துணிந்து பெரியார்அவர்கள் பின் சென்றேன். கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என்  முகத்திலும், அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கட மாக இருந்தது. என் நிலையினைக் கண்ட பெரியார் நான் எங்கே தவறாக நடந்து கொண்டுவிடுவேனோ என்று  கருதினார். நானும் சற்று அமைதியடைந்து பொறுமை யாக இருந்தேன்.
பெரியார் தொடையைக் கிள்ளினார்
பின் பெரியார் என் தொடையைக் கிள்ளி ஜாடை காட்டினார். அதன் பின் நானும் அவர்கள் பேச ஆரம்பித்து ஒவ் வொரு சங்கதியாக விளக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இது போன்ற கருத்தை அவர்கள் அதுவரை கேட்டதே இல்லை. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக் கேட்கின்றனர்.
இராமாயணத்தைப் பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக்கேட்க அவர் களுக்குச் சற்றுத் தெளிவு ஏற்பட்டது. கூட்டம் முடிந்ததும் அம்மாணவர்கள் ராவணாக்கி ஜே! என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர் என்று அண்ணா அவர்கள் பேசினார்.
இன்னமும் மக்கள் திருந்தாமல் இருக்கிறார்களே!
அதே போல் திருப்பத்தூர் நகராட்சி மன்றத்தின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 13-12-1967 அன்று முதலமைச்சர் அண்ணா அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதியைக் கூறுகிறேன்.
பெரியார் அவர்கள் சொன்னார்கள்: நான் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பாதீர்கள்; உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து, உங்களுக்குச் சரியென்று பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்
ஏன் அப்படிச் சொன்னார்கள் என்றால், சிந்திக்க ஆரம்பித்தால் அதில் எதுவும் சிறு தவறு கூட இருக்காது. அவர்  சொன்னவை யெல்லாமே உண்மை என்பது நன்றாகவே தெரியும்.
அதைக் கண்டுபிடிப்பதில் சிந்திப்பவனுக்குத் தைரியம் தானாகவே வந்துவிடும்.
அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி வருகிற பெரியார் அவர்கள்,பல ஆண்டு காலமாக எடுத்துச் சொல்லியும், இன்னமும் மக்கள் திருந்தா மலிருக்கிறார்களே என்ற கவலையால் கடுமையாக, நம் இழிவு நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்.
பெரியார் அவர்கள் காலத்தில் அவரது கண்களுக்குத் தெரியுமாறு நாட்டில் இன்று பல சீர்திருத்தங்கள் நடைபெற்றி ருக்கின்றன.
காப்பி குடிப்பதா? ரயிலைப் பிடிப்பதா?
பெரியார் அவர்கள் தமது தொண்டின் மூலம் பொதுத் தொண்டினை ஒரு கலை யாகவே மாற்றியுள்ளார். ரயில் புறப்படுகிற நேரத்தில் ரயிலில் போக வேண்டியவன் காப்பியை அருந்திக் கொண்டு மிக சாவகாசமாக இருந்தால் அவனைப் பார்த்து பெரியவர்கள் நாலு வார்த்தை திட்டி, காப்பி பிறகு குடிக்கலாம்; வண்டி போய்விடும்; வண்டியிலேறு என்பது போல், உலகம் இவ்வளவு முன்னேறி யிருக்கிறது; நீ இன்னும் இப்படி இருக் கிறாயே? என்ற கவலையால் கடின மாகவும், வேகமாகவும் வலியுறுத்தி நமக்குப் பகுத்தறிவைப் புகட்டுகிறார்.
எனக்கு நன்றாகத் தெரியும் அவருக் குள்ள கவலை; இத்தனை ஆண்டுகள் பாடுபட்டும் இந்தச் சமுதாயம் இன்னும் இப்படியே இருக்கிறதே; இதை எப்படி  முன்னுக்குக் கொண்டு வருவது? உலக மக்களோடு சமமாக்குவது? என்கிற கவலை அவருக்கு நிறைய இருக்கிறது. பெரியார் அவர்கள் நினைப்பது போல் இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கிறது  என்று அண்ணா அவர்கள் பேசியிருக் கிறார். இப்படி பெரியாருக்கும் அண்ணா வுக்கும் இருந்த கொள்கை உறவுகளைப் பற்றி எத்தனையோ எடுத்துச் சொல்லலாம்.
ஸ்வீடன் நாட்டு மாணவி
தந்தை பெரியாரின் சமூக நீதித் தத்துவம் இடஒதுக்கீடு தத்துவம் இன்று உலகளாவிய அளவில் பரவுகின்றது.
ஒரு ஸ்வீடன் நாட்டு மாணவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தந்தை பெரியாரின் இடஒதுக்கீடு தத்துவம் உங்கள் நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறது. அதுபற்றி நான் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கடிதம் எழுதியிருந்தார்.
நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்து வந்து பார்த்தேன். ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த சோஞ்சா ஆஷ்தி காதேதி என்ற பெண் என்னிடம் தந்தை பெரியாரின் சமூக நீதித் தத்துவமான இடஒதுக்கீட்டைப் பற்றி பேட்டி காண வேண்டும் என்று அந்தக் கடிதத்தில்  கேட்டிருந்தார்.
ஸ்வீடன் நாட்டுப் பெண்  தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கை பற்றிய ஆய்வை மேற்கொண் டுள்ளார். இதுபற்றி எனக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
அன்புள்ள அய்யா, எனது பெயர் சோஞ்சா ஆஷ்தி காதேரி என்பது. ஸ்வீடன் நாட்டின் உபாசாலா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவி நான்.  தமிழ் நாட்டின் உயர் கல்வி நிறுவனங் களில் மாணவர் சேர்க்கையில் கடை பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு நடைமுறை மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் - சர்வதேச சட்டங்களுடன் அது எவ்வாறு இணக்கமாக உள்ளது என்பது பற்றி,  எனது முதுகலைப் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதுவ தற்காக நான் தமிழ்நாட்டிற்கு வந் துள்ளேன்.
நீதிமன்ற தீர்ப்பால்...
மாணவர் சேர்க்கையில் இத்தகைய இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த அண்மைக்காலமாக சில ஸ்வீடன் நாட்டு பல்கலைக் கழகங்கள் முயற்சி செய்தன. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புகள் அவர்களது முயற்சிகளைத் தோற்கடித்துவிட்டதை யடுத்து அவை தங்களின் முயற்சிகளைக் கைவிட நேர்ந்தது. இந்தியாவில், குறிப் பாக தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டுமுறை பற்றி அறிய நான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன்.  எனது ஆராய்ச் சிக் கட்டுரைக்காக  இரண்டு மாத காலம் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக தமிழ் நாட்டிற்கு வருவதற்கு ஸ்வீடன் நாட்டு கூட்டுறவு முன்னேற்ற ஏஜென்சி எனக்கு படிப்புதவித் தொகை ஒன்றை அளித்துள்ளது.
தங்களை சந்திக்க நாம் பெரிதும் விரும்புகிறேன்.  தமிழ்நாட்டில் கடைபிடிக் கப்படும் இட ஒதுக்கீட்டு நடை முறையின் வரலாற்றையும், அதன் பின்னணியில் உள்ள பெரியார் அவர்களின் வரலாற்றைப் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் படித்தறிந்துள்ளேன்.
அனைத்துக்கும்  மேலாக எனக்கு மிகவும் ஆர்வம் அளிக்கும் செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு நடைமுறை இந்நாட்டு அரசமைப்புச் சட்டத் தினால் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
தங்களைச் சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கித் தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். அவருக்கு இரண்டு மணி நேரம் வேறு ஒரு நாள் பேட்டி காண நேரம் ஒதுக்கித் தந்துள்ளேன்.
பெரியார் இன்று உலகமயமாகிக் கொண்டிருக்கிறார். பெரியாரின் சமூக நீதித் தத்துவம், இடஒதுக்கீடு தத்துவம் இன்று உலகமயமாகிக் கொண்டிருக் கின்றது.
அண்ணா கொடியில் மட்டும் பறக் கிறார். கொள்கையில் இல்லை. எங்கு உண்மையான திராவிட இயக்கம் இருக் கிறதோ அங்கு பெரியார் - அண்ணா இருப்பார்கள்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.


வீ. அருளரசன் நன்கொடை
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெயரில் சமூக சட்ட ஆய்வு (Dr.K. Veeramani Centre for Socia - Legal Research)  மய்யம் ஒன்றினைத் தொடங்க அதற்கான முதல் கட்ட தொகையாக ரூ.1 லட்சம் (2.12.2011 தேதியிட்ட காசோலை) மற்றும், பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் மானமிகு நீடாமங்கலம் இரெ. விசுவநாதன் அவர்களின் நினைவாக வருடா வருடம் டிசம்பர் 2இல் நீடாமங்கலத்தில் சிறப்பாக பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெற்றிட வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் (2.12.2011 தேதியிட்ட காசோலை).
குடும்ப விளக்கு நிதியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையினைக் கொண்டு தொடர்ந்து பிரச்சாரங்கள் நடைபெற்றிட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் அளிக்கப்படுகிறது.
சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில்  நேற்று மாலை நடைபெற்ற (22.9.2011) பெரியார் -  அண்ணா விழாவில் இதற்கான இரண்டு  காசோலைகளை (காசோலை ஓவ்வொன்றும் ரூபாய் ஒரு லட்சம்) வழக்கறிஞர் வீ. அருளரசன்  அவரது  61ஆம் ஆண்டு பிறந்தநாளான நேற்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் அளித்தார். வழக்குரைஞர் அருளரசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்தாகவும், கொடை உள்ளத்துக்காகவும் பாராட்டி தமிழர் தலைவர் ஆடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...