Tuesday, September 6, 2011

ஆயிரம் பேர் கொண்ட இளைஞர் பாசறை உருவாக்கம் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை மீட்டெடுக்கும் பிரச்சாரக் கூட்டங்கள்

 
டிசம்பர் 21இல் கோவையில் மாநில இளைஞரணி மாநாடு
ஈரோட்டில் எழுச்சிமிக்க முத்தாய்ப்பான தீர்மானங்கள்


ஈரோடு, செப்.6- கோவையில் வரும் டிசம்பரில் மாநில இளைஞரணி மாநாடு நடத்துவது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் மாநில இளைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டன.

05.09.2011 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

அறிவுலகப் பேராசான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை தமிழர்களின் தேசிய திருவிழாவாக கொண்டாடும் வகையில் கழக இளைஞரணி சார்பில் இல்லங்கள்தோறும் புத்தாடை உடுத்தி இனிப்பு வழங்கி கிளைக் கழகங்கள் தோறும் கழக லட்சியக் கொடியேற்றி மிகச் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப் படுகிறது.

தீர்மானம் 2

மனிதநேய மாண்பாளர் தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு மனிதநேயப் பணியான இலவச கண் சிகிச்சை முகாம், குருதிக் கொடை முகாம், உடற்கொடை முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வாய்ப்புகளுக்கேற்ப கழக இளைஞரணி சார்பில் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் -3

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டை 2011 டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி கோவையில் மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. மாநாட்டையொட்டி இளைஞரணி சீருடையுடன் கூடிய அணி வகுப்பு மற்றும் பெரியார் சமூக காப்பணியின் ராணுவ அணிவகுப்புடன் மிகச்சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் -4

இளைஞர் பாசறை உருவாக்கம்

1000 இளைஞர்களைக் கொண்ட பாசறை ஒன்றை அமைப்பதென நாகை மாநாட்டில் (13.08.2011) திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்ததை மகிழ்ச்சி யுடன் வரவேற்று அதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதென்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 5

தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, மறைமலை அடிகள் போன்ற தலைவர் கள் தமிழ் அறிஞர்களால் பல்லாண்டுகளாக வலி யுறுத்தப்பட்டு முந்தைய (தி.மு.க.) கலைஞர் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றிய தமிழக அரசின் முடிவை மக்கள் சக்தியைத் திரட்டி முறியடிக்கும் வகையில் செப்டம்பர் 17 தொடங்கி 26 வரை கழக இளைஞரணி சார்பில் -

பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டென பணி முடிப்போம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் - 6

அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்று நூலைப் பரப்புதல்

அறிவுலக பேராசான் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் அவர்கள் கொள்கைக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களைப்பற்றி முனைவர் மங்களம் முருகேசன் அவர்களால் தொகுக்கப்பட்ட தொண்டில் உயர்ந்தவர் அன்னை மணியம்மையார் என்ற சிறப்பு மிகுந்த புத்தகத்தை செப்டம்பர் 17 முதல் 25 வரை தமிழகம் முழுவதும் கழக இளைஞரணி சார்பில் பரப்புவது என தீர்மானிக்கப்படுகிறது. ரூ.290 விலையில் உள்ள புத்தகத்தை தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு தள்ளுபடி விலையாக ரூ.225-க்கு விற்பனை செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 7

ஜாதிமறுப்பு மற்றும் விதவைகள் திருமணம்

நம் இயக்கத்தில் உள்ள இளைஞர்கள், விதவையர் களான ஆண்கள் பெரிதும் ஜாதியை ஒழிக்கும் வண்ணமும், அதைவிடக் கொடுமைத்தன்மையானதும், இயற்கைக்கு விரோதமானதும், தவறான பொய் ஒழுக்கத்தை சமூகத்தில் வளர்ப்பதுமாக இருக்கின்ற விதவைத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க, விருப்பப்படும் இளம் - நடுத்தர வயதினர்கள் விதவையர்களான மகளிரைத் திருமணம் செய்து அவர்களுக்குப் புதுவாழ்வு - மறுவாழ்வு தருவதற்குப் பெரும்பாலோர் முன்வர வேண்டும்.

ஜாதி மறுப்பு, காதல் திருமணங்கள் பெருகிய அளவில் விதவைகள், மணவிலக்கு பெற்றோரும் மறுமணம் செய்தல் இன்னமும் பெருகவில்லை என்பதால் அதனை ஊக்குவிக்கும் வகையில் நமது தோழர்கள், தோழியர்கள் முன்வர வேண்டும் என்று இக்கமிட்டி வற்புறுத்துகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...