வைதீகப் பார்ப்பானைவிட ஆபத்தானவன் லவுகீகப் பார்ப்பான் என்பார் பெரியார். நியாயவான் போல் தோற்றம் கொண்டு மனுநீதியை முன்னிறுத்துவதில் சமர்த்தர்கள் அவர்கள். ராஜநீதி என்னும் படம் எடுத்த பீகார் பார்ப்பனரான இந்திப் பட இயக்குநர் பிரகாஷ் ஜா-வும் அவர்களுள் ஒருவர். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தேர்தலில் நின்று தோல்வி கண்டவரான சமூக அக்கறையுடன் படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் ஆரக்சன் என்னும் படத்தை எடுத்து வெற்றி காண முயற்சித்துள்ளார்.
ஆரக்சன் என்ற இந்திச் சொல்லுக்கு ஒதுக்கீடு என்று பொருள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அமைந்த படம் இது என்று படம் வெளிவருவதற்கு முன்பே கண்டனங்கள் கிளம்பின. ஆங்காங்கே படத்தைத் தடை செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இடஒதுக்கீடு குறித்த கருத்துகளைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் இப்படத்தில் நடித்துள்ளேன் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எம்.புன்னியா இது குறித்து அய்யம் எழுப்பியதோடு, அப்படத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் பிரகாஷ் ஜா, நான் தணிக்கைத் துறையிடம் மட்டும்தான் சான்றிதழ் பெற வேண்டுமேயன்றி, பிறருக்குத் திரையிட வேண்டிய அவசியமில்லை என்றார். தணிக்கைத் துறை ஒரு வெட்டும் இல்லாமல் யு/ஏ சான்று தந்திருப்பதாகத் தெரிவித்தார் அமிதாப். போராட்டங்கள் தொடரவே, வடநாட்டு ஊடகங்கள் எல்லாம் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊளையிட்டன. படைப்புச் சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். இட ஒதுக்கீட்டை எதிர்த்துக் கூட படம் எடுக்கப்பட்டிருக்கட்டும். ஆனால், இதே போல் சமூக நீதியை ஆதரித்து நாங்கள் படம் எடுத்தால், அப்போது தணிக்கைத் துறையின் கத்திரிகள் என்ன செய்யும் என்பதை நாங்களும் பார்க்கிறோம் என்று கருத்துத் தெரிவித்தார்கள் சமூகநீதியாளர்கள்.
ஏற்கெனவே இப்படி எண்ணற்ற வசனங்களும், காட்சிகளும் எப்படித் துண்டாடப்பட்டு குதறப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. பின்னர், தணிக்கைத் துறையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சிறப்புத் திரையிடலை ஏற்பாடு செய்து திரையிட்டது. படத்தைப் பார்த்த டாக்டர் புன்னியா, இப்படத்தின் மய்யக் கரு கல்வி வியாபாரமாவதைப் பற்றியது தானே தவிர, இடஒதுக்கீடு குறித்ததல்ல. ஆனால் விளம்பரத்திற்காக, அவசியமில்லாமல் இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்து இப்படத்தில் கருத்துகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கண்டிக்கத்தகும் கருத்துகளும், காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார். படத்தில் 27 என்று இடஒதுக்கீட்டைக் குறிக்கும் வண்ணம் ஆங்காங்கே வெளிப்படுத்தி கிண்டல் செய்வதும், இடஒதுக்கீடு எங்கள் உரிமை என்று சுவரெழுத்தைப் பார்த்து, உயர்ஜாதி மாணவர்கள் இடஒதுக்கீடு எங்கள் பிச்சை என்று கொச்சைப்படுத்துவதுமாக எண்ணற்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அமிதாப் பச்சனுக்கு ஒடுக்கப்பட்டோரின் பாதுகாவலர், அரவணைப்பவர் போன்ற கல்விநிறுவன முதல்வர் வேடம். இது குறித்து கருத்து தெரிவித்த சிந்தனையாளர் காஞ்சா அய்லய்யா, நிஜத்தில் காந்தியார் போட்ட தாழ்த்தப்பட்டோரின் பிதா போன்ற வேடம் தான் இதில் அமிதாப் பச்சனின் பிரபாகர் ஆனந்த் கதாபாத்திரம். அது பார்ப்பதற்கு ஏதோ ஆதரவானது போல் தோன்றும். ஆனால் காந்தியின் அந்த வேடம் குறித்து தனது புகழ்பெற்ற காந்தியும், காங்கிரசும் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்தது என்ன? என்ற நூலில் கேள்வி எழுப்பி கண்டனமும் தெரிவித்திருக்கிறார் அம்பேத்கர் மும்பைத் திரையுலகமே உயர்ஜாதியின் பிடியில் தான் இருக்கிறது. அந்நிலை மாறாமல் இந்நிலை மாறாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆம். உண்மைதான். பார்ப்பனர்களிடமும், உயர்ஜாதியினரிடமும் சிக்கியுள்ள திரைத் துறையிலிருந்து ஆதிக்க உணர்வுடன்தானே படங்கள் வெளிவரும். உரிய நேரத்தில் அதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், வீரியத்தோடு திரைப்படத்துறையில் பங்கெடுப்பதுதான் ஒடுக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய முதல் பணியாகும்.
- இளைய மகன்
No comments:
Post a Comment