நேற்று ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன!
கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்!
கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.
புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!
இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!
1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!
ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!
தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.
மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!
ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!
எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே!
அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?
அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!
அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!!
கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!
சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!
கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?
No comments:
Post a Comment