ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?
விருகம்பாக்கம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகளின் வன்முறைக்கு கழகத் தோழர்களைக் கைது செய்வதா?
- காவல்துறையினரின் போக்கு கண்டிக்கத்தக்கது
- கழகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொதுச் செயலாளர் அறிக்கை
விருகம்பாக்கத்தில் நேற்று (24.9.2011) மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காலிகள் மேற்கொண்ட வன்முறை குறித்தும், காவல் துறையினர் நடந்துகொண்ட போக்கு குறித்தும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங் குன்றன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் அவர்களின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை விருகம்பாக்கத்தில் , உரிய காவல் துறை அனுமதி பெற்று நேற்று மாலை (24.9.2011) சிறப்பாக நடைபெற்றது. திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர் களும், பொது மக்கள் உள்பட ஏராளமானோர் திரண் டிருந்தனர்.
கூட்டத்திற்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.ரா. இரத்தினசாமி, செயலாளர் வே. ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஆகியோரின் பேச்சைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு. சுப.வீரபாண்டியன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தை நோக்கி கற்கள் வந்து விழுந்தன. கழகத் தோழர்களும், பொதுமக்களும் பதற்றம் அடைந்தனர். கொந்தளிப்பான சூழ்நிலையில் தோழர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் - குற்றவாளிகளைக் காவல்துறையினர் பார்த்துக் கொள்வார்கள் - கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதுதான் நமக்கு முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறினார். ஒலிபெருக்கியிலும் அவ்வாறே கூறப்பட்டது.
தோழர்களும் கட்டுப்பாட்டோடு கூட்டம் நடத்துவதில் கவனமாகவே இருந்தனர்.
தொடர்ந்து பேசினார் கழகத் தலைவர்
இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்தில் மீண்டும் கூட்டத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டன. ஒரு கும்பல் கையில் கற்களோடும், கம்புகளோடும் உடைந்த டியூப்லைட்டுகளிலும் மேடையை நோக்கி வந்து கொண் டிருந்தது. கம்புகளையும் உடைந்த டியூப்லைட்டுகளையும் கற்களையும் மேடையை நோக்கி வீசினர். ஆனால் கூட்டத்தை நிறுத்தாமல் கழகத் தலைவர் விளக்கம் கொடுத்துப் பேசிக் கொண்டேயிருந்தார்.
எங்கள் கருத்தைக் கூட்டம் போட்டு பேசிக் கொண்டி ருக்கிறோம். நாங்கள் பேசியதில் தவறு இருந்தால், நாளை இதே இடத்தில் நீங்கள் கூட்டம் போட்டு பதில் சொல் லலாம். நாங்கள் நாளை மறுநாள் அதற்கு பதில் சொல் லுவோம். ஜனநாயக உரிமை - பண்பாடு என்பது இதுதான். அதனை விட்டுவிட்டு தற்காலத்திலும் இப்படியெல் லாம் கற்களை வீசுவது - கற்கால மனிதர்களின் மனப்பான்மை; இதனை மாற்றி, நாட்டை பொற்காலத் துக்கு அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகத்தின் கொள்கை என்று பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன.
தொடர்ந்து கழகத் தலைவர் பேசிக்கொண்டே இருந்தார். முழுமையான அளவில் பேசியே முடித்தார். கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்ற காலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
காவல்துறையினரின் போக்கு
காலிகள் 54 டியூப்லைட்டுகளையும், நாற்காலிகளை யும் உடைத்துக் கொண்டேயிருந்தனர். இவ்வளவும் காவல்துறையினர் முன்தான் நடந்து கொண்டிருந்தது. காவல்துறையோ செயலற்று வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தது.
இவ்வளவு நடந்து கொண்டிருந்தும், காவல் துறையினர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது -
ஒரு மாநிலத் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டம் அது!
அத்துமீறி கூட்டம் நடக்கும் பகுதியில் நுழைய முனைந்த இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வினரோடு சமாதானப் பேச்சுக்களை நடத்திக் கொண்டி ருந்தார்களே தவிர, காவல்துறையினரின் கடமைக்கான - செயல்பாடுகளே இல்லை. தொடக்கத்திலேயே லத்தி சார்ஜோ அல்லது அத்து மீறி நுழைந்தவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையையோ எடுத்திருந்தால் பிரச்சினை முற்றிப் போயிருக்காது.
கழகத் தோழர்களைத் தடுத்தனர்
கூட்டப் பகுதியிலிருந்து திராவிடர் கழகத் தோழர்கள் கற்களை வீசிய பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்வதில்தான் காவல்துறையினரின் கருத்தும் கவனமும் இருந்தன.
முக்கியமாக ஒரு மாநிலத் தலைவர் பேசும் கூட்டத்தில் இப்படி கலாட்டா செய்கிறார்களே, கல் வீசுகிறார்களே அவர்களைப் பிடிக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்பதில் சற்றும் காவல்துறை கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும்.
பொதுச் சொத்துக்களை நாசப்படுத்தியது குறித்த சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படாதது - ஏன்?
காவல் துறையினரின் இத்தகைய போக்கு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு புகார் செய்யப்படும்
இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் புகார் செய்யப்படும்.
திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் நாடெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக் கூடியவைதான். காரணம் இது ஒரு பிரச்சார இயக்கமாகும். இதுகுறித்து காவல்துறை இயக்குநர் மாநிலம் தழுவிய அளவில் உரிய வழிகாட்டுதலை சுற்றறிக்கையாகக் கொடுக்க வேண்டும்.
அடுத்து நமது நடவடிக்கை
நிலைமையைப் பொறுத்து பொதுக் கூட்ட ஏற்பாடு களைச் செய்யும் கழகத் தோழர்கள், எத்தகைய அணுகுமுறையினை மேற்கொள்வது என்பது குறித்துக் கழகத் தலைமை முடிவு செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உளவுத்துறை என்ன செய்தது?
விருகம்பாக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்திட காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்தும், விளம்பரம் செய்தும் அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகக் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று காவல்துறையிடம் நேரில் சென்று பேசியுள்ளனர். தென் சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் சி. செங்குட்டுவன் அவர்களிடம் காவல் துறையினர் இது பற்றிக் கூறியபோது, கூட்டம் போட்டுப் பேசுவது என்பது உரிமை - கூட்டத்தில் எங்கள் தலைவர், பெரியார் கருத்துக்களைக் கூறுவார்; ஆர்.எஸ்.எஸ். காரர்கள் புகார் கூறுவதால் எங்கள் கருத்துரிமையை யாரும் பறிக்க முடியாது என்று கூறினார்.
வழக்கமாக விருகம்பாக்கத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்திட காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில், காவல்துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்திருக்கவேண்டாமா? உளவுத் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.
கழகத் தோழர்களைக் கைது செய்வதா?
கடைசியில் திராவிடர் கழகத் தோழர்கள் அய்வரையும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரையும் காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கூட்டத்தில் கலாட்டா செய்தவர்கள் யார்? கூட்டத்தை நடத்தக்கூடாது என்று அத்துமீறி நுழைந்தவர்கள் யார்? தலைவரை நோக்கி கற்களை வீசியவர்களின் நோக்கம் என்ன? தலைவருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் அதன் விளைவு என்னவாக இருந்திருக்கும்? என்பதைப் பற்றி சிந்தனை செலுத்தாமல், அடித்தவர்களையும், அடிபட்டவர் களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது காவல் துறையினரின் கடமை உணர்ச்சிக்கு உகந்தது தானா?
காலிகளைச் சந்திக்கும் திராணி கழகத்திற்கு உண்டு
ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது என்பதால் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் காலித்தனத்தில் இறங்குவார்களேயானால், அவற்றைச் சந்திக்கும் திராணி திராவிடர் கழகத்திற்கு உண்டு - உறுதியாக உண்டு.
அதே நேரத்தில் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய கழகத்தினால், முறைப்படி காவல் துறைத் தலைமை இயக்குநருக்கு உரிய முறையில் புகார் கடிதம் கொடுக்கப்படும்.
கழகத் தலைவர் கலந்து கொண்ட கூட்டத்தில் விஷமிகள் கலாட்டா - கல்வீச்சு என்ற செய்தியை தொலைக் காட்சியில் பார்த்த கழகத் தோழர்களும், தமிழர்களும் தொடர்ந்து தொலைபேசி மூலம் விவரங்களைக் கேட்டுக் கொண்டே உள்ளனர். பதற்றமான ஒரு சூழல் பல இடங்களிலும்.
கழகத் தலைவரின் கட்டளையை ஏற்றுத் தோழர்கள் அமைதி காத்தனர். பொறுப்புணர்வுடன் கழகத் தலைவர் அவ்வாறு அவர் அறிவுறுத்தாதிருந்தால் நிலைமை விபரீதமாகப் போயிருக்குமே!
தோழர்கள் பதற்றமும் அடைய வேண்டாம். உரிய நடவடிக்கைகளை தலைமைக் கழகம் எடுத்துக் கொண்டி ருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலவரம் செய்தவர்களையும் பாதிப்புக்கு ஆளான கழகத் தோழர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுகும் காவல்துறையின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு கவலையளிப்பதாகவே உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
70 ஆண்டு காலமாக மேடைகளில் பேசிக் கொண்டி ருக்கும் தலைவரின் கூட்டத்திற்கே அச்சுறுத்தல் என்றால் மற்ற மற்ற கூட்டங்களின் நிலை என்ன? காவல் துறையினரின் அலட்சியப் போக்கில் மாற்றம் தேவை! தேவை!!
- கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகம்
விருகம்பாக்கம் கூட்டம்
கழகத் தோழர்கள் கைது - விடுதலை
கழகத் தோழர்கள் கைது - விடுதலை
சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் கலவரம் செய்த கீழ்க்கண்ட சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் இளங்கோ (இந்து முன்னணி மாவட்டத் தலைவர்), செந் தில், விட்டல், மனோகர், நாகேஸ்வரராவ், செந்தில் குமார், தயாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குற்ற எண் 17,73/2011, சட்டப் பிரிவுகள் 147, 148, 294(b), 324, 336. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
கழகத் தோழர்கள் கைது
கழகத் தோழர்கள் தமிழ் சாக்ரட்டீஸ், நடராசன், அரசு, பரசுராமன், ஏழுமலை ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை 23ஆவது மெட்ரோ பாலிட்டன் குற்றவியல் நீதிபதி அகிலா ஸ்டாலின் முன்பு ஆஜர் செய்யப்பட்டு, சொந்தப் பொறுப்பில் (ஜாமீனில்) விடுவிக்கப்பட்டனர். சட்டப் பிரிவு எண் 1772/2011 குற்றப் பிரிவு 147, 148, 294(b), 324, 336.
தினகரன் வெளியிட்ட செய்தி
வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு
வீரமணி கூட்டத்தில் கல்வீச்சு
சென்னை, செப் 25- சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நேற்றிரவு நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் தி.க. தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் அப்பகுதியை சேர்ந்த இந்து அமைப்பினர் சுமார் 40 பேர் கூட்டத்தை நடத்த விடாமல் கற்களை மேடை மீது வீசி ரகளை செய்தனர்.
இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் அவர்களை எச்சரித்து வெளியேற்றினர். பின்னர் வீரமணி பேச்சை தொடங்கியபோது சிலர் கோஷம் போட்டனர். திடீரென அவரது பேச்சைக் கேட்ட இந்து அமைப்பினர் அவர் மீது கற்களை வீசினர் ஆனால் அது அவர்மீது விழவில்லை. உடனே தி.க தொண்டர்கள் திரண்டு வந்து கற்களை வீசிய இந்து அமைப்பினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது.
(நன்றி: தினகரன் 25.9.2011)
No comments:
Post a Comment