Saturday, September 3, 2011

நேபாளம் எங்கே போகிறது?

உலகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டு களின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ராஜ் ஜியத்தை எந்த ராமனும் வந்து காப்பாற்றவில்லை.

நாள்தோறும் சென்று வணங்கும் அரசனை அந்தப் பசுபதிநாதரும் காப்பாற்றவில்லை.

இந்துக்கள் நம்பும் சோதிடம் மன்னர் வீட்டில் பல கொலைகள் விழுவதற்குக் காரணமாகப் போய் விட்டது. இந்துவின் மூடநம்பிக்கை, இந்து ஆட்சியையும் நேபாள மன்னர் குடும்பத்தையும் சீரழித்து விட்டது.

இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு மாவோயிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச்சார்பற்ற பாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத்தான் அவர்களும் இருக் கிறார்கள்.

இந்தியா - இந்தியாவைச் சேர்ந்த நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்களை இந்த இந்து வழிச் சிந்தனைகள் சேதப்படுத்தாமல் இருக்காது போலும்!

இப்பொழுது சட்டம் அங்கே வரவிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் என்கிற கட்டத்தில் இருக்கிறது. அது என்னசட்டம் தெரியுமா? மதமாற்றத் தடுப்புச் சட்டமாம்!

இந்தியாவில்கூட ஒரே மட்டமாக நாடாளுமன்றத்தில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2001-2006) இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது - பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நேபாளத்தில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து கிறித்தவர்களும், மதச் சார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இந்தச் சட்டம் என்ன சொல்கிறது? சிறுபான்மை மதத்தினர் தங்கள் மதம் பற்றிப் பிரச்சாரம் செய்வது தடுக்கப்படுகிறது; அச்சிடப்பட்ட துண்டு அறிக்கைளை வழங்குவதும் தடுக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படு பவர்களுக்கு அய்ந்தாண்டு சிறை, 700 டாலர் அபராதமாம்.

சிறுபான்மையினர் இன்னொரு வேண்டுகோளை அரசு முன் வைத்துள்ளனர். இந்த மசோதாவுக்குப் பதிலாக சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்னொரு சட்டமும் நேபாளத்தில் நிறைவேற்றப் படுகிறது. அதுதான் பசுக்களைக் கொல்லக்கூடாது என்கிற இந்துத்துவா கண்ணோட்டமான சட்டமாகும்.

பசுக்களை உணவுக்காகத் தான் பயன்படுத்து கிறார்களே தவிர, வேறு காரணத்துக்காக அல்ல. உலகம் முழுவதும் மாட்டுக் கறி உணவு சாப்பிடுவோர் தான் மிக அதிகம். உணவுப் பழக்கம் என்பது தனி மனிதனின் உணர் வையும், உரிமையையும் சார்ந்தது. இதில் தலையிடுவதற்கு அரசு உட்பட யாருக்கும் உரிமை கிடையாது.

இந்தியாவில் இந்த வகையில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றவில்லை பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டது.

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் ஆட்சி என்று பெயர ளவுக்கு இருந்து என்ன பயன் என்பது விளங்கவில்லை.

மாவோ மதத்தின் முன் மண்டியிட்டவரா? பொது வுடைமைத் தத்துவம்தான் மதத்தின் முன் சரணாகதி அடைய வேண்டும் என்று கூறுகிறதா?

சாதாரணமாக கூறப்படும் கம்யூனிஸ்டுகளைவிட மாவோயிஸ்டுகள் என்றால், அதி தீவிரவாதிகள் என்ற கணிப்பும், கணக்கும் நோபாளத்தைப் பொறுத்தவரையில் பொய்த்து விட்டதை அறிய முடிகிறது.

நேபாளத்தில் மன்னர் ஆட்சி கடைப்பிடித்த அதே இந்துத்துவா கொள்கையைத்தான் மாவோயிஸ்டுகளும் பின்பற்றுவார்கள் என்றால், பின் எதற்காக ஆட்சி மாற்றம்?

மாவோயிசம் போர்வையில் மனுதர்ம ஆட்சி என்று சொல்லிக் கொள்வது பெரிய முரண்பாடு அல்லவா!

பொதுவுடைமையைவிட பொதுவுரிமைதான் முக்கியம் என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவுத் துல்லிய மாகும் என்பதை இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் கூட, நேபாளத்தின் தற்போதைய நிலையைப் பார்த்தாவது புரிந்துகொள்ள வேண்டும்.

பெயர் மாற்றத்துக்காகத் தான் ஆட்சிமாற்றம் என்பது எதற்கு? கொள்கை மாற்றத்திற்காக மாவோயிசம் என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

கம்யூனிஸ்டுகள் ஆண்டால்கூட அங்கு பெரியாரியல் தேவைப்படுகிறது என்பதுதான் இதன் மூலம் பெறப்பட வேண்டிய ஒன்றாகும்.

புரட்சி என்பது அடிப்படையையே ஆணி வேரோடு பிடுங்கி எறிவதே! அதனை கம்யூனிஸ்டுகள் கொச்சைப் படுத்த வேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...