Saturday, September 24, 2011

மோடியைத் தூக்கி நிறுத்துவதன் பின்னணி!

மோடியைத் தூக்கி நிறுத்துவதன் பின்னணி!

 இந்து மதவெறியர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் என்று தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ஊடகங்கள் - குறிப்பாக துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி உள்ளிட்டோர், மோடியின் மோசமான மனிதகுல விரோத நடவடிக்கை களைப் புறந்தள்ளி, அவற்றை மூடி மறைத்து, மோடி சிறந்த நிருவாகி, அவர் ஆட்சி செய்யும் குஜராத்  மாநிலம் பொருளாதார நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பது போன்ற பிரச்சாரத்தை சாவி கொடுத்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மோடி மீதான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், இனி ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒருவரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் போதும் என்று சொல்லிவிட்டதாம். அதை வைத்துக் கொண்டு தலைகால் புரியாமல் துள்ளிக் குதிக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக வழக்கைத் தொடுத்தவர், இந்தத் தீர்ப்பில் திருப்தியடையாத திலிருந்தே உச்சநீதிமன்றம் மோடிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறி விட்டதாக சோவுக்கே உரித்தான முறையில் எழுதுகோல் ஓட்டியுள்ளார்.

இதில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். வதேரா என்னும் இடத்தில் முஸ்லிம் ஒருவர் நடத்திய பெஸ்ட் பேக்கரியில் 14 முஸ்லீம்களை விறகுகள் போல் கை கால்களைக் கட்டி, பேக்கரி அடுப்பில் வைத்துக் கொளுத் தப்பட்ட வழக்கில், குஜராத் மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் குற்றவாளிகள் 21 பேர்களையும் விடுதலை செய்த வழக்குபற்றி உச்சநீதிமன்றம் என்ன கருத்து தெரிவித்தது?

சட்டத்தின் பார்வையில் அது விடுதலையே அல்ல என்று கூறவில்லையா?

தீர்ப்புரை என்ற பெயரால் விரைவு நீதிமன்றத்தின் முடிவு மதிக்கத்தக்கவையல்ல - நம்பிக்கைக்கு உரியதும் அல்ல.

மகாத்மா காந்தி பிறந்த பகுதியில் கொடூரமான கொலைகள் நடந்துள்ளன. இதைப் பார்க்கும்போது மகாத்மா காந்தி மதித்த அனைத்துக் கோட்பாடு களையும்  உதாசீனப்படுத்தும்படியான அளவுக்கு சிலர் போய் விட்டார்களா? என்ற கேள்வி எழுகிறது. எந்தவிதப் பாதுகாப்புமற்ற அப்பாவிக் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமான மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இது சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அவமானமாகும்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின்அணுகுமுறையே சரியல்ல. அதன் தீர்ப்பில் குறைபாடுகளும், ஓரவஞ்சகமும், ஒரு தலைப்பட்ச முடிவுகளும் உள்ளன. நீதி மனப்பான்மை இல்லாமல் சொல்லப்பட்ட தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் சொன்னதையெல்லாம் வசதியாக மறக்க - மறைக்க முயலுகிறார் திருவாளர் சோ.

பெஸ்ட் பேக்கரி படுகொலை வழக்கில் 21 பேர்களையும் சிறிதும் தயக்கமின்றி விடுதலை செய்த மாவட்ட நீதிபதிக்கு முதல் அமைச்சர் மோடி அளித்த பரிசு என்ன?

மாநில மின்சார வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்; மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய், பங்களா, கார், தொலைப்பேசி, உதவியாளர்கள் என்று சலுகைகளை வாரி இறைத்தார் முதல் அமைச்சர் மோடி என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நீதிமன்றங்களையே மாநில அளவில் தன் கையில் சுருட்டி வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை குஜராத்தில் நிலவும்போது, மோடிமீது சுமத்தப்பட்ட வழக்கை இனி மாஜிஸ்ட்ரேட் அளவிலேயே நடத்திக் கொள்ளலாம் என்பது எவ்வளவு பலகீனமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணையை இனி துவக்கவேயில்லை; தீர்ப்பும் அளிக்கப்படவில்லை; இந்த நிலையிலேயே மோடி பெரிய வெற்றி பெற்றதாக ஊடகங்களும், ஏன் மோடியும்கூட நினைக்கின்றனர், வாண வேடிக்கை விடுகின்றனர் என்றால் இதன் பொருள் என்ன? மாஜிஸ்டிரேட்டின் தீர்ப்பை இவர்களே முடிவு செய்து விட்டனர் என்பது விளங்கவில்லையா?

மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறியதும் இதே உச்சநீதிமன்றம்தான், வழக்கை வெளி மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று ஆணையிட்டதும் இதே உச்சநீதிமன்றம்தான்! அதற்கு மாறான ஆணையை இப்பொழுது பிறப்பித்திருப்பதும் அதே உச்சநீதிமன்றம் தான் என்னே வேடிக்கை!

இந்தியாவையே குஜராத் மாநிலமாக்கிட வேண்டும்; சிறுபான்மையினரை ஒடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் கொன்று குவிக்க வேண்டும்; அதற்கு முற்றிலும் தகுதியானவர் - திறமையானவர் நரேந்திரமோடிதான் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பன சக்திகள் - இந்துமத அடிப்படைவாதிகள் - சங்பரிவார்க் கும்பல், பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு, மோடியை உண்மைக்கு விரோதமாக ஜோடனை செய்து பொய்யான தகவல்களைப் பரப்பிக் கொண்டு வருகின்றன.

பொது மக்களே உஷார்! உஷார்!!

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...