Wednesday, September 7, 2011

திருக்கோவிலூர் நம்மை அழைக்கிறது தோழா!


திருக்கோவலூர் என்பதுதான் அதன் பெயர். அது எப்படியோ திருக்கோவிலூர் ஆகிவிட்டது.

பழைய தென்னார்க்காடு மாவட்டம், பெண்ணாற்றங் கரையில் உள்ள ஊர் இது. மலையமான் நாட்டின் (மலாடு என்று மருவியது) தலைநகரமாகவும் இந்த ஊர் இருந்தது. பாரி மகளிரை இவ்வூரை ஆண்ட தெய்வீகன் என்னும் அரசனுக்கு மணமுடித்தார் அவ்வையார்.

வழக்கம்போல அசுரர்கள் ஒழிக்கப்பட்ட தல புராணமும் உண்டு.

அந்தகன் என்றும் அசுரனை சிவபெருமான் வதம் செய்தானாம். அசுரன் என்றால் திராவிட முன்னோர்கள்தானே!

புராணம் பிச்சிப் பிடுங்கிய இந்தத் திருக்கோவிலூரில் தந்தை பெரியார் மூன்று முறை பேசி இருக்கிறார்.

திருக்கோவிலூர் சுயமரியாதை இயக்கப் பிரமுகராக இருந்தவர் ம.ரா.குமாரசாமி பிள்ளை. அவரைப் பற்றி மிக உயர்வாக தந்தை பெரியார் கூறி இருக்கிறார்.

அவர் மறைந்த நிலையில் அவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தந்தை பெரியார் சென்ற நேரத்தில்,  ஒரு பிரச்சாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

(திடீர் ஏற்பாடுதான்!  எப்படியெல்லாம் அந்தக் கால கட்டத்தில் - 1929 இல் பிரச்சாரக் கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டன - தந்தை பெரியார் வேறு எதையும் பொருட்படுத்தாமல் பொதுக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் என்பதை நமது கழகச் சொற்பொழிவாளர்களும், ஏற்பாட்டாளர்களும் தெரிந்து கொள்வார்களாக.)

அந்தக் கூட்டத்தில் அய்யா ஆற்றிய உரை இருக்கிறதே அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!!

நமது முன்னேற்றம் எனும் தலைப்பில் உரையாற்றியுள்ளார்.

நம் நாட்டின் நிலையையும், மற்ற நாட்டு மக்களின் நிலையையும் ஒப்பிட்டுக் கண்ணீர் சிந்தியிருக்கிறார். மற்ற நாடுகளில் தனி மனித வருமானம் ரூ. 35 (அந்தக் காலக் கண்ணோட்டத்தோடு கவனிக்க வேண்டும்). ஆனால் நம் நாட்டிலோ, அது வெறும் மூன்றரை ரூபாய்தான். நமது சராசரி கல்வி அறிவு நூற்றுக்கு, ஏழுதான் (கையெழுத்துப் போடத் தெரிந்தாலே அதுவும் கல்வி அறிவுதான்) பெண்களின் நிலையோ மிகப் பரிதாபம். நூற்றுக்கு ஒன்றரை பேர்கள்தான்.

அதிலும் சிறந்த மூடர்கள் என்பவர்கள் பண்டிதர் கூட்டங்களிலேயே  பெரும்பான்மையோர்களாக இருந்தால், மற்றவர்களைப் பற்றி நாம் யோசிக்கவும் வேண்டுமோ என்று சாடியுள்ளார்.

ஆராய்ச்சி விஷயத்தில் மற்றவர்கள் எப்படி என்பதற்கு நீண்ட பட்டியலையே கொடுக்கிறார். மணிக்கு 5000 மைல் வேகத்திலே பறக்கிறார்களே - ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள செய்தியை அறிகிறார்கள். செத்தவனைப் பிழைக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறிவிட்டு, நம் நாட்டுநிலை பற்றி 5 தலைப்புகளில் அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.


எனவே, நமது நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது. மற்ற நாட்டு முன்னேற்றம் எப்படி இருக்கின்றது என்பதை இதிலிருந்து யோசித்துப் பாருங்கள். பொதுவாக நமது மக்கள் முதலாவதாக 100க்கு எழுபேர் தான் படித்திருக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகின்றீர்களா? இரண்டாவதாக நமது மக்கள் சாப்பாட்டிற்கில்லாமல் வேலையும் கூலியும் கிடைக்காமல் வெளிநாட்டிற்கு பதினாயிரக் கணக்கான குழந்தை குட்டி கர்ப்ப ஸ்தீரிகளுடன் கப்பலேறி கண் காணாததும் முன்பின் அறியாததுமான நாட்டிற்குப் போய் கஷ்டப்பட்டு மடிகின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகின்றீர்களா? மூன்றாவது மனிதனுக்கு மனிதன் இழிவாகவும் அவமானமாகவும் கருதத்தக்கபடி கீழ்மேல் ஜாதி பிரித்து பஞ்சமன் என்றும் மிலேச்சன் என்றும் சூத்திரன் என்றும் அழைக்கப்படுவதும் சமூக வாழ்வில் சுயமரியாதைக்கு ஈனமான நிலையில் தாழ்த்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகின்றீர்களா?

நான்காவதாக அதுபோலவே ஒரு வகுப்பு மனிதர் தங்களை உயர்ந்த பிறவிகள் என்றும் பூலோகதேவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு மற்ற மக்களைத் தாழ்த்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதை ஒப்புக்கொள்ளுகின்றீர்களா?

ஐந்தாவதாக நாட்டுச் செல்வத்தில் பெரும்பாகம் ஏழைகளுக்கும் கையாலாகாதவர்களுக்கும் தொழிலுக்கும் கல்விக்கும் உபயோகப்படாமல் வெறும் கோவில்கட்டவும் கல்லைக் கடவுளாக்கவும் அதற்குக் கல்யாணம் உற்சவம், தேர் திருவிழா, தினம் பல தடவை பூஜை, அபிஷேகம், நகை, வாகனம், தீவட்டி, விளக்கு, சதுர்மேளம், ஊர்கோலம் ஆகியவைகளுக்கு செலவாகின்றது என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

இன்றைக்கு 82 ஆண்டுகளுக்கு முன் அறிவுலக ஆசான் மேற்கண்டவாறு படம் பிடித்துக் காட்டியுள்ளார். நம் நாடு எந்த அளவு முன்னேறியிருக்கிறது என்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

அந்தத் திருக்கோவிலூரில்தான் வரும் ஞாயிறன்று ( 10-9-2011) திராவிடர் கழக எழுச்சி மாநாடு விடுதலை சந்தா வழங்கும் விழா! மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியோடு கூடிய அமர்க்களமான கொள்கை மாநாடு!

தமிழர் தலைவர் மானமிகு கி.விரமணி அவர்கள் போர் முரசம் கொட்டுகிறார். கழக முன்னணியினர் கருத்துரை வழங்குகின்றனர். கலை நிகழ்ச்சிகளும் உண்டு.

கழகப் பொறுப்பாளர்கள் கடந்த பல நாட்களாகவே மாநாட்டுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊரே கழகத்தின் பாசறைக் கோட்டமாகக் காட்சி அளிக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவரெழுத்து வாசகங்கள் - விளம்பரங்கள் - கழகக் கொடிக் காடுகள்!

கழகத்திற்கு தென்னார்க்காடு மாவட்டம் கை கொடுக்கும் மாவட்டம் அல்லவா! எத்தனை எத்தனை மாநாடுகள் அந்த மாவட்டத்தில் கடந்த காலத்தில்!

அதில் மேலும் ஒளியூட்டும் ஒரு மைல் கல்லாகத்தான் இருக்கப்போகிறது!  திருக்கோவிலூர் மாநாட்டிலே கருஞ்சட்டைகள் சங்கமிக்கட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...