Tuesday, September 13, 2011

திருச்சி திராவிடர் கழக பொதுக்குழுவில் முத்திரைத் தீர்மானங்கள்


பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் மீது விரைவாகத் தண்டனை தேவை தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு - கழகம் இறுதிவரை போராடும்! திருச்சி திராவிடர் கழக பொதுக்குழுவில் முத்திரைத் தீர்மானங்கள்


திருச்சிராப்பள்ளி, செப். 12- தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பு, ஈழத் தமிழர் பிரச்சினை, தூக்குத் தண்டனை ரத்து, நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு உள்பட முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் திருச்சிராப்பள்ளியில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன.

11.9.2011 ஞாயிற்றுக்  கிழமை மாலை 4 மணிக்கு - திருச்சிராப்பள்ளி புத்தூர் பெரியார் மாளிகையில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

(1) இரங்கல் தீர்மானம் - 6ஆம் பக்கம் காண்க (முன்மொழிந்தவர் இரா.குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தீர்மானம் (2) (தீர்மானம் எண் 2 முதல் 13 வரை முன் மொழிந்தவர் முனைவர் துரை.சந்திரசேகரன், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள்  முடக்கப்படுவதற்குத் தீர்வுகள் தேவை
(அ) சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழர்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திரத் திட்டம் ராமன் பாலம் என்று சொல்லி மதவாத மூடநம்பிக்கையைக் காட்டி முடக்கப்பட்டுள்ளது.

மேலும் காலம் நீட்டிக்காமல் மதச் சார்பின்மை மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தோடு இத்திட்டத்தை  விரைந்து நிறைவேற்ற ஆவன செய்யுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

(அ) காவிரி நீர்ப்பிரச்சினை

காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் உச்ச நீதி மன்ற ஆணையின்படி தமிழ்நாட்டுக்கு உரிய அளவு தண்ணீ ரைத் தர கருநாடகம்  மறுத்து வருவது - நீதிமன்றத் தீர்ப்புக்கும், இந்திய அரசமைப்புச் சாசனத்திற்கும் விரோதமானது என்பதை  இப்பொதுக் குழு சுட்டிக் காட்டுவதோடு, உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு அதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவிரி நீர்ப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வுக்கும் வழி வகை காணுமாறும்  மாநில, மத்திய அரசுகளை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

(இ) முல்லைப் பெரியாறு பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் உச்சநீதி மன்ற ஆணைக்குக் கட்டுப்படாததோடு, அணையின் நீர் வரத்தை பாதிக்கச் செய்யும் வகையில் கேரளாவில் புதிய அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

(ஈ) பாலாற்றில் அணை கட்டும் பிரச்சினை

அது போலவே, தமிழ்நாட்டின் நலனுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாலாற்றில் அணை கட்ட முயலும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைகளை சட்ட ரீதியாகத் தடுக்குமாறு மாநில - மத்திய அரசுகளை இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது.

மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் உச்ச நீதி மன்றத்தின் ஆணைகள், தீர்ப்புகள் மதிக்கப்பட்டுச் செயல் படுத்தப்படும்பொழுது, காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்றவற்றில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத போக்குக்கு நிரந்தரப் பரிகாரம் காண வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தையும், மத்திய அரசையும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (3) நதிகளை இணைக்க ஆவன செய்க!

தென்னக நதிகளை இணைக்கும் திட்டம் காலம் கடத்தப்பட நேர்ந்தால், தமிழ் நாட்டு நதிகளையாவது ஒருங்கிணைத்து, மேற்குக் கடலில் வீணாக வீழும் நீரைப் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் திட்டமிட்டுச் செயல்படுத்துமாறு மாநில அரசை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது. இதற்காக தேவைப்படும் நிதியுதவியையும், தொழில் நுட்ப உதவியையும் செய்து தருமாறு  மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (4)
ஈழத் தமிழர் பிரச்சினைகள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறியதோடு, மேலும் மேலும் புதிய சட்டங்களைக் கொண்டு வந்து எஞ்சியிருக்கும் தமிழர்களையும் முற்றாக ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை மத்திய அரசின் கவனத்துக்கு இப்பொதுக் குழு கொண்டு வருகிறது.

ஏற்கெனவே உறுதி அளித்தபடி மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தந்து நாகரிகமாக அவர்கள் வாழ்வதற்கான ஒரு புதிய நிலையை உறுதிப்படுத்துமாறு  மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (5) தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக!

தமிழக மீனவர்களை இலங்கை சிங்களக் கடற்படை தொடர்ந்து தாக்கி உயிர்களையும் உடைமைகளையும் அழிப்பது என்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்த வகையில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதி எதையும் காப்பாற்றாதது வருந்தத்தக்கதும், கண்டிக்கத் தக்கதுமாகும்.

ஒரு சுண்டைக்காய் இலங்கைத் தீவைக் கட்டுப்படுத்தும் சக்தி கூட இந்தியாவுக்கு இல்லையா என்று உலக நாடுகள் கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. குடிமக்களுக்கு இந்திய அரசு தரும் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாதது, இந்திய அரசின் மீதான நம்பகத் தன்மைக்கு உகந்ததல்ல.

இதற்கிடையே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிடுவது போல இந்திய அரசின் அயலுறவுத் துறை அமைச்சர் திரு எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள், கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கிடையாது என்று கூறியிருப்பது கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

தமிழ் நாட்டுக்குரிய கச்சத் தீவை மாநில அரசின் சம்மதம் இல்லாமல் இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததோடு, மீன் பிடிக்கும் உரிமை கூட தமிழக மீனவர்களுக்குக் கிடையாது என்று இந்திய அரசே கூறியிருப்பது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கும் தமிழக மீனவர்களை பொருளாதார இழப்புக்கும் ஆளாக்கியுள்ளது.

கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றுத் தரவேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக ஒன்று திரண்டு போராடும் நிலை ஏற்படும் என்றும் இப் பொதுக் குழு மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் (6)
அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை- உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துக!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அந்தச் சட்டத்தின் சரத்து களைச் செயல்படுத்த உடனடி நடவடிக்கையை எடுக்கு மாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது.

தீர்மானம் (7) தேசியக் கல்வி திட்ட நிலைப்பாட்டைக் கைவிடுக!

இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான கல்வித் திட்டம்,  இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரே நுழைவுத் தேர்வு என்ற எண்ணத்தையும், திட்டத்தையும் உடனே கைவிடும்படி மத்திய அரசை, குறிப்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கபில் சிபல் அவர்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (8) மத்திய அரசு வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துக!

மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டும், 6 விழுக்காடு இடங்கள் கூட மத்திய அரசின் துறைகளில் அளிக்கப்படாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

எந்த இடத்தில் இந்தத் தவறு நடைபெறுகிறது என்பதைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு உரிய சட்ட அங்கீகாரம் கொடுக்காததும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளிக்காததும் இதற்கான முக்கிய காரணங்களாக இருப்பதால், இவற்றை உடனடியாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (9) (அ) நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக உச்சநீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நீதிபதியாக இல்லாததையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.

மக்கள் தொகையில் கணிசமாக உள்ள தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மயினர், மகளிர் ஆகியோருக்கு உயநீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை இப்பொதுக் குழு வலியுறுத்தி, இந்த வகையில் சட்டம் ஒன்றையும் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

ஆ)  தன்னாட்சி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு தேவை!
காஞ்சிபுரத்தில் உள்ள வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பானஅய்.அய்.அய்.டி.  உயர் கல்வி நிறுவனத்தை மத்திய கல்வி நிறுவனமாக தரம் உயர்த்திடும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்துதல் என்ற பெயரில் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக ஆகும்போது இங்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாற்று மிகவும் நியாயமானதாகும். அய்.அய்.டி. களிலும் தரம் உயர்த்தப்படும் தன்னாட்சி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் (10) தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்ததற்குக் கண்டனம்

தமிழ் அறிஞர்கள், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கருத்தினை ஏற்று, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கடந்த தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற புதிய சட்டத்தை இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசு அவசரக் கோலமாக, எந்த வித விவாதங்களுக்கும் சட்ட மன்றத்தில் இடம் அளிக்காமல் நிறைவேற்றியதற்கு இப்பொதுக் குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஆபாசமான, அருவருப்பான புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டதும்,  ஓர் ஆண்டின் பெயரும் கூட தமிழில் இல்லாததுமான  சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்ற சட்டம், அப்பட்டமாகத் தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பதை இப்பொதுக் குழு மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

மீண்டும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு எனும் சட்டம் நிறைவேற்றப்படும் வரையில், திராவிடர் கழகம் ஓயாது என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன், முதல்கட்டமாக நாடு தழுவிய அளவிலான பிரச்சாரத்தைப் பெரும் வெள்ளமாக, சுழன்றடிக்கும் புயலாகத் தீவிரப் படுத்துவது என்று இப்பொதுக் குழு முடிவு செய்கிறது.

கடந்த 5 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், முதற்கட்டப் பிரச்சார அடைமழையைத் தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. தை முதல்நாளாம் தமிழ்ப் புத்தாண்டில் பொங்கல் விழாவைப் பல்வேறு போட்டிகள் நடத்தி, பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவாக ஒவ்வொரு ஊரிலும் மிகச் சிறப்பாக நடத்துவது கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் (11)  (அ)பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத்  தண்டனையை ரத்து செய்க!

பேரறிவாளன், சின்னசாந்தன், முருகன் ஆகியோ ருக்கு கடந்த 9 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனைக்குத் தற்காலிகமாக 8 வார காலம் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டு இருந்தாலும்,  நிரந்தரமான வகையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, இதுவரை அவர்கள் மூவரும் மற்றும் நளினியும் அனுபவித்து வந்த 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தைக் கணக்கில் கொண்டு, நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும்  இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது. 

(ஆ) தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்க!

உலகம் முழுமையும் பெரும்பாலான நாடுகளில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசுகளும் இந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் (12) 1000 பேர் கொண்ட இளைஞர் பாசறை உருவாக்கம்

ஆயிரம் பேர்களை உள்ளடக்கிய இளைஞர் பாசறை ஒன்றை உருவாக்குவது என்றும், அந்த இளைஞர்களுக்கு பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி, கணினிப் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகளை அளிப்பது என்றும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடும் இளைஞரணியினர் களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் போதிய அளவு சிறப்பான ஒத்துழைப்பினைக் கொடுக்க வேண்டும் என்றும் இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.....

தீர்மானம் (13) பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை!

450 ஆண்டு வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான  பாபர் மசூதியை அயோத்தியில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கடந்த 19 ஆண்டு காலமாக எவ்வித் தண்டனைக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திரமாகத் திரிந்து வருகிறார்கள். இவர்களில் பலரும் மத்திய  - மாநில அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்று சொல்லப்படும் நிலையில், இதில் மேலும் காலம் கடத்தாமல், உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனைக்கு உட்படுத்த விரைவாக நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த  வழக்கின் தீர்ப்பு மேலும் தாமதிக்கப்படுவதன் மூலம் நீதி, நிருவாகம் இவற்றின்மீது மக்களுக்கு இருந்து வரும் நம்பிக்கையை இழக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும், வன்முறைக்கு ஊக்கம் தருவதற்கு இந்தக் காலதாமதம் பெரிதும் உதவிடும் அபாயத்தையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது. தீர்மானம் (14) (14 முதல் 15 வரை உள்ள தீர்மானங்களை முன்மொழிந்தவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
(அ) அரசியல் தீர்மானம்

100 நாட்களுக்கு முன் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு ஏற்ப, பதவியேற்ற அ.தி.மு.க. அரசுக்கும், குறிப்பாக அதன் பொதுச் செயலாளர் - முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் ஜனநாயக நெறி முறைப்படி திராவிடர் கழகம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

ஒரு சமுதாயப் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் தந்தை பெரியார் தம் அறிவியக்கமான திராவிடர் கழகம், ஆட்சிக்கு வந்துள்ளோர் செய்யும் எதையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதோ, அல்லது கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதோ இல்லை எப்போதும்.

வரவேற்க வேண்டியவகைளை வரவேற்றும், சுட்டிக் காட்டி கண்டிக்க வேண்டியவைகளைக் கண்டித்தும் மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கோரும் அணுகு முறையை தொடர்ந்து திராவிடர் கழகம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் கொள்கைப் பார்வையோடு கடைப்பிடிக்கத் தவறாது என்பதை இப்பொதுக் குழு தெளிவுபடுத்துகிறது.

(ஆ) பழிவாங்கும் அரசியல் அணுகுமுறை வேண்டாம்! 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பொறுப்பாளர்களை நில ஆக்கிரமிப்பு என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்வது - சிறையில் அடைப்பது என்பது நாள்தோறும் நடக்கும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. குற்றமிழைத்தவர்கள் யாராகவிருந்தாலும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்- சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் - அது பற்றி மாற்றுக் கருத்துகள் கிடையாது.

அதே நேரத்தில் இது ஒரு சார்புத் தன்மையை உடையதாகவும், மற்ற கட்சியினர் மீது கூறப்படும் இதே குற்றச்சாற்றுகள் பற்றி கண்டும் காணாமலும் இருக்கும் போக்கும் தி.மு.க.வினரை மட்டும் குறி வைத்து இந்த அரசு பழி வாங்குகிறதோ என்ற எண்ணத்தைப் பொது மக்கள் மத்தியில ஏற்படுத்தியுள்ளது என்பதைநடு நிலைக் கண்ணோட்டத்தோடு இந்தப் பொதுக் குழு சுட்டிக் காட்டுகிறது.

பழி வாங்கும் போக்கினைக் கைவிட்டு  மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதிலும்  முழுக் கவனத்தைச் செலுத்துமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

(இ) தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயகம் காக்கப்படவேண்டும்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நீதிக்கட்சிக் காலந்தொட்டு தனி மதிப்பும், சிறப்பும் உண்டு. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், நடு நிலை தவறி - முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள், (ஆளும் கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் மொத்த வாக்குகள் வித்தியாசம் வெறும் 40 லட்சமே என்பதைக் கூடக் கணக்கில் கொள்ளாமல்,) சட்டமன்றத்தில் இருப்பதே ஒரு உறுத்தலாக இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் தமிழ் நாடு சட்ட மன்ற நடவடிக்கைகள் நடந்து வருகின்றனவோ என்பதுதான் பொதுவான - நடுநிலையானவர்களின் கணிப்பாகும்.

முன்னாள் முதல் அமைச்சர் அவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களும் விமர்சனங்களும் எல்லையைத் தாண்டும் நிலை விரும்பத்தக்கதல்ல.

பொதுவாக சட்டப் பேரவையில் இல்லாதவர்கள் பற்றி சட்டப் பேரவையில் விமர்சிப்பது மரபல்ல என்பது கூடகடைப் பிடிக்கப்படாத நிலை உள்ளது.

மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்கள்தான் சட்ட மன்றத்தில் இடம் பெறுகின்றனர். அவர்களுக்குச் சட்ட சபையில் உள்ள உரிமை பாதுகாக்கப்படவேண்டும். ஆளும் கட்சியினர் எதை வேண்டுமானாலும் பேசலாம்; எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தங்கள் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளுக்குக் கூட பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கும் போக்கு, ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதறடிக்கக்கூடியதாகும்.

முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க. சட்டமன்ற நடவடிக்கைகளில கலந்து கொள்ள முடியாத ஒரு நிலையை ஏற்படுத்துவது - ஆளும் கட்சியின் நன்மைக் கும் கூட இடர்ப்பாட்டை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதையும்,  சிறுகச் சிறுகச் சேரும் அதிருப்திகள் ஆளும் கட்சிக்குப் பாதகமான ஒரு மன நிலையை பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் உருவாக்கும் என்பதையும் இப்பொதுக்குழு தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் (15) உள்ளாட்சித் தேர்தலும் - கழகமும்

அ) நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, கூட்டணிகளின் நிலை தெளிவாகாத நிலையில் யாருக்கு வாக்களிப்பது என்பதை உரிய நேரத்தில் அறிவிக்க கழகத் தலைவர் அவர்களின் முடிவுக்கு விடுவது என்று இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.

ஆ) உள்ளாட்சித் தேர்தலில் திராவிடர் கழகத்தின் வழமையான முடிவின்படி, கழக உறுப்பினர்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்றும் இப்பொதுக் குழு அறிவிக்கிறது.

(பலத்த கரவொலிக்கிடையே அனைத்துத் தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...