Tuesday, September 13, 2011

வன்முறைக்கு முடிவு எப்போது?


இந்தியாவில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அதுவும் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலேயே நாடாளுமன்ற வளாகம், உயர்நீதிமன்ற வளாகம் போன்ற கேந்திரமான பகுதிகளிலேயே இத்தகைய தாக்குதல்கள் நடை பெறுவது அதிர்ச்சிக்கு உரியதாகும்.

தலை நகரமே பாதுகாப்பு இல்லாத பகுதியாகி விட்டது என்று உள்துறை அமைச்சரே சொல்லும் நிலை என்றால்  - இதன் தன்மையைத் தெரிந்து கொள்ள லாமே!

இத்தகு வன்முறைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும். அதே நேரத்தில் இதற்குமுன் வன் முறையில் ஈடுபட்டவர்கள்மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது மிகவும் முக்கிய மானதாகும்.

குறிப்பாக பாபர் மசூதி இடிப்பு; இன்றைக்கு 19 ஆண்டுகள் ஓடி விட்டன. குற்றவாளிகள் புலனாய்வு செய்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; லிபரான் ஆணையம் பட்டியலிட்டே கொடுத்து விட்டது. இதற்கு மேலும் தாமதத்திற்கு என்ன காரணம்? குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றவர்கள் இந்தியாவின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து விட்டனர்.

இன்னும் சொல்லப் போனால் லிபரான் ஆணையம் முன்னாள் பிரமதர் அடல்பிஹாரி வாஜ்பேயிக்கு குற்றவாளிகள் பட்டியலில் இடம் கொடுத்துள்ளது.

பி.ஜே.பியும், சங்பரிவார்க் கும்பலும் இதனை ஆட்சேபித்தாலும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் அடித்துச் சொல்லியிருக்கிறாரே - பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயிக்கு நிச்சயம் தொடர்பு உண்டு என்று கூறியுள்ளாரே!

சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது உண்மையென்றால் வாஜ்பேயி, அத்வானி உட்பட குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டாமா?

குஜராத் மாநிலத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? அரசு அதிகாரத்தை முற்றிலும் பயன்படுத்தி முண்டா தட்டி சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தவர்தானே நரவேட்டை நரேந்திர மோடி?

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டாரா இல்லையா?

உள்துறை அமைச்சர் படுகொலை செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்த குற்றவாளி களுக்குக் கூட தண்டனை வாங்கிக் கொடுக்காதது சரியா?

ஹரேன் பாண்டியாவின் கொலையின் பின்னணி யில் அம்மாநில முதல்வரே இருந்தார் என்று ஹரேன் பாண்டியா குடும்பத்தாரே குற்றஞ்சாட்டியுள்ளனரே!

இதற்கெல்லாம் என்னதான் பரிகாரம்? மாலேகான் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் ஏன் இதுவரை தண்டிக்கப்படவில்லை?
மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, ஆஜ்மீர்தர்கா போன்ற இடங்களில் நடைபெற்ற வன்முறை வேலைகளில் முக்கிய பங்காற்றிய சுவாமி அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுடன், இவற்றில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் பேர்வழிகளை அடையாளம் காட்டி விட்டாரே!

ஒப்புதல் தெரிவித்தவர் அசாதாரண மனிதரும் அல்லவே! ஆர்.எஸ்.எசுடன் நீண்ட கால தொடர்புடையவர். அதன் பிரச்சாரகர், வனவாசி கல்யாண் ஆசிரமம் நடத்தி வருபவர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியுடன் பல மேடைகளில் பேசியவர் ஆயிற்றே! இவரின் சாட்சியம் மிக மிக முக்கியமானதல்லவா!

மும்பை தாஜ் ஓட்டல் வன்முறையில் காவல்துறை மேலதிகாரி ஹேமந்த்கர்கரே கொலையில் இந்துத்துவ அமைப்புகளின் பங்கு உள்ளது என்பது இவரின் வாக்குமூலத்தால் அறியப்பட்டுள்ளது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்து நடந்திருக்கிறது என்பது தெளிவாகவில்லையா?

வெறும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே காலத்தைக் கழிக்கலாமா? தாங்கள் பாதிக்கப்பட்டதற்குப் பரிகாரம் கிடைக்கவில்லையே என்ற அவர்களின் கேள்வியில் நியாயம் இருப்பதை மறுக்க முடியுமா?

நியூட்டன் விதியைப்பற்றி எல்லாம் பேசும் நரேந்திரமோடி அங்கம் வகிக்கும் கட்சியினருக்கு இது தெரிந்திருக்க வேண்டுமே!

எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக வன்முறை யாளர்கள் தண்டிக்கப்படுகிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு வன்முறைகளின் வாலாட்டமும் அடங்கும் என்பது உளவியல் ரீதியான உண்மைதானே?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...