Monday, September 26, 2011

சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிவிடாதென்று சொல்லியவர் பெரியார் வேலூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் மு.சுகுமார் உரை


வேலூர், செப். 26- வேலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் 24.9.2011 அன்று வேலூர் தமிழ்ச் சங்கச் செயலாளர் மு.சுகுமார் அவர்களின் வரவேற்புரை:

வேலூர் தமிழ்ச் சங்கத்தின் பெருமைக்குரிய தலைவர், உயர் கல்வியில் மட்டுமல்ல, உயர் வேலை வாய்ப்புகளிலும் உலக சாதனை நிகழ்த்திக் கொண் டிருக்கும் உயர் கல்விக் காவலர், விழாத் தலைவர், வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்களுக்கும், அய்யா வழியில் அயராது உழைக்கும் தமிழர் தலைவர், வற்றாத வாழ்வியல் சிந்தனையாளர், திராவிடர் கழகத் தலைவர், விழாவின் சிறப்பு விருந் தினர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கும், எமது ரோட்டரி மாவட்டத்தின் ஆளுமைச் சிகரம், உடனடி முன்னாள் ஆளுநர் ரொடேரியன் கோ.ஒளி வண்ணன் அவர்களுக்கும், வெகுமக்களுக்கு நன்மை பயக்காத எந்த ஒரு செய்தியோடும் சமரசம் என்பதே சாத்தியமில்லா வாழ்வுக்கு உரியவராய் உயர்ந்து நிற்கும் அய்யா தெ.சமரசம் அவர்களுக்கும், எம் மோடு பழகுவதோடு, பக்குவமாய் எமை வழிநடத் தும் பதுமனார் உள்ளிட்ட அவையோர் அனை வருக்கும் வணக்கம்.

தனது எல்லையற்ற கல்விச் சேவையோடு தமிழ்ச் சேவையும் ஆற்றவேண்டும் என்ற ஈடுபாட்டின் காரணமாய் இந்த சிறப்புமிகு விழாவை நடத்திட எல்லா உதவிகளையும் வழங்கி, தலைமை பொறுப் பேற்று விழாவை நடத்திக்கொண்டிருக்கும் வேந்தர் முனைவர் கோவி அவர்களை அன்போடு வரவேற் கின்றோம்.

தனது பல்வேறு சொந்தப் பணிகளை மட்டு மல்ல, பொதுப் பணிகளையும் நாம் அழைத்தோம் என்பதற்காக ஒதுக்கி வைத்துவிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராய் வருகை தந்து சிறப்பித் திருக்கும் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களை அன்போடு வருக! வருக! என வரவேற் கின்றோம்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ரொடே ரியன் ஒளிவண்ணன் அவர்களை அன்போடு வரவேற்கின்றோம். வேலூர் பகுத்தறிவாளர் பேரவைத் தலைவர் அய்யா தெ.சமரசம் அவர்களை அன்போடு வரவேற்கின்றோம். தமிழ் மற்றும் தமிழர் நலம் நாடும் தமிழ்ச் சான்றோர்கள், அன்புத் தாய்மார்கள், வேலூர் தமிழ்ச் சங்கத்தின் பெருமைக் குரிய உறுப்பினர்கள், ரோட்டரி நண்பர்கள், பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புகளின் உறுப் பினர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடக நண்பர் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கின்றோம்.

19ஆம் நூற்றாண்டில் பிறந்த பெரியார் 20ஆம் நூற்றாண்டின் முக்கால் பகுதி வரை வாழ்ந்தவர். 95 அகவையில் அவரின் பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 75.

யார் சொன்ன கருத்தையும் அவர் சொன்ன தில்லை. தனக்குத் தோன்றியதை ஜோடனை செய்யா மல் சொக்கத் தங்கமாக எடுத்துரைத்தார். திருவள் ளுவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதுகூட நான் சொன்ன கருத்தை வள்ளுவனே சொல்லியிருக் கிறான் என்று எடுத்துச் சொல்லும் அளவுக்குத் தன்னம்பிக்கையும், தன்னறிவும் கை கோத்த காலக் கதிரவன் அவர்.

இன்றைக்கும் உலகெங்கும் மதக் கலவரங்கள்! மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட் டது போல வேறு எந்தக் காரணத்துக்காகவும் சிந்தப்படவில்லை என்பது நிதர்சனமான வரலாறு.

இப்பொழுது தேவை மதமல்ல. அது மனிதனுக் குப் பிடிக்கப்படக்கூடாது. மதம் யானைக்குப் பிடிக்கலாம், நாய்க்குப் பிடிக்கலாம். மனிதனுக்குப் பிடித்தால் அதே நிலை என்பது சரிதானே? அதனால் தான் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார். ஆணித்தரமாகச் சொன்னார், அறிவு துலங்கச் சொன்னார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல்.

மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சி தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம். லோகக் குரு என்று கூறிக் கொண்டு காமக் குருவாகக் காட்சி அளிக்கிறான்.

கடவுள் பிறப்பற்றது என்கிறான் - ஆனால் ராமன் பிறந்த நாள் என்கிறான். அவன் பெயரால் பாலம் உண்டு என்கிறான். அதனைக் காட்டி வளர்ச்சித் திட்டத்தை முடக்குகிறான். அந்த மதப்போதை நம் நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை புரையோடிக் கிடக்கிறது. ஒற்றுமையை மட்டுமல்ல; மனித குல வளர்ச்சியையும் தடுக்கிறது மதம்.

மனித அன்பைக் குலைக்கும் - சகோதரத்துவத்தை சாவுக் குழிக்கு அனுப்பும் - ஒற்றுமைக்கு உலை வைக்கும் - வளர்ச்சியைத் தடுக்கும் மதத்திற்கு முற்றாக விடை கொடுப்போம்! மனித நேயத்தை முன்னிறுத்தி, அறிவை வழி காட்டும் விளக்காக்கி, அன்பை அரவணைக்கும் மலராக்கி, நம் கையில் கொடுத்துள்ள பகுத்தறிவுப் பகலவன் - உயர் எண் ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் கருத்தியலைக் கொள்வோம்!

காலத்தை வெல்வோம்! தன்னலம் துறந்து தொண்டறம் பேணுவோம்! மதமற்ற அந்தப் புத்துலகை உருவாக்குவோம்! ஒன்றுபட்ட ஒப்புரவு வாழ்வில் துய்ப்போம்!

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீலாய், ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்த வர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத் தில் எத்தனையோ பெருமைகள்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்ப்யூட்டர், வாக்மென், வெப்கேமரா, டெஸ்ட் டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப் பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் இனிவரும் உலகம் என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப் படுத்தியவர் பெரியார்!

இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 1942 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொன்னபோது மறுத்தார். நெருப்பு கூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன் ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது என்றார்!

தனது மனதில் பட்டதைத் தயவு தாட்லண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றி பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளை மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள் என்று சொல்லி விட்டு வந்தார்!

உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் செகண்ட் செக்ஸ் வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் வெளியாகிவிட்டது!
நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள் ளுங்கள். நான் என்னை மாற்றிக் கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது என்று எல்லாக் கூட்டத்திலும் மறக் காமல் சொல்வார்! பெரியார் வரலாற்றை தமிழர் களுக்கு படைத்தளித்த சாமி.சிதம்பரனார் பெரியார் பற்றி கூறும்போது...

இவர் இந்தியாவிலேயே பெரியார்தான். மனித இயற்கைக்கு மாறுபட்டவர்.

தோல்வி என்பது அவருடைய வீரத்தையும் அறிவையும் போட்டு காய்ச்சும் நெருப்பு. இத்தீயில் வைத்துக் காய்ச்ச காய்ச்ச அவருடைய இவ்விரண்டு பண்புகளும் ருசியில் அதிகப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைப் போலவே வெற்றி கிடைத்தாலும் அதற்கு மேல் செய்ய வேண்டியதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட அதிகப் பொறுப்பைப் பற்றியும் தான் கவலைப்படுவார். சில இழி மக்களைப் போல் வெற்றி மயக்கத்தால் கூத்தாடும் சிறுமைக் குணம் அவரிடமில்லை.

சுருங்கக்கூறினால், பெரியார் ஒரு பிறவிப் போர் வீரர் என்று துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். 7 சதவிகிதம் பேர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்த காலகட்டத்தில் வாரம் தோறும் 10,000 குடிஅரசு பத்திரிகைகளை அச்சேற்றிய பெரியார், பணம் கிடைக்கக் கூடிய விளம்பரங்களைக்கூட அதிகம் வெளியிட முடி யாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டு, வருவா யையும் இழக்கத் தயாராகி யிருக்கிறார்.
விளம்பரத்துக்கு கூடுதல் பக்கங்கள் ஒதுக்குவ தால், கருத்துகளை சொல்ல முடியாமல் போய்விடு கிறது என்று வருவாயையும் ஒதுக்கித் தள்ளியிருக் கிறார்.

.... கொஞ்ச நாளைக்கு குடிஅரசு 16 பக்கத் துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற் பட்டு விட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு, இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப் படாமல் செய்துவிட்டு சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்குக் குறையாத விஷயங்களை வெளியாக்க உத்தேசித் திருக்கின்றோம்.

இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்... என்று 23.12.1928 குடிஅரசு இதழில் எழுதுகிறார்.
தமிழர் உரிமை மீட்பர் பெரியார்... ஈ.வெ.ராம சாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் முன் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

- இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத் தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கை களையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.

மானமும் அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்க எவ்வெவ்வழியில் பாடுபட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அனைத்து வகையான அடிமைத்தனங்கள், கட்டுத் தளைகள், ஒடுக்கு முறைகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு புதிய சமுதாயம், சமத்துவ சமுதாயம், சுயமரியாதை சமுதாயம் உருவாக வேண்டுமென் பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.

சிந்திப்பதாலொன்றும் சிரம் சிதறிடாதென்று சொல்லி திரிந்தார். தான் சொல்வதையும் சேர்த்து எவன் சொல்வதையும், சொன்னதையும் யோசிக் காமல் ஏற்காதென்றார். எட்ட கை கட்டி நின்றவர் களையும் தொட்டிழுத்து கை கூட்டி நடந்தார். கற்பும், கலியாணமும் உனக்கிட்ட கை விலங்கு புரிந்து கொள், பெண்ணே நீ ஏன் அடிமை ஆனாய்? என்றார்.

கல்லும், கற்சிலையும் மதி மயக்கும் அதை உடை, போடு பீடு நடை என்றார். பூட்டிய கதவுகளை எட்டி உதைத்தார். திறக்காத போது தகர்த் தெறிந்தார். தகர்ந்த கதவுக்குப் பின் நின்று குறுக்குச் சால் ஓட்டியவர்களையும், வழி அடைத்தவர்களை யும் ஆட்டி வைத்தார்.

கிழவன் இருந்திருந்தால் இன்று தமிழீழமும் மலர்ந்திருக்கும்! சுயத்தையும் மரியாதையையும் இழக்க விட்டிருப்பாரோ! எங்கள் அய்யா?

வாழ்க அய்யா பெரியார்! வளர்க பகுத்தறிவு!

அய்யா வழியில் அயராது உழைப்போம்!

மீண்டும் உங்கள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்று வரவேற்புரையினை நிறைவு செய்கிறேன் எனக் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...