Thursday, September 8, 2011

இனி ஆதிச்சநல்லூர் போகாமல் இருப்போமா?


சென்னை பெரியார் திடலில் 6.9.2011 அன்று சென்னை உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவரும், அழகப்பா பல்கலைக் கழகத்தின் மேநாள் துணை வேந்தரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த வரலாற்றாளர்களில் ஒருவருமான பேராசிரியர் டாக்டர் ஏ.இராமசாமி அவர்களது தலைமையில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் (இம்மய்யத்தில் பொறுப்பேற்றுள்ளவர்கள் அத்துணை பேரும் பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் வரலாற்றுத் துறை தலைவர்களாக இருந்து, முனைவர் பட்டத்தைப் பெற்றும், பலருக்கு முனைவர் பட்டம் பெற வழித் துணைவர்களாகவும், ஆசிரியர்களாகவும் திகழ்ந்தவர்கள் ஆவார்கள். 

இது முழுக்க முழுக்க கல்வியியல் சார்ந்த ஓர் ஆய்வு மய்யமாக பல ஆக்கரீதியான திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது) நடைபெற்ற சிறப்புப் பாராட்டுக் கூட்டத்தில், சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் முனைவர் சி.மகேசுவரன் அவர்கள் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் என்ற ஒரு ஆதாரபூர்வமான சான்றுகளோடு ஆய்வு சொற்பொழிவுவை படக்காட்சி கணினி முறையில் மிக அருமையாக, கருத்து விருந்தாகப் படைத்தார்.வந்தவர்களில் பெரும்பாலோர் பேராசிரியர்கள், வரலாற்றுத் துறை மாணவர்கள்.

அக்கூட்டத்தில் நீதிக்கட்சி - திராவிடர் இயக்க வரலாறு இரண்டு தொகுதிகள் வெளியிட்டு இனி 6 தொகுதிகளையும் எழுதிக் கொண்டுள்ள திராவிட இயக்க சிந்தனைச் செம்மல் க. திருநாவுக்கரசு  அவர்களுக்குப் பாராட்டு விழாவும்கூட இணைத்து நடத்தப் பெற்றது.
காப்பாட்சியர் முனைவர் சி.மகேசுவரன் அவர்களது பொழிவு முற்றிலும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் விருந்தாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றுக் காலக் கட்டங்களுக்குள் பயணம் செய்த அவர்கள் கேட்டோரையும் உடன் பயணிக்க வைத்தார்கள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
வரலாற்று முகிழ்ப்புக் காலம்
தொடக்க வரலாற்றுக் காலம்

எனப் பிரித்துக் காட்டி அவற்றுள்,

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதில் கற்காலமும் அக்கற்காலத்தில்கூட பழங்கற்காலம், குறுங்கற்காலம் அதாவது இடைக் கற்காலம், பிறகு, புதுக் கற்காலம் என முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம் என்றார்.
வரலாற்று முகிழ்ப்புக் காலம் என்பது, செம்பு உலோகம் கிடைத்த கற்காலம் - வெண்கலக் காலம்.

தொடக்க வரலாற்றுக் காலம் என்பது பெருங் கற்காலம் / இரும்பு காலம் என அருமையாகப் பகுத்து விளக்கினார்கள்.

(தமிழர்) திராவிடர் நாகரிகம் மிகவும் தொன்மையானது. அதாவது 5000 ஆண்டுகளுக்கு  மேலானது.

தமிழ்நாட்டில் திருவைகுண்டம் அருகில் உள்ள ஆதிச்சநல்லூர்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சிக் களம்.  அதன் முகமைகள் அரப்பா, மொகஞ்சதாரோ முதலிய சிந்துவெளிப் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டதாகும்.

இச்செய்தியே பலருக்குப்  புதுமையானது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு - 1899 இல்

சிந்துவெளி அரப்பா, மொகஞ்சதாரோ- 1912 இல்

தமிழகத்தில் சிந்து வெளி நாகரிகக் கால உணர் கொம்புடைய செம்பு வாள்கள் மிகப் பெரும் ஒத்த சான்றுகள்.

இந்த செம்புக் குவியல் பண்பாட்டின் வெளிப்பாடே என்று தொல்லியலாளர் பெரும்பான்மையர் கருதுகின்றனர்!

அதோடு இன்னொரு அருமையான விளக்கத்தினையும் தம் ஆய்வுப் பொழிவில் விளக்கினார் அப்பெருமகனார்!

பண்பாடு என்பதன் வரையறை: ஓர் இனக் குழுவின் உறுப்பினர்கள் வாழ்வியல் பங்குகளின் தொட்டுணர் மற்றும் கருத்துணர் பகுதிகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பெறுதலே பண்பாடு ஆகும்.

நாகரிகம் என்பதன் வரையறை: எழுத்துக்கள் வாயிலாகவும் ஓர் இனக்குழு உறுப்பினர்கள் வாழ்வியல் பங்குகளின் தொட்டுணர் மற்றும் கருத்துணர் பகுதிகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பெறுதலே நாகரிகம் ஆகும்.

எங்கு பண்பாடு முற்றுப் பெறுகிறதோ, அங்கு நாகரிகம் தோற்றம் பெறுகிறது என்பர் சமுதாய அறிவியலாளர் என்று அருமையாக விளக்கினார்.

இனி ஆதிச்சநல்லூர் போகாமல் இருப்போமா? அந்தக் காலத்தில் நந்தன் சிதம்பரம் போகாமலிருப்பேனா என்று பாடியதாகச் சொல்வார்கள். இனி அறிவியலாளர்கள் மேலே சொன்னபடி ஆதிச்சநல்லூர் போகாமல் இருப்போமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...