அன்னாஹசாரே என்பவரை மய்யப்படுத்தி - ஊழலுக்கு எதிர்ப்பாக அரங்கேற்றப்பட்டுள்ள பட்டினிப் போராட்டம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பதில் அய்யமில்லை. அடுத்த மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஒத்திகையாகும்.
பாரதிய ஜனதா என்னும் ஆர்.எஸ்.எஸின் முகமூடியை அதிகார பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடு. பாரதிய ஜனதா கட்சிக்குள் முட்டல் - மோதல்கள் ஆயிரம் ஆயிரம்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மக்கள் விரோதத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளன. குறிப்பாக கருநாடக மாநிலத்தில் அக்கட்சியின் ஆட்சி எந்தக் கதிக்கு ஆளானது என்பது யாருக்குத் தெரியாது.
ஊழல் குற்றச்சாற்றுக்குப் பெரிய அளவுக்கு ஆளான அம்மாநில முதல் அமைச்சர் எடியூரப்பாவை வெளியேற்றுவதற்குள் பா.ஜ.க. தலைமை பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
ஆனாலும் பெயரளவில் எடியூரப்பா வெளியேறி னாலும் அவருடைய பினாமிதான் முதல் அமைச்சராகப் பதவியேற்கும் நிலைமை கேலிக்குரியது.
ஒரு மாநில முதல் அமைச்சரிடம் பாரதிய ஜனதாவின் தலைமை எந்த அளவுக்குச் சரணாகதி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும்.
கொக்கு ஒட்டகத்தைப் பழித்த கதையாக இந்தப் பா.ஜ.க. நரி அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைப் பார்த்து ஊழல் ஊழல் என்று ஊளையிடுகிறது.
பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் சவப் பெட்டியில் கூட ஊழல் நடந்ததே! கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணன் கத்தை கத்தையாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டதை தெகல்கா அம்பலப்படுத்த வில்லையா?
13 நாள் பிரதமராக வாஜ்பேயி அந்தக் குறுகிய கால கட்டத்தில்கூட என்ரான் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது?
அன்னாஹசாரே என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரின் பின்திரையில் பா.ஜ.க., குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
தேசியக் கொடியிலோ பா.ஜ.க.வின் தாமரை பறந்து கொண்டிருக்கிறது. காலிகள் நடமாட்டம் அதிகம்.
ஆர்.எஸ்.எஸின் அபிமான பாடலான முஸ்லிம் களைச் சிறுமைப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் பட்டினிப் போராட்டம் வளாகத்தில் கலக்கிக் கொண்டு இருக்கிறது.
ஊழலை முன்னிறுத்தி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பலகீனப்படுத்தி - அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பி.ஜே.பி. அனுபவிப்பது அல்லது பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் இதற்குள் புதைந்திருக்கும் மெகா திட்டமாகும்.
ஊழலைவிட மகாமோசமான மதவாதத்தை எதிர்த்து இந்த ஹசாரேக்கள் எப்பொழுதாவது குரல் கொடுத்ததுண்டா?
பாபா மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? அப்பொழுதெல்லாம் இந்த ஆசாமிகள் எந்தப் பொந்துக்குள் பதுங்கி இருந்தனர்?
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராக, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கக் கூடாது என்று குறைந்த ஒரு கருத்தாவது தெரிவித்ததுண்டா?
ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் எடியூரப் பாவுக்கு எதிர்ப்பாகப் பேசியதுண்டா? இலஞ்சம், ஊழலுக்கு எதிராகப் பேசப்பட்டால் வெகு மக்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுவார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் எதிரான அணி அடுத்த மக்களவைத் தேர்தலை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியை - சூழ்ச்சியை - அரசியல் தெரிந்தவர்கள் என்று கருதப்படும் இடதுசாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பி.ஜே.பி.யோடு கைகோத்து போராட்டத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவு யாருக்குச் சாதகமானது?
நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வா ஊதி ஊதி சாப்பிடுவோம் என்கிறது பி.ஜே.பி. இதில் இடதுசாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?
சீசரின் மனைவி சந்தகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பார்கள்; பட்டினிப் போராட்டத் தலைவர் அன்னா ஹசாரே சந்தகத்துக்கு அப்பாற் பட்டவரா? இல்லை இல்லை என்பதற்கு ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.
பொது மக்களே ஏமாந்து விடாதீர்கள்!
No comments:
Post a Comment