Tuesday, August 9, 2011

சமூக நீதித் தடத்தில் தமிழர் தலைவரின் தேவை!

உத்தரப்பிரதேசம் வாரணாசி (காசி)யில் உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கக் கூட்டமைப் பின் சார்பில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டு விழா 7.8.2011 அன்று மாலை நடைபெற்றுள்ளது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்.

சமூக நீதிக்கான சட்டங்கள், ஆணைகள் இருந்தும்கூட அவற்றை செயல்படுத்துவதில் ஆங்காங்கே உயர்ஜாதி நிருவாக வர்க்கம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டுதான் வருகின்றன. நீதிமன்றங்கள்கூட தவறான வியாக்கியானங்கள்மூலம் அந்தச் சக்திகளுக்குத் துணை போவதும் வேதனைக்குரியது.

மண்டல் குழுப் பரிந்துரைகளின்படி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு அளிக்கப்பட்டது (7.8.1990)

வழக்கம்போல உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக அது நடைமுறைக்கு வர மேலும் இரண்டாண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாண்டு கழித்து அளிக்கப்பட்ட தீர்ப்பில்கூட புதிதாக - அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாத பொருளாதார அளவுகோல் என்ற புதிய கரடியை அவிழ்த்து விட்டனர்.

மத்திய அரசில் 27 விழுக்காடு அளிக்கப்பட்டும் மேற்கு வங்கம் போன்ற பொதுவுடைமைக் கட்சியினர் ஆளும் மாநிலத்தில்கூட 27 விழுக்காடு கொடுக்கப்படாத நிலை கண்டிக்கத்தக்கது.

27 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்பட எத்தனிக்கும் கால கட்டத்தில் அப்பொழுது இருந்த பா.ஜ.க. அரசு மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 இலிருந்து 60 என்று உயர்த்தி, ஏற்கெனவே பணியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த உயர்ஜாதியினர் மேலும் ஈராண்டுகள் பணியில் தொடரவும், பிற்படுத்தப்பட்டவர்கள் உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை என்ற சூழ்ச்சியையும் அரங்கேற்றினர்.

இப்பொழுதுகூட மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டோர் 27 விழுக்காடு இடங்களைப் பெற்றிடவில்லை; மிகவும் கேவலமான முறையில் வெறும் 6 சதவிகிதத்துக்கே தள்ளாடிக் கொண்டு இருக்கின்றனர்.

மத்திய தேர்வாணையமோ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டோரின் இடஒதுக்கீட்டில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர்களை பொதுப் போட்டிக்கான இடங்களில் அமர்த்தாமல், அவர்களில் இடஒதுக்கீடு பிரிவுக்குக் கொண்டு போய் 50 சதவிகித இடங்களையும் உயர்ஜாதி ஆதிக்க வர்க்கம் கபளீகரம் செய்து கொண்டு திரிகிறது.

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. கல்வியில் இடஒதக்கீடு கிடைப்பதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற அளவில் அளிக்கப்படும் என்றனர். இப்பொழுதோ அதனை ஆறு ஆண்டுகாலமாக நீடிப்பதற்கான சூழ்ச்சியிலும் இறங்கிவிட்டனர்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு அறிக்கையில் கூறியபடி) பிற்படுத்தப்பட்டோர் சமூகநீதியைப் பெற்றிடப் போராடும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தாலும் ஒன்றுபட்டு போராடும் நிலை எட்டப்படவில்லை. அவரவர்களும் அவர்களின் கட்சிக் கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கான ஓர் இயக்கம் கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதைத்தான் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று ஓர் அகில இந்திய இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

1995 செப்டம்பர் 19இல் டில்லி மாவ்லங்கர் மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைகளில் காணப்படும் அடுத்த கட்ட செயல்பாட்டுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1959 பிப்ரவரி முதல் தேதி முதல் 28 வரை வடநாட்டுக்கு பயணத்தைத் தந்தை பெரியார் (4000 மைல் பயணத்தை சாலை வழியாக) மேற்கொண்டார். ஜான்சி, கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் ஆகியவை அவர் மேற்கொண்ட பயணத்தின் முக்கிய பகுதிகளாகும். அந்தப் பயணத்தில் அன்னை மணியம்மையார் அவர்களுடன் நமது ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அய்யாவுக்கு உதவியாகச் சென்றிருந்தார்.

கான்பூரில் ரிபப்ளிக் கட்சியினர் உருவிய வாளுடன் தந்தை பெரியார் அவர்களுக்கு உணர்வு மிக்க வரவேற்பினைக் கொடுத்தனர். பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்!, பம்மன் பாரத் ஜோடுதோ! (பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு!) என்று முழக்கமிட்டனர்.

அந்த நிகழ்ச்சியிலும் தந்தை பெரியார் அவர்கள் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 52 ஆண்டுகளுக்குப்பின் அதே கோரிக்கையை வாரணாசி யில் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள் வைத்தது சரித்திரத்தின் வினோதமான சுழற்சியாகும்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக் களத்தில் இந்தியாவுக்கும், மத மற்ற சமத்துவத்திற்கு உலக அளவிலும் தேவைப்படும் தலைவர் ஆகி விட்டார். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கான அர்த்தம் இதுதான்!

1 comment:

vidivelli said...

நல்ல ஆழமான அலசலுடன் அரசியல் பதிவு..
வாழ்த்துக்கள்..

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...